
புதுகைத்தென்றல் விருந்தினர் பற்றி ஒரு பதிவெழுதி என்னை தொடர அழைத்திருந்தார்கள். பேசிக்கலி ஐ ஆம் எ சோம்பேறி என்பதால் இத்தனை நாட்கள் ஆகிவிட்டது தொடர!
விருந்துக்குப் போவதென்றால் எனக்கு உள்ள ஒரு அடிப்படை விதி, என்னை ஒரு தேவலோகப் ப்ரஜையாய் விழுந்து விழுந்து கவனிக்காமல் இருந்தால் சரி. அதே போல என் வீட்டிற்கு நீங்கள் வருகிறீர்களா.. நான் உங்களுக்காக என் சுயத்தை விட்டு, ஏதேனும் சம்பிரதாயத்திற்காக செய்ய வேண்டுமென எதிர்பார்க்காதீர்கள்.
உதாரணத்திற்கு எனக்கு அலர்ஜி தரும் விஷயம் உண்பது. “நல்லா சாப்பிடுங்க” என்று அளவிற்கு மீறி தட்டில் போட்டுக்கொண்டே இருந்தால் கடுப்பாக இருக்கும் எனக்கு. எனக்கு நானே பரிமாறிக் கொண்டுதான் சாப்பிடுவேன் என்ற நிபந்தனையோடுதான் சாப்பிடவே உட்காருவேன்!
என் இந்த சில நடவடிக்கைகளெல்லாம் உமாவுக்குப் பிடிக்காது. யாராவது வீட்டுக்கு வந்தா அவங்ககிட்ட பேசறத விட்டுட்டு, இன்னைக்கும் புக்கை கைல வெச்சுட்டு உட்காந்துக்கறீங்க” என்ற வசவை யார் வரும்போதும் வாங்கிக் கட்டிக் கொண்டுதான் இருக்கிறேன். எனை நானாய் என் வீட்டில் இருக்க விடும் விருந்தினர் என்றால் நானும் அவர்களோடு ஒன்றாகி விடுகிறேன்!
இனி புதுகைத்தென்றலின் கேள்விகளும்.... என் பதில்களும்..
1. விருந்தினர் வருகையை எப்படி சமாளிப்பீர்கள்?
வருவதைச் சமாளிப்பதென்றால் வீட்டைப் பூட்டிக் கொண்டு போகலாம். வந்தபின் சமாளிப்பதென்றால்..
எதற்குச் சமாளிக்கவேண்டும் என்ற கேள்வி வருகிறது. என் வீட்டிற்கு வருபவர்கள் எனக்குப் பிடித்தவர்களாகவோ, உமாவிற்குப் பிடித்தவர்களாகவோதான் இருக்கக் கூடும். அவர்களை ஏற்றுக் கொண்டு, அவர்களோடு அளவளாவுவோம்!
ஆனால், இந்த இடத்தில் (இல்லீன்னா கொஞ்சம் தள்ளி..) ஒன்றைச் சொல்ல வேண்டும். சென்றமுறை கும்க்கி வந்த அதே நாளில், பாலராஜன்கீதா குடும்பத்தோடு வந்திருந்தார். எப்படி சமாளிக்க என்று குழம்பிவிட்டேன்! கடைசியில், பாலராஜன்கீதா வெளிநாட்டிலிருந்து எப்போதோ வருபவர் என்று, மதியத்திற்குமேல் அவரோடு கழித்தேன். கும்க்கியிடம் சொன்னபோது “ஒக்கே தோழர். பாருங்க.” என்று பெருந்தன்மையாய் விடைபெற்றது மறக்கமுடியாதது! இதுபோல உள்ளதைச் சொல்லி, சங்கடத்தைத் தவிர்க்கலாம். காலையில் வால்பையனோடு வந்த கும்க்கியுடன் கழித்து, மாலையில் பாலராஜன் கீதாவோடு வேல்பையனை (அலகுமலை முருகன்!) பார்க்கச் சென்றோம்!
2. விருந்தினராக செல்லும்போது நாம் பின்பற்ற வேண்டிய
நற்குணங்கள் எவை?
அவர்கள் வீட்டுச் சூழலுக்கு நம்மை மாற்றிக் கொள்வதைத் தவிர வேறொன்றும் தேவையில்லை. அவர்களையும் நம் கோணத்தில் பாத்தாலே போதும். முக்கியமாக வீட்டு ஆண்களை விட்டுவிட்டு, மனைவி/தாயார் போன்ற பெண்குலங்களின் உணர்வைப் புரிந்து நடக்கவேண்டும். உதாரணத்திற்கு உங்கள் வீட்டில் சாப்பிட்டபிறகு தட்டில் கைகழுவும் பழக்கம் இருக்கலாம். ஆனால் விருந்தினர் வீட்டிற்குச் சென்றால் அவர்களே சொன்னாலும், ‘பரவாயில்லைங்க’ என்று தட்டைக் கொண்டுபோய் சிங்க்கில் போட்டுவிட்டு, கைகழுவி வந்தால் உத்தமம். தட்டில் கைகழுவுவதும், அந்தத்தட்டை வீட்டுப் பெண்கள் கொண்டு செல்வதும் எனக்குப் பிடிக்காத ஒன்று!
3. நம்மை கேட்காமல் ஃபிரிஜிலிர்ந்து எடுத்து தின்னும்
விருந்தினரை என்ன செய்யலாம்?
ஒன்றும் செய்யவேண்டாம். அவர்கள் விருந்துக்கு வரும்போது ஊசிப்போன வடை அல்லது ஊசி உள்ளே போன வடை போன்ற ஐட்டங்களை வைத்துவிடுங்கள். (ரொம்ப அவஸ்தைப்பட்டிருப்பீங்க போல!)
சீரியஸா சொல்லணும்ன்னா, ஃப்ரிட்ஜை லாக் பண்ணி வெச்சுடறது பெட்டர். ‘எனக்கு யாராவது ஃப்ரிட்ஜ்ஜை அடிக்கடி தொறந்து எடுக்கறது பிடிக்காதுங்க’ என்றோ.. இருக்கவே இருக்க்கிறோமே இ.வா.கணவர்கள்.. எங்களைச் சுட்டி, ‘அவரு பாட்டுக்கு ஃப்ரெண்ட்ஸ்னு கூட்டீட்டு வருவாரு. கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாத ஆளுக. அவனுக பாட்டுக்கு வந்து எடுப்பாங்க. அதுக்காக லாக் பண்ணி வெச்சிருந்து பழகிப்போச்சு’ என்றோ சொல்லி ‘நீங்க அப்படியெல்லாம் இல்லியே’ என்றும் சொல்லிவிடலாம். குழந்தைகள் என்றால் அவர்கள் பெற்றோர் முன்னிலையிலேயே ‘இது தப்பு’ என்று அறிவுறைக்கலாம். அதையும் மீறி செய்பவர்களிடம் முகம் காட்டி உணர்த்தலாம். (பெண்கள் அதில் கில்லாடிகள்!)
4. விருந்தினராக தங்க வருபவரிடம் நீங்கள் என்ன
எதிர் பார்ப்பீர்கள்?
கேஷாக இருந்தால் நலம். செக் என்றாலும் ஓக்கே. வெளியூர் செக் என்றால் ரூ.20/- கூட.
5. விருந்தினர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று
எதிர் பார்ப்பீர்கள்?
சிலர் இருக்கும்போது அவர்கள் வீட்டில் இருப்பது போல ஃப்ரீயாக இருக்கட்டும் என்றும், சிலர் அடுத்தவன் வீட்டில் இருப்பது மாதிரியா இருக்காங்க’ என்று அங்கலாய்ப்பாக நினைப்பதுபோலவும் நடந்துகொள்வார்கள்.
என்னைப் பொறுத்தவரை என் அலைவரிசையை ஒத்த நண்பர்களோ, உறவுகளோதான் வீட்டிற்கு விருந்தினராய் வருகிறார்கள் என்பதால் நோ ப்ராப்ளம்!
ஒரு முக்கியக் குறிப்பு: விருந்தினர்களது உபத்திரவங்களை மனைவிகளிடமோ, தாயிடமோ கேட்டால்தான் உண்மையான பலவிஷயங்கள் தெரியவரும். ஆண்கள் அவர்கள் நினைத்த, அவ்ர்களுக்குப் பிடித்த விருந்தினர்களை வீட்டிற்கு கொண்டு வந்து, மற்றவர்களைக் கொடுமைப்படுத்துவதில் சமர்த்தர்கள் என்பது என் கருத்து!