Monday, February 9, 2015

சாருவுடன் ஒரு சந்திப்பு

12வது புத்தகக் கண்காட்சி திருப்பூரில் இனிதே நிறைவுற்றது. திருப்பூர் போன்ற ஒரு தொழில்நகரத்தில் வாசிக்கும் பழக்கம் மிக மிக அவசியமாகிறது. எந்நேரமும் தொழில் குறித்த சிந்தனையும், கொஞ்சமும் ஓய்வில்லாத மனவோட்டமும் கொண்ட மனிதர்களிடையே வாசிப்பு குறித்த உணர்வை, ஒவ்வொரு வருடமும் புத்தகக் கண்காட்சி மூலம் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் பின்னல் புத்தக நிலையத்திற்கு பாராட்டுகளும், அன்பும்.

***

நாசர், மனுஷ்யபுத்திரன், பூமணி, சாருநிவேதிதா என்று இந்த வருடம் விஐபிக்களின் வருகையால் மகிழ்வுற்றனர் வாசகர்கள்.
“நாம மீட் பண்றது இதான் மொத டைம்ல?” என்றார் சாருநிவேதிதா, என்னை நண்பர் அவரிடம் அறிமுகப்படுத்தியபோது. நான் ஏதேதோ உளறினேன் என்றாலும் இதுதான் முதல்முறை அவரை சந்திப்பது. ஆனால் அப்படி நினைக்காமல் இருக்க வைத்தது அவருடன் உரையாடிய நிமிடங்கள்.நான் அப்படி ஒன்றும் பெரிய ஆளில்லையெனினும்,
“ஓ.. நீங்கதான் அவரா?” என்று ஒரு கெத்தாகக் கேட்டுவிட்டு போய்விடாமல், ஞாபகம் வைத்திருந்து உரையாடிய சாரு நிச்சயம் வித்தியாசப்பட்டுக் கவர்ந்தார்.


***திருப்பூரின் எழுத்தாளர் லெனினின் பங்களிப்பு நிச்சயம் குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஸ்டால் போட குழி தோண்டிய நாளிலிருந்து, முடியும் நாள் வரை அவர் வீட்டுக் கல்யாணம் போல பாவித்துக் கொண்டிருந்தார். அறிந்த முகங்களை வரவேற்பது, விருந்தினர்களை உபசரிப்பது, கூட்டம் எத்தனை என்று அவ்வப்போது மேடை முன்னிருக்கும் பார்வையாளர்களை எண்ணிப் பார்த்துக் கொள்வது, யாருக்காவது ஏதாவது உதவி என்றால் முகத்தைப் பார்த்தே, ‘என்னாச்சுங்க’ என்று ஓடிப் போய்க் கேட்டு உதவுவது என்று அனைத்தனையும் புன்னகை மாறாத முகத்தோடு செய்து கொண்டிருந்தார்.

சனிக்கிழமை சாருவை காரில் அனுப்பிவிட்டபிறகு,  எழுத்தாளர்கள் பாரதி சுப்பராயன், செல்வகுமார் பழனிச்சாமி மற்றும் லெனினுடன் டின்னர். சுவையான அரட்டையோடு சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், லெனின் மட்டும் கொஞ்சம் சுரத்தில்லாமல் இருப்பதைக் கண்டு கேட்டேன்:

“என்னாச்சுங்க.. என்னமோ மாதிரி இருக்கீங்க?”

“ஆமா பரிசல். கொஞ்சம் வருத்தமா இருக்கு”

“ஏன்?”

“கூட்டம் கொஞ்சம் கம்மி இன்னிக்கு. என்னான்னு தெர்ல. அதுபோக நாளையோட கண்காட்சி வேற முடியுது. இனி அடுத்த வருஷம்தான்” என்றார்.

இப்படி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் கண்காட்சி குறித்த சிந்தனையோடேதான் திரிந்தார்.

**

ண்பர் கவின் ஆசிரியராய் இருக்கும், “பாஷோ’ ஹைக்கூ இதழை திங்களன்று மனுஷ்யபுத்திரன் வெளியிட்டார். போலவே சனிக்கிழமை ட்விட்டர் நண்பன் “செல்வு எஃபெக்ட்” புகழ் செல்வா அழைத்தான்.

“அண்ணே.. எங்கிருக்கீங்க?”

“ஆஃபீஸ்ல. என்னாச்?”

“என்னோட எலி நாவலை சாரு கொஞ்ச நேரம் முந்தி வெளியிட்டுட்டார். இங்க வருவீங்களா?”

“கொஞ்சநேரத்துல அங்கிருப்பேன்” என்று சென்றேன்.

வெளியிட்ட உடனே என்னிடம் சொல்ல வேண்டும் என்று அவன் நினைத்ததற்கு ஒரு காரணம் உண்டு. முன்னுரையை எழுதிக் கொடுத்திருந்தேன். என் புத்தகத்திற்கும், இதற்கும் ஒருசில ஒற்றுமைகள் இருப்பதாய்ப் பட்டது. முக்கியமான ஒற்றுமை எழுத்துப் பிழைகள். கிருஷ்ணகுமாரை, கிருஷ்ணக்குமாராக்கியது உட்பட சில. இதை ஜாலியாகத்தான் சொல்கிறேன் என்பதற்காக இங்கே ஒரு ஸ்மைலியை கற்பனை செய்துகொள்ளுங்கள். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் புத்தகத்தைப் பார்த்ததும் ஏற்கனவே வேறொருவர் மூலமாக இந்தப் புத்தகம் குறித்து அறிந்ததையும், புத்தகத்தின் ஃபாண்ட் உட்பட சிலது குறித்தும் அவர் உரையாடியது செல்வாவுக்கு மகிழ்ச்சியளித்திருக்கும் என அவதானிக்கிறேன்.

விஜய்யின் அடுத்தபடம் புலி. வடிவேலுவின் அடுத்தபடம் எலி என்கிற சூழலில் இந்த நாவல் வந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. வாங்கி, ஊக்குவிக்குமாறு கே.கொ.

**

னவரி 30லிருந்து ஃபிப்ரவரி 8 வரை பத்து நாட்கள் நடைபெற்றாலும், நாசர் வந்த - கடந்த - ஞாயிறுதான் கூட்டம் என்றார்கள். சினிமா பிரபல்யம். இது குறித்து லெனினுடன் பேசிக் கொண்டிருக்கையில், ‘சினிமால மாஞ்சு மாஞ்சு புக் படிக்கற ஆளுக நிறைய இருக்காங்க. அடுத்தவாட்டி அவங்களையெல்லாமும் கூப்டணும்’ என்று பேச்சு வந்தது. ராஜேஷ், கரு. பழனியப்பன், கிட்டி, மிஷ்கின் என்று பல பேர் அடிபட்டது.

அடுத்தவருடத்திற்கு இன்னும் 365 நாட்களிருக்கிறது. அதற்குள் எப்படியாவது நயன்தாராவோ, நமீதாவோ நிறைய தமிழ்ப் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

சொல்லவில்லை.

**

5 comments:

Unknown said...

எப்படி திருப்பூர் வர்றதுன்னு நெனச்சேன், அந்த குறை தீந்துச்சு. நீங்க பாக்கற உலகத்த உங்க விரல்கள் மூலமா நாங்களும் பாக்கறோம். உங்க உலகம் ரொம்பவே அழகுங்!! நயன், நமீதா எல்லாரும் இலக்கியத்த வளக்கணுங்கற உங்க எண்ணம் பாராட்டுக்குரியது. Ahem!! :-)

Ravikumar Tirupur said...
This comment has been removed by the author.
Ravikumar Tirupur said...

புத்தக கண்காட்சிக்கு வரமுடியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டேன். உங்க எழுத்து காட்சிகளை கண்முன் நிறுத்திவிட்டது. லெனின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

திருச்சிற்றம்பலம் நிவாஸ் said...

பொருளை தேடி ஓடுகின்ற ஊரில் புத்தகத்தை தேடி ஓடும் மக்களும் இருகிறார்கள் என்று உணரவைத்த திருவிழா ....

பொன்.பாரதிராஜா said...

அப்படியே படிக்க வேண்டிய புத்தகங்களின் லிஸ்ட் ஒண்ணு கொடுத்திருக்கலாம் பரிசல்...