Tuesday, May 21, 2013

கொடைக்கானல் - ஒரு பார்வை

மூன்று நாள் பயணமாக கொடைக்கானல் குடும்பத்துடன் சென்று வந்தேன். சில பகிர்வுகள்:


நண்பர்கள் லெனின், (http://www.facebook.com/lenin.mirni)  யுவராஜ் (http://www.facebook.com/Onely1Yuvaraj) – இருவரும் இல்லையேல் இந்த சுற்றுலா சாத்தியமில்லை. கடும் பொருளாதாரச் சிக்கல்களுக்கிடையேயும், ஹாஸ்டலிலிருந்து வந்திருக்கும் மகள்களுக்காக இப்படி ஒரு திட்டம் உருவானபோது இருவரும் உதவினர். ஒருத்தர் மகிழ்ந்து, மகிழுந்து அளித்தவர். இன்னொருவர் ஸ்டெர்லிங் ரிசார்டில் தமக்கிருந்த அறையை, எனக்கு ஒதுக்கித் தந்தவர். நான் முதல்வரானால் கார் தந்தவரை போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், அறை ஒதுக்கியவரை சுற்றுலாத்துறை அமைச்சராகவும் ஆக்குவதாக வாக்குறுதி அளித்திருக்கிறேன்.

 • மே மாதம், இரண்டாவது வாரம், இதுபோன்ற மலைவாசஸ்தலங்களுக்குச் செல்ல உகந்த காலம். ‘வெயில் கொடுமையா? அரை கிலோ கிடைக்குமா?’ என்று வினவுகிறது வெதர்.
 • எந்தக் கடையிலும் ப்ளாஸ்டிக் கவர்கள் இல்லை. எத்தனை பெரிய பொருள் வாங்கினாலும் அந்தந்த சைஸுக்கேற்ற பேப்பர் கவர்கள்தான். அங்கிருக்கும் பாலிதீன் பைகளெல்லாம் சுற்றுலா வந்தவர்கள் கைங்கர்யத்தினால் கிடப்பவைதான்

 • அதுவும் ஓரிடத்தில் வனத்துறையினர் நின்று ஒவ்வொரு வாகனமாக, ‘ப்ளாஸ்டிக் கவர், வாட்டர் பாட்டில் இருந்தா இங்கயே போடுங்க’ என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள். மலைபோல குவிந்து கிடக்கிறது அங்கேயும். ஆனாலும் – அதைத்தாண்டிப் போனாலும் குப்பைகளை வெளியில் வீசியபடிதான் செல்கின்றனர் மாக்கள். (எழுத்துப் பிழை அல்ல) 

 • போக்குவரத்துக்கு காவல்துறைக்கு இங்கிருந்தவாறே சல்யூட்டிக் கொள்கிறேன். அருமையான பணி. நெரிசல் மிகுந்த இடங்களிலெல்லாம் பைக்கில் சென்றபடியும், மைக்கில் பேசியபடியும் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். நாங்கள் ஏரியை சைக்கிளில் சுற்றிக் கொண்டிருந்தபோது, ஜீப்பில் வந்த ஒரு பெரியஅதிகாரி நின்றிருந்த போலீஸிடம், ‘அந்தக் காரை ஏன் அங்க பார்க் பண்ண விட்டீங்க?’ என்று வினவ, ‘இப்ப எடுத்துடுவாங்க’ என்று பதிலளித்துக் கொண்டிருந்தார் அவர்.

 • சுற்றுலா முழுவதும் என் மகள்களின் அட்டகாச கமெண்ட்களை ரசித்தபடியே வந்தேன். ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ என்ற போர்டைப் பார்த்து மீரா, ‘அப்ப குண்டு பட்டா?’ எனக் கேட்க மேகா டக்கென, ‘குண்டு பட்டால் உண்டு சாவு’ என்றாள். போலவே, ‘மேல் நோக்கி வரும் வாகனங்களுக்கு வழிவிடவும்’ என்றிருந்ததைப் பார்த்து, ‘அப்ப ஃபீமேல் நோக்கி வந்தா வழிவிடக்கூடாதா? மேல மோத விடணுமா?” என்றதும் நான் அங்கிருந்தே குதிக்கலாமா என்று யோசனையை 1782 மீட்டர் என்ற போர்டைப் பார்த்து கைவிட்டேன்.

 • பொது இடங்களில் அவரவர் தாய்மொழிகளில் உரையாடிக் கொண்டிருக்கும் பலரும், வேறொரு குடும்பத்தினர் அருகில் வரவும், ‘ஹேய் சச்சு…. டோண்ட் ரன் ஐ ஸே..’ என்று பீட்டருக்குத்தாவுகிறார்கள். தமாஷாக இருக்கும் இந்த ‘மொழி விளையாட்டை’ நான் பல இடங்களில் ரசிக்க ஆரம்பித்தேன்.

 • பசுமைப் பள்ளத்தாக்கில் (சூசைட் பாய்ண்ட்) போகும் வழியிலிருந்த கடையொன்றில் அழகான 3 ஜோடி கம்மல், மற்றும் நான்கு கண்ணாடி கங்காரு பொம்மைகள் வாங்கினோம். மேலே சென்று ஃபோட்டோ எடுக்க வேண்டி, அந்தப் பாக்கெட்டை, ஓரிடத்தில் வைக்க, கண் இமைக்கும் நேரத்தில் ஆஞ்சநேயர் வந்து அள்ளிக் கொண்டு போனார். கம்பித்தடுக்கு வழியே, அந்தப் பாக்கெட் பிரித்து ஒவ்வொன்றாய் அது தூக்கிப் போடுவதைத்தான் காணமுடிந்தது. வந்து அந்தக் கடைக்காரரிடம் சொல்லி, ‘அதே போல இன்னொரு செட் குடுங்க’ என்று கேட்க, அவர் மனசு கேட்காமல் வேறொரு வழியாகச் சென்று, குரங்கார் பிய்த்துப் போட்டிருந்ததை ஆராய்ந்து கம்மல்களையும், ஒரே ஒரு கங்காருக் குட்டிபொம்மையையும் எடுத்துத் தந்தார். மற்ற இரண்டும் உடைந்திருந்த்து. ஒன்று காணவில்லை. இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், எத வாங்கறதா இருந்தாலும், சுற்றிப்பார்த்துவிட்டு, காருக்குப் போகும்போது வாங்கிச்செல்லல் நலம் பயக்கும்!

 • மற்ற கடைகளைவிடவும், தோடு, கம்மல், செய்ன் போன்றவை விற்கும் கடைகளுக்கு நல்ல மவுசு. அதற்கேற்ப நல்ல டிசைன்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது. என் சகதர்மிணி, அழகான டிசைனில் கம்மல் சில வாங்கி (வெறும் 10 – 20 ரூபாய் மட்டுமே) தொடர்ச்சியாக மூன்று நாட்களும் ஹாட்ரிக் அடித்து, மூன்று கம்மல்களைத் தொலைத்து – அதுவும் குறிப்பாக வலது கம்மல் மட்டும் - லிம்கா புக் ஆஃப் ரெகார்டில் இடம்பிடித்தார்.

 • வழி சொல்பவர்கள், மிகப்பொறுமையாக சரியாகச் சொல்கின்றனர். அதுவும் ஒரு காவல்துறை நண்பர் சொன்னது சூப்பர். ‘சார்.. இப்படியே போனா என்ன வரும்?’ என்றதற்கு ‘உங்க வீடு வரும்’ என்றார். பிறகு சிரித்தபடி ஒவ்வொரு இடமாகச் சொன்னார். ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், காரில் எட்டிப்பார்த்து எத்தனை பேர் என்ன வயதினர் இருக்கின்றனர் என்பதைக் கணித்து, அந்த வழியாப் போனா கார் ஏர்றது கஷ்டம்சார். ரொம்ப மேடு. இப்படிச் சுத்திப் போங்க’ என்பதுகூட சொல்கின்றனர். செட்டியார் பார்க் போகும் இடத்தில், அவர்கள் சொன்னது கேட்காமல் போய்ப் பார்ப்போமே என்று போய், மேடேற முடியாமல் ரிவர்ஸில் வந்து மீண்டும் செலுத்தவேண்டியதாய்ப் போயிற்று.

 • ‘செட்டியார் பார்க்’ – அங்கிருக்கும் ஒரு செட்டியார் அரசுக்கு இனாமாகக் கொடுத்த இடத்தில் அமைந்துள்ள பார்க். அங்கே பணிபுரியும் நான்கைந்து பேரிடம் விசாரித்ததில், ‘பேர் தெரியலைங்க. செட்டியார்னுதான் சொல்வாங்க’ என்றார்கள். ‘ஓ.. தமிழகமே…. பேரை விடுத்து சாதியை அடையாளமாகச் சொல்கிறார்களே’ என்று நான், லைட்டாக பொங்க ஆரம்பித்த சமயம் அங்கே பணிபுரியும் மற்றொரு பெண்மணி வந்து, ‘முத்தையாங்க அவர் பேர்’ என்றார். எனக்கு கவியரசர் ஞாபகத்துக்கு வந்தார்.

இறுதியாக ஒரு வேண்டுகோள்:

 • இறை நம்பிக்கை இல்லாதவர்கள் கோவிலுக்குச் செல்வதில்லை. அதுபோல, இயற்கை மீது நம்பிக்கை இல்லையேல் இதுபோன்ற இடங்களுக்கு வராதீர்கள். இங்கு வந்து ப்ளாஸ்டிக் கவர்கள், தண்ணீர் பாட்டில்களை எறிவதற்கு வருவீர்களானால், அதற்குப் பதிலாக உங்கள் வீட்டிலேயே விடுமுறையை, டிவியில் சுறா, ஆழ்வார் பார்த்தபடி கழிக்கவும்.

நன்றி!

11 comments:

Pulavar Tharumi said...

'இயற்கை மீது நம்பிக்கை இல்லையேல் இதுபோன்ற இடங்களுக்கு வராதீர்கள்' - அருமையான கருத்து!

KSGOA said...

Nallathoru anubhava pakirvu....pl.wrire regularly....sorry tamil font work pannala..

திண்டுக்கல் தனபாலன் said...

மலர் கண்காட்சி எப்படி இருந்தது...? முடிவில் சிறப்பான கருத்து...

உங்கள் வாக்குறுதி நிறைவேறட்டும்... ஹிஹி.. வாழ்த்துக்கள்...

Anonymous said...

உங்கள் கருத்து ஒவ்வொன்றும் சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைக்கின்றன. அருமை. ஒவ்வொன்றும் நெத்தியடி.

ezhil said...

கடைசியா நச்சுன்னு சொல்லியிருக்கீங்க ...அருமையான கருத்து...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

12 மே அன்று நானும் கொடைக்கானல் சென்றிருந்தேன்.பொருள் வாங்கிவிட்டு கவர் கொடுங்க என்று கெஞ்சிக் கொண்டிருந்தார் நண்பர் ஒருவர்..
பயணக் கட்டுரை எழுதாமல் பயணக் குறிப்பாக எழுதியது நன்று.

”தளிர் சுரேஷ்” said...

கடைசியாக சொன்ன வரிகள் அருமை! இயற்கையை பாழ் படுத்த நாம் யார்? அருமையான பதிவு!

ராமுடு said...

Good one.. Hope you had great time with your family. Like ur kid's comments.. Awesome. Next parisalkaari is ready

Advocate P.R.Jayarajan said...

எல்லா வரிகளும் நல்ல கருத்துகளை, சேதிகளை தாங்கியுள்ளன... வாழ்த்துகள்....!

இரசிகை said...

nice

நாடோடிப் பையன் said...

நல்ல பதிவு. நன்றி.