Wednesday, September 12, 2012

தைரியலட்சுமி



அன்றைக்கு வியாழக்கிழமை. (இப்படித்தான் ஒரு பதிவை ஆரம்பிக்கவேண்டும். அது என்ன தேதி என்றோ அன்றைக்கு வியாழன்தானா என்றோ யாரும் சரிபார்த்து நோட்டீஸ் அனுப்ப முடியாது.)

அலுவலக வேலையாக, வெளியில் சென்றுவிட்டு வந்துகொண்டிருந்தேன். மணி, மாலை நான்கு இருக்கும்.

சாலையில் ஓரத்தில் நான்கைந்து பள்ளிக் குழந்தைகள் விளையாடியபடி சென்று கொண்டிருந்தனர். அதில் ஒரு குட்டிப்பையன் மட்டும், அந்த நான்கைந்து பேருக்கு முன்னால் சென்று கொண்டிருந்தான். தோளில் ஒரு பக்கமாக சாய்ந்த பள்ளிப்பையுடன் விளையாட்டாக தத்தக்கா – பித்தக்கா என்று ஓட்டமுமில்லாமல், நடையுமில்லாமல் ஒரு மாதிரி போய்க் கொண்டிருந்தான். அவனைக் கடந்து பைக்கை செலுத்தியபின், முதுகில் பள்ளிப் பையும், அவன் சாய்ந்த நடையும் ஒரு மாதிரி கவரவே பைக்கை நிறுத்தி ஒரு ஃபோட்டோ எடுக்கும் ஆசை வந்தது. பைக்கை நிறுத்தினேன்.

அவன் என்னைத் தாண்டியதும், ஃபோட்டோ எடுப்பதற்காக, ஃபோனை கையிலெடுத்து வைத்துக் கொண்டேன். ரிவர்வ்யூ மிர்ரரில் அவனும், அவனுக்குப் பின்னால் பிற குட்டீஸும் வருவது தெரிந்தது. நான் ஃபோனில் கேமராவை ‘ஆன்’ செய்துவிட்டு காத்திருந்தேன். இரண்டு, மூன்று நிமிடங்களாகியும் அவனோ, அவர்களோ வராதது கண்டு ரிவர்வ்யூ மிர்ரரைப் பார்த்தேன். அவர்களெல்லாருமே நின்று கொண்டிருந்தது தெரிந்தது.

திரும்பிப் பார்த்தேன்.

என் பைக்கிலிருந்து, பத்தடி பின்னால் அந்தப் பையன் நின்று கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தவர்களும், ஓடிவந்து அவனோடு நின்று கொண்டிருந்தனர்.

அந்தக் கூட்டத்தில் பெரியவளான ஒரு சிறுமி – பத்து வயதிருக்கும் – ஓரடி முன்னால் வந்தாள்.

“அண்ணா.. வேணாம்ணா.. போயிருங்க. எங்க வீடு அதோ, அங்கதான் இருக்கு. அப்பாகிட்ட சொல்லீருவேன்” என்றாள். குரலில் கொஞ்சம் பயமும், கொஞ்சம் தைரியமும் கலந்திருந்தது.

அப்போதுதான் எனக்குப் புரிந்தது.. நான் ஏதோ அவர்களைக் கடத்தவோ வேறு ஏதோ செய்யவோ வந்திருக்கும் சமூக விரோதக் கும்பலில் ஒருவனாக நினைத்துத்தான், அவர்கள் அப்படி நின்றிருக்கிறார்கள் என்பது.

நான் பைக்கை விட்டு இறங்கினேன். சடாரென, - சாலையில் எனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த அவர்கள் - ஒரு விதமாக கூக்குரலிட்டபடி சாலையைக் கடந்து, அந்தப் பக்கம் போய் நின்றனர்.

“ஒண்ணுமில்ல பாப்பா. ஒரு ஃபோட்டோ எடுத்துக்கறேன். பையன் நடந்துவந்தது அழகா இருந்துச்சு.. அதான்..” என்றேன் நான்.


அந்தப் பெண் மறுபடி, முன்னைவிட சற்றே உரத்தகுரலில் “வேணாம்ணா… போய்டுங்க. எங்க சித்தப்பா போலீஸ்ல இருக்காரு. சொன்னேன்னா அவ்வளவுதான்” என்றாள்.


கொஞ்சம் சுவாரஸ்யம் உந்தவே, சில அடிகள் அவர்களை நோக்கி எடுத்து வைத்தபடி ‘இல்ல பாப்பா..’ என்று சொல்ல அவர்கள் கோரஸாக ‘ஆஆஆஆஆஆஆஆஆஆ’ என்று கத்தினார்கள்.

அவ்வளவுதான்.

நான் நின்றிருந்த இடத்தைக் கடந்து சென்ற ஒரு பைக், அந்தக் கூக்குரல் கேட்டு திரும்பி வந்தது. பைக்கில் இருவர் இருந்தனர்.

வந்து, வண்டியை நிறுத்தியதும் “ஏன்ம்மா.. என்னாச்சு” என்றார் பைக்கை ஓட்டி வந்தவர். அவர் மீசை கொஞ்சம் பயமுறுத்தியது. பின்னால் அமர்ந்திருந்தவர் கொஞ்சம் இளமையாக இருந்தார்.

“மாமா.. இவரு வண்டியை நிறுத்தீட்டு எங்களை என்னமோ பண்ண வர்றாரு. போகச் சொன்னா கேட்க மாட்டீங்கறாரு..” என்று புகார் செய்தாள் அந்தப் பெண்.

பில்லியன் ஆசாமி, “டேய்.. என்னடா.. யார் நீ?” என்றான் எடுத்ததுமே.

“ஹலோ.. மரியாதையா பேசு. சும்மா ஒரு ஃபோட்டோ எடுக்கறதுக்காக நிறுத்தினேன். என்னமோ சின்னப் பொண்ணு சொல்லுதுன்னு வாய்க்கு வந்தபடி பேசற?” என்றேன் நானும் கொஞ்சம் எகிறலான குரலில்.

வண்டி ஓட்டியவர் போன ஜென்மத்தில் கோடுபோட்ட ஜமுக்காளத்தில் அமர்ந்து பஞ்சாயத்து பண்ணிப் பழக்கட்டவராக இருக்க வேண்டும். அவனைப் பார்த்து, ‘ஏய்.. இப்படித்தான் எடுத்த உடனே மரியாதையில்லாம பேசுவியா?” என்று அதட்டிவிட்டு, என்னை நோக்கி, ‘தம்பி எங்கிருந்து வர்றீங்க?” என்றார்.

நான் சொல்ல வாயெடுக்கும் சமயத்தில்தான் கவனித்தேன். அந்தக் குழந்தைகளிடம், பாப்பா எதுவோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். அதில் மிகவும் சின்னவனான – நான் ஃபோட்டோ எடுக்க நினைத்தவனின் – கையை கெட்டியாகப் பற்றிக் கொண்டிருந்தாள். ஒரு நொடியில் என்ன சமிக்ஞை செய்தாளோ, ஐந்தாறு பேரும் ஓட்டப்பந்தயத்திற்கு போகும் வீரர்கள் போல சடாரெனப் புறப்பட்டு, படு ஸ்பீடாக அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர். அப்போதும், அந்தச் சிறுவனை ஒரு கையில் பற்றியபடி, பள்ளிப் பை முதுகில் ஆட அவள் ஓடிய விதத்தை புகைப்படமாக்க கை துடித்தது.


கொஞ்ச தூரம் போனபிறகு அவள் திரும்பிப் பார்த்தாள்.  ஓட்டத்தை நிறுத்திவிட்டு,  மூச்சு வாங்க வேகவேகமாக நடக்க ஆரம்பித்தாள். எதையோ சாதித்துவிட்டதைப் போல திரும்பி நாங்கள் நிற்குமிடத்தை ஒரு வெற்றிப் பார்வை பார்த்தாள்.

நான் என் ஐ.டி. கார்டை பஞ்சாயத்துப் பேச வந்தவர்களிடம் காட்டி, ‘ஒண்ணுமில்லைங்க. குட்டீஸ் ஸ்கூல் பேகோட போனது பார்க்க நல்லா இருந்துச்சு. ச்சும்மா ஃபோட்டோ எடுக்கலாம்னு நிறுத்தினேன். அதுக்குள்ள அந்தப் பாப்பா கத்தி, கூச்சல் போட்டு..” அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தாலும் ஒரு புறம் அந்தச் சிறுமியின் செய்கை என் மனதை ஆக்ரமித்தபடியே இருந்தது. பைக் ஓட்டி, “இந்தக் காலத்துப் பசங்க எவ்ளோ வெவரமா இருக்காங்க பாருங்க தம்பி…” என்று ஆச்சர்யப்பட்டபடி பைக்கை ஸ்டார்ட் செய்தார்.

நான் அவரிடம் சிரித்தபடி விடை பெற்றேன்.


-------

போனவாரத்தில் ஒருநாள். எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளி ‘சார் வெளில என் மனைவி, குழந்தை வந்திருக்காங்க.. கேண்டீன் வரைக்கும் விடுங்க சார். பேசிட்டு போய்டுவாங்க” என்றார். நான் செக்யூரிட்டியை அழைத்து, அனுமதிக்கச் சொன்னேன்.

ஐந்து நிமிடம் கழித்து, கேண்டீன் போனபோதுதான் கவனித்தேன். அவரது குழந்தைதான் – அந்தப் பாப்பா. அப்பா, மனைவியையும், அந்தப் பாப்பாவையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

”சாருக்கு குட் ஈவ்னிங் சொல்லு” என்றார் அவர் மனைவி. அவளோ என்னையே பார்த்தபடி இருந்தாள். அப்பா சொன்னார்.. “வெளில வந்தா இப்படித்தாங்க. ரொம்ப அமைதியா இருப்பா. ஒரு வார்த்தை பேசமாட்டா. எல்லா வாலும் வீட்டுக்குள்ளதான்”

“ஆமாமாம்.. பொண்ணுகன்னா அப்டித்தான்” என்றேன் அவளது கன்னத்தைத் தட்டிக்கொடுத்தபடி.

-------------------

31 comments:

Unknown said...

Yay!!!! Parisal is back :)) With his usual style of writing!!!

எல் கே said...

உமக்கு இது தேவையா ...

sutha said...

மிக நல்ல + பயனுள்ள பதிவு கிருஷ்ணா - நன்றி @sweetsudha1

நிகழ்காலத்தில்... said...

மூஞ்சியப்பாத்தாலே மிரள்ர அளவுக்கு டெர்ரர் லுக்கு இருக்குதுங்கறத விசயத்தை பயபுள்ள எவ்வளவு நாசூக்கா எழுதி இருக்கு :))))

ILA (a) இளா said...

அருமையாக இருந்தது, நன்றி!


ரெண்டுக்கும் முடிச்சி போட்டு எனக்கு மட்டும்தான் புரிஞ்சதா?

Unknown said...

Yes; schools are teaching self defence it seems; clever girl

காப்பிகாரன் said...

சூப்பர் எழுதணும் எழுதிகிட்டே இருக்கணும் பாஸ்

Unknown said...

welcome back பரிசல்:))

செல்ல நாய்க்குட்டி மனசு said...

“இந்தக் காலத்துப் பசங்க எவ்ளோ வெவரமா இருக்காங்க பாருங்க தம்பி…” //குழந்தைகள் விவரமா இருக்கிறது ஒரு பக்கம். குழந்தைமையை அவர்கள் இழந்து நிற்பது தான் எனக்கு பெரிதாக தெரிகிறது. எல்லோரையும் வில்லன் ரேஞ்சிலேயே பார்க்க வேண்டி இருக்கிறது பாதுகாப்பு கருதி.

இராஜராஜேஸ்வரி said...

தைரியலட்சுமி !!!!

maithriim said...

ரெண்டு பதிவுகளும் படித்தேன், ரசித்தேன் :-)

குழந்தைகளையோ பிறரையோ அவர்கள் அனுமதியின்றி புகைப்படம் எடுக்கக் கூடாது. நீங்கள் எழுதியிருப்பது உண்மை சம்பவம் எனில் அந்தக் குழந்தைகளின் மனம் அந்த நேரத்தில் என்ன பாடு பட்டிருக்கும்? வேறொருவர் தவறான எண்ணத்தில் வண்டியை நிறுத்தி இருந்தால், அல்லது நம் வீட்டுக் குழந்தை இந்த சூழ்நிலையில் இருந்திருந்தால்....

அந்தக் குழந்தைகளின் சாமர்த்தியத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் :-)

amas32

M.G.ரவிக்குமார்™..., said...

நல்ல திருப்பம்!காலையில ஆபீசுக்கு வந்ததும் இந்த மாதிரி ஒரு பதிவு படிச்சா "அந்த நாள் அருமையான நாள்"!#கலக்கல் தலைவரே!

MOON_LIGHT said...

உங்க பால் வடியற முகத்தை பாத்தாஆஆஆ அந்த புள்ள அப்படி நெனச்சுருச்சு?? அடப்பாவமே....

மல்லிகார்ஜுனன் said...

பதிவு கலக்கல். தைரியலட்சுமி என்ன செய்தாள்'ங்றத கற்பனைல கொண்டுவர முடிஞ்சது.

LeaderPoint said...

அற்புதம்..

அந்தப்பொண்ணு செஞ்சதுதான் சரி! :))

கார்க்கிபவா said...

NEPV- Raja :)

தகிடுதத்தம் said...

அந்த பொண்ணு தைரியலெட்சுமி’தான் ஒத்துக்கறேன். நீங்க??

அமுதா கிருஷ்ணா said...

பதிவர்களுக்கு என்னவெல்லாம் சோதனை வருது.

x said...

அந்த குட்டி பொண்ண கற்பனை பண்ணி பார்க்கும் விதமாக இருக்கு பதிவு.. இதான் பரிசல்

//அப்போதுதான் எனக்குப் புரிந்தது.. நான் ஏதோ அவர்களைக் கடத்தவோ வேறு ஏதோ செய்யவோ வந்திருக்கும் சமூக விரோதக் கும்பலில் ஒருவனாக நினைத்துத்தான்//

பாக்க பாப்பா மாதிரி இருக்குற உங்கள போய் !!! :)))

pudugaithendral said...

ரசிச்சேன்

K.Arivukkarasu said...

பரிசல் சார்,நானும் படித்துவிட்டேன் - ஒரே மூச்சில் ! வெகுவாக ரசித்தேன் !! நன்றி !!!

Nat Sriram said...

தைரியம் என்பதை விடவும் சமயோஜிதமும் நிறைய அந்த சிறுமியிடம்..குட்..

பிரதீபா said...

Kids are very sharp.. Especially, avanga poruppula innum rendu moonu chinna kuttees irundhaa, romba saamarthiyamaa deal pannuvaanga.. Appreciations to that girl's parents..

”தளிர் சுரேஷ்” said...

சுவாரஸ்யமான அனுபவம்! பிள்ளைகள் விவரமாத்தான் இருக்காங்க!

இன்று என் தளத்தில்
ரேசன் கார்டில் பெயர் சேர்த்தகதை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_12.html

இரசிகை said...

muthal santhippum,2vathu santhippum,
2 vithamaana ponnungalaik koduthirukku illaiyaa??
:)

enakkum oru chinna incident undu.
but,naan photo yeduthutten.
anthak kuzhanthaiyin ninaivaa..
yenta antha photovum,
yaasagam ngira kavithaiyum irukku.

thodarnthu yezhuthunga parisal..
vaazhthukal.

ezhil said...

இன்றைய குழந்தைகளுக்கு இந்த மாதிரியான முன்னெச்செரிக்கைகளை பெற்றோர் கற்றுக்கொடுப்பது நன்று

பிரேமாவின் செல்வி said...

அருமை...படித்தவுடன் ஒரே சமயத்தில் அந்தக் குழந்தையை நினைத்து புன்முறுவலும், இப்படி குழந்தைகளைப் பதற்றப்பட வைக்கும் சமுதாய சீர்கேட்டை நினைத்து மனதில் பாரமும் ஏற்படுகிறது... amas கருத்திட்டபடி, குழந்தைகளை அவர்கள் பெற்றோர் அனுமதி இன்றிப் புகைப்படம் எடுப்பதைத் தவிர்த்தல் வேண்டும் (அவர்களே அனுமதித்தாலும் கூட...)

Anisha Yunus said...

பரிசல்ண்ணா,

அருமையான பதிவு. பல பாடங்களை தந்தது. “குழந்தைகளை அவர்களின் பெற்றோர் அனுமதியின்றி ஃபோட்டோ எடுக்கக்கூடாது” என்பது வரை. பெரியவர்களுக்கு ஒரு சட்டம், சிறு குழந்தைகளுக்கு ஒரு சட்டமா.... நல்ல எண்ணம்தான். ஆனால் அந்த குழந்தையின் மனது உங்களை அவளின் அப்பா ஆஃபீஸில் பார்த்ததும் அதும் உயர்ந்த ஸ்தானத்தில் பார்த்ததும் எப்படி எகிறியிருக்கும் என்பதை நினைக்கிறேன்.... ரமணிச்சந்திரன் கதை நினைவுக்கு வருகிறது.

//அருமை...படித்தவுடன் ஒரே சமயத்தில் அந்தக் குழந்தையை நினைத்து புன்முறுவலும், இப்படி குழந்தைகளைப் பதற்றப்பட வைக்கும் சமுதாய சீர்கேட்டை நினைத்து மனதில் பாரமும் ஏற்படுகிறது... amas கருத்திட்டபடி, குழந்தைகளை அவர்கள் பெற்றோர் அனுமதி இன்றிப் புகைப்படம் எடுப்பதைத் தவிர்த்தல் வேண்டும் (அவர்களே அனுமதித்தாலும் கூட...) // வழிமொழிகிறேன் :)

Unknown said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

Vadivel M said...

அலுவலக கேண்டீன் சந்திப்பு, கற்பனையா?!

Vadivel M said...

அலுவலக கேண்டீன் சந்திப்பு, கற்பனையா?!