Saturday, June 8, 2013

எதிக்ஸ்

ரண்டு வருடங்களிருக்கும் இது நடந்து. பிரபல நகைக்கடை. ‘காசு சேர்த்த ஒரே வழி, கைல கொஞ்சம் காசு இருந்தா, ஒரு கிராம், ரெண்டு கிராம்ன்னு தங்கக்காசா வாங்கி வெச்சுடு. உனக்கே தெரியாம பவுனு சேரும்’ என்று ஒரு நலன்விரும்பி சொன்ன புதிது. அந்த மாதம் ஏதோ கையில் காசு மிச்சமாக, ஒரு கிராம் தங்கக்காசு (Gold Coin) வாங்கச் சென்றிருந்தேன். ஆர்டர் சொன்னதும், கொண்டு வந்து காட்டி ‘பேக் பண்ணிடவா?” என்று கேட்டார். நான் காசையும் கொடுக்க,

“கொஞ்ச நேரம் உட்காருங்க. பில்லோட காய்னை கொண்டு வரேன்” என்று அமரச் சொன்னார்.

நான் இன்னொருவரிடம் மேலாளரைப் பார்க்க வேண்டும் என்றேன். அருகே இருந்த இன்னொருவர் “சொல்லுங்க சார்.. நான்தான் மேனேஜர்” என்றார்.

“சார்.. உங்க கடை விளம்பரம் பல இடங்கள்ல பார்க்கறேன். வீட்டுச் சுவத்துல, வழில ஹோர்டிங்ஸ்ல அங்க இங்கன்னு இருக்கு. நல்லா இருக்கு சார்”

“தேங்க்ஸ்ங்க” என்றார் அவர்.

“இந்த வீட்டு சுவத்துல எல்லாம் எழுதுவீங்கள்ல.. அந்த வீட்டுக்காரங்க ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா சார்?” - கேட்டேன்.

“நீங்க வேற.. அனுமதி இல்லாம எழுத முடியுமா? ஒரு வருஷத்துக்கு இவ்வளவுன்னு காசு குடுத்துதான் சார் விளம்பரம் பண்ணுவோம்..”

“ப்ச்.. சும்மா இருக்கற செவுத்துல அழகா விளம்பரம் பண்றீங்க.. அதுக்கு காசு வேற குடுப்பீங்களா? எதுக்கு சார்?”

“எதிக்ஸ்னு ஒண்ணு இருக்குல்ல சார்... அப்டிலாம் நாங்க பண்ண மாட்டோம். சில சமயம் NH ரோட்ல சும்மா எதாச்சும் குட்டிச்சுவர் இருந்தாக்கூட அதோட சொந்தக் காரங்க ஆரு, என்ன, இல்ல கவர்மெண்டோடதான்னு விசாரிச்சு அனுமதி வாங்கி பணம் குடுத்துதான் விளம்பரம் பண்ணுவோம்..”

“ஓ.. சரி சார்.. அப்ப இந்த மொட்டை மாடில ஹோர்டிங்க்ஸ்லாம் வெக்கறீங்களே.. அதுக்கும் காசு தருவீங்களா?”

“நிச்சயமா.. அதுக்குதான் அதிக காசு கேட்பாங்க”

“என்ன சார்... ரெண்டு இரும்புக் கம்பி மொட்டைமாடில நிக்கப்போவுது. அதுக்குமா காசு குடுப்பீங்க?”

மீண்டும் அந்த மேலாளர் எதிக்ஸ் பற்றி வகுப்பெடுத்தார். பிறகு மெதுவாக, “நீங்க ஏன் சார் இவ்ளோ விசாரிக்கிறீங்க? உங்களுக்கு சொந்தமான வீடோ எதாவதோ மெய்ன் இடத்துல பப்ளிக் பார்வை படற மாதிரி இருக்கா.. இருந்தா சொல்லுங்க” என்றார்.

இதற்குள் அந்த கோல்ட் காய்ன், சின்ன, சிவப்பு டப்பாவில் பேக் செய்யப்பட்டு வந்தது. நான் மெதுவாக அந்த டப்பாவைத் திறந்து காய்னை எடுத்து மேலாளரிடம் காட்டினேன்..

“இங்க பாருங்க சார்.. இந்த Gold Coinஐ நான் காசு குடுத்து வாங்கிருக்கேன். இப்ப இது எனக்குச் சொந்தம். எனக்குச் சொந்தமான இந்த காய்ன்ல பெரிசா உங்க எம்பளம்லாம் போட்டு சுத்தி “_________________ மாளிகை”ன்னு உங்க கடை பேரை விளம்பரம் பண்ணீருக்கீங்க? எவ்ளோ காசு தருவீங்க எனக்கு?” என்றேன்.

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமேல் Gold Coin வியாபாரமே கிடையாது... மேலாளர் முடிவு செய்து விட்டதாக தகவல்... ஹிஹி...

Sara Durai said...

தம்பி டீ இன்னும் வரல ஹாஹாஹாஹா

middleclassmadhavi said...

Ini plain gold coin thaan!! :-)))

மாதேவி said...

ஹா...ஹா...

Coin ஐந்து ரூபாய் குறைத்து தரப்படும்.:)))

s suresh said...

அடாடா! என்ன அறிவுப் பூர்வமான கேள்வி? அப்புறம் எப்படி தப்பிச்சு வந்தீங்க?

முரளிகண்ணன் said...

:-))))

Madhavan Srinivasagopalan said...

எழுதப் பட்ட(துருத்துக் கொண்டு இருந்த) எழுத்துக்கள், தகுந்த மிஷின் மூலம், நீக்கப்பட்டு (எடை குறைந்த) காசினை பெற்று தனது உரிமையை நிலை நாட்டிய அண்ணன் பரிசல்காரான் வாழ்க.

amas said...

உங்க படம் frame போட்டுக் கடையில் மாட்டி வைத்திருப்பதாகக் கேள்வி!

amas32

Sanyaasi said...

பரிசல்காரன் என்ற பேருக்கெல்லாம் பெட்ரோமாக்ஸ் காயின் தர்றதில்லை என்று சொல்ல முடியுமா? காசாச்சே!