Thursday, January 22, 2015

இதை எதுல எழுதுவீங்க?

“எதுக்கு இப்ப என் பேரைக் கேட்கறீங்க?” என்று அந்தப் பெரியவர் கேட்டபோது அவர் குரலில் பதட்டம் வழிந்தது. அவரை ஆசுவாசப்படுத்தும் விதமாய், படிக்கட்ட்டில் அமர்ந்திருந்த அவரருகில் அமர்ந்து தோளில் கைபோட்டபடி, ஒரு செல்ஃபி எடுக்க செல்ஃபோனை இடதுகையில் உயர்த்திப் பிடித்தேன்.

ஒரு சில விநாடிகள் மேலே ஃபோனைப் பார்த்தார். ஒரு க்ளிக். இரண்டாம் முறை க்ளிக்கும்போது, ‘ஃபோட்டோவா? அய்யோ.. ஏன் தம்பி.. வேணாம் தம்பி’ என்றார். ‘ஓ..  ஸாரிங்க’ என்று அதை அவருக்குக் காண்பித்து அழித்தேன்.

கடந்த இரண்டு மாதங்களாகத்தான் அவரைப் பார்க்கிறேன். கனரா வங்கி மாடியில் எங்கள் வீடு. எங்கள் வீட்டு படியிறங்கையில், கடைசி படியில் அவர் அமர்ந்திருப்பார். எங்கள் மாடிப்படி துவக்கமும், கனரா வங்கி வாசல்படியும் அடுத்தடுத்து. படிக்கட்டில் அமர்ந்து, வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு செலான் எழுதிக் கொடுத்துக் கொண்டிருப்பார்.

நான் ஆஃபீஸ் லீவு போட்ட ஒருநாள்தான் அவர் வரும் நேரத்தைப் பார்த்தேன். ஒம்பதரைக்கெல்லாம் வந்தார். கையில் மஞ்சள் பை. அதை எடுத்தார். ஒரு சிறிய துணி. அதால் படிக்கட்டை துடைத்தார். பிறகு அந்தப் பையிலிருந்து ஒரு Exam Padஐ எடுத்தார். சில பேப்பர்கள். வெள்ளைக் காகிதங்கள். செலான்கள். எல்லாவற்றையும் ஏதோ ஒரு வரிசையில் அடுக்கி, அட்டையின் க்ளிப்பில் சொருகினார். பேண்டை கீழே கணுக்காலுக்கு மேலே மடித்துவிட்டுகொண்டார். இந்த வேலையையெல்லாம் அவர் செய்வதற்குள்ளாகவே அவரைச் சுற்றி பத்து பேராவது பாஸ்புக்கை நீட்டியபடி நின்றுகொண்டிருப்பார்கள்.


“இல்லைங்கய்யா... இப்ப ரெண்டு மாசமாத்தான் உங்களைப் பார்க்கறேன். டெய்லி பேங்க் வர்ற எல்லாத்துக்கும் எழுதிக் கொடுத்துட்டிருக்கீங்க. எவ்ளோ கிடைக்குது இதுல?”

உட்கார்ந்தபடியே, உடம்பை மட்டும் நகர்த்தி என்னை ஒரு பார்வை பார்த்தார்.

“இல்ல... ஏன் கேக்கறீங்க? நீங்க யாரு?”

“என்னைத் தெரியாதா? டெய்லி வீட்டுக்கு மேல போறப்ப நீங்கதானே வழி விடறீங்க?”

“ம்ம்ம்” இப்போது அவர் கையிலிருந்த பரீட்சை அட்டையை எடுத்து க்ளிப்பில் பேப்பர்களை சரிவர சொருகினார். அதை மஞ்சள் பைக்குள் வைத்துக் கொண்டார்.

அவர் பதில் சொல்ல தயங்குவதேன் என்று தெரியவில்லை.

“சொல்லுங்க.. எதுனால இந்த வேலைய செய்யறீங்க?”

“நான் ஏன் உங்ககிட்ட சொல்லணும்?”

இந்த பதிலை அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. நியாயமான கேள்விதான். ஆனால் ஈகோ விடவில்லை.

“எங்க வீட்டு படிக்கட்ல டெய்லி நீங்க போடற குப்பையைக் கூட்டறேன்ல? அதுக்காக சொல்லலாம். உங்களைத் தாண்டிப் போறது தொந்தரவா இருக்குன்னு நினைக்காம போறப்பவும் வர்றப்பவும் பார்த்து சிரிக்கறேன்ல அதுக்காக சொல்லலாம்” - என்றேன்.

புன்னகைக்கலாமா வேண்டாமா என்பதாய்ப் புன்னகைத்தார்.

உடல்மொழியில் அவர் இளகி விட்டார் என்பதும் சொல்லத் தயாரானதும் தெரிந்தது.

 “தம்பி, I worked in Coimbatore One Mill Since 1972. நாலைஞ்சு மாசம் முந்தி ரிட்டயர்ட் ஆகிட்டேன். நான் வேலைக்கு சேர நிறைய பேர் ஹெல்ப் பண்ணாங்க. எனக்கு பெரிசா எழுதப் படிக்கத் தெரியாது. திரும்ப இங்க வந்தப்ப யாருக்காச்சும் உதவணும்னு தோணிச்சு. என்ன பண்லாம்னு பார்த்தப்ப  ஒருநாள் இந்த பேங்க் வந்தேன்..”

“ஐயா.. உங்க பேரைச் சொல்லல நீங்க?”

“நீங்க நிருபரா?”

“நிருபர்னு இல்லை.. ஆனா அந்த மாதிரின்னு வெச்சுக்குங்களேன்..”

“கரெக்டா சொன்னனுங்களா? அதான் தம்பி.. நீங்க கிடுக்கிப்பிடி போட்டு என்னைப் பேச வெச்சதுலயே கண்டுக்கிட்டேன்ல.. பத்திரிகையா?”

“பத்திரிகை இல்லைங்கய்யா. Blog... அதாவது.. ”

“புரியலையே தம்பி...”

“ஃபேஸ்புக் தெரியும்களா? நெட்ல எல்லாம் எழுதுவாங்க..”

“தெரியல.. சரி அத விடுங்க.. ஒருநாள் இந்த பேங்க் வந்தேன்.. இந்த மகளிர் சுய உதவிக்குழு ஆளுக எதையோ எழுதித்தரச் சொல்லிக் கேட்டாங்க. எழுதிக் கொடுத்ததும் ஒரு மவராசி டக்னு 10 ரூவா குடுத்துச்சு. அட..ன்னு அடுத்தநாள்லேர்ந்து வந்து உட்கார ஆரம்பிச்சுட்டேன்”

“ஐயா உங்க பேர் கேட்டேனே...”

“பேர்... வந்து.... அத விடுங்க... இதை எதுல எழுதப்போறீங்க?”

“சரி..  உதவின்னா காசு வாங்குவீங்களா?”

அப்போது சரியாக இருவர் வங்கியை விட்டு வெளியே வந்தனர். வந்தவர்கள் இவரைத் தாண்டிப் போக எத்தனிக்க, ‘ஹலோ.. என்னங்க இது?’ என்று சற்று காட்டமான குரலில் கேட்டார். அவர்கள் சட்டென நின்று “அச்சச்சோ.. மறந்துட்டோம்” என்று பாக்கெட்டில் கைவிட்டு நூறு ரூபாய் நோட்டொன்றை எடுத்தனர்.

“சில்லறை இல்லீங்களா?”

“இல்லீங்களே”

இவர் பத்து ரூபாய்கள் சிலவற்றை எடுத்தார். மொத்தமாக அறுபது ரூபாய் வந்தது.

“உள் பாக்கெட்ல பாருங்க” என்றார்கள் அவர்கள்.

“உள்பாக்கெட்லலாம் எதும் இல்ல” என்றவர் என்ன செய்ய என்பதாய்ப் பார்க்க, நான் ‘கொடுங்க’ என்று இரண்டு ஐம்பதைக் கொடுத்தேன்.

வாங்கியவர்,  அவர்களிடம் 80 ரூபாயைக் கொடுத்தார்.

 “ரெண்டு செலான்” என்றார். அவர்கள் தலையாட்டிவிட்டுச் சென்றனர்.

 “கறாரா வாங்கீடுவீங்க போல?”

“இலவசமா செஞ்சா மதிப்பிருக்காது தம்பி.  ‘அங்க போனா ஒரு கெழவன் ஒக்கார்ந்திருப்பான். எழுதி வாங்கிக்கலாம். அதான் அவன் வேலை’ன்னு இளக்காரமாகிடும்”

அவர் சொல்வது சரியாகத்தான் பட்டது எனக்கு.

“ஒருநாளைக்கு எவ்ளோ வரும்?”

“நான் ரொம்ப பேசிட்டேன் தம்பி.. கெளம்பறேன்” அவர் எழுந்தார்.

“ஐயா உங்க பேரைச் சொல்லவேல்ல நீங்க”

“டீ சாப்டப்போறேன்.. வர்றீங்களா?”

“பேர் கேட்டா டீ சாப்டறீங்களாங்கறீங்க!”

“என் பேரு..” என்றவர் என்னருகில் வந்து சன்னமாய் “...................... ஆனா பேரை எழுத வேண்டாம் தம்பி” என்றார்.

“சரிங்க” என்றேன்.

“இதை எதுல எழுதப்போறீங்க தம்பி?”

“இந்த ப்ளாக், ஃபேஸ்புக், இதெல்லாம் தெரியுமா உங்களுக்கு?”

“தெரியாதுங்களே..”

“நெட்ல எழுதுவேன்னு வெச்சுக்குங்க”

“இணையத்துலயா? சரிங்க. எழுதினா காமிங்க”

“சரிங்கய்யா”

“அப்ப நான் வரட்டுமா? என்றவர் கிளம்பவும் பேங்க் வாசலிலிருந்து ஒருவர் என்னை நோக்கி வரவும் சரியாய் இருந்தது.

“உங்ககிட்ட அவர் பேர் என்ன சொன்னார்”

நான் “சுப்ரமணியன்” என்றேன். ஆனால் அதுவல்ல அவர் சொன்ன பேர். வேறு.

“அதும் பொய்ங்க. எங்கிட்ட அருணாச்சலம்னார்” என்றார். எனக்கு திக்கென்றது.

 “அவர் யார்னு வெளிப்படுத்திக்க விரும்பலைன்னு சொல்றாங்க. வீடு வாசல் மகன்லாம் இருக்காங்க. வீட்ல ப்ரச்னை. அதான் இங்க வந்து எழுதிக் கொடுத்துட்டு காசு வாங்கிட்டிருக்கார். உதவி கிதவில்லாம் டகால்டிங்க” என்றார்.

“நீங்க?”

“நான் இங்கதான் இருக்கேன்”

“எங்க?”

“இதே ஊர்ல..”

“இல்ல.. என்ன பண்றீங்கன்னு கேட்டேன்”

“சும்மாதான் இருக்கேன்” என்றான்.

>>>

Tuesday, January 20, 2015

வெல்டன் மதன் கார்க்கி!


mile emotic(1)

ஐ!

மிகுந்த எதிர்பார்ப்போடு போய்ப் பார்த்தபடம். படம் பார்த்தபிறகு, ஷங்கர் ஒரு விளம்பர ஏஜன்ஸி ஆரம்பித்திருந்தால் நம்பர் ஒன் ஆக வந்திருப்பார் என்று தோன்ற வைத்தது அவர் காட்சிப்படுத்தியிருந்த சில பல ஐடியாக்கள்.

அதிலும், ஐல ஐல ஐ பாடலில் நான்கு  ப்ராடக்டுகளுக்கான விளம்பரத்தைக் கண்பித்திருப்பார்கள். அந்தப் பாடலின் மூலமேதான், விளம்பர உலகில் எமியும், விக்ரமும் ஜோடி சேர்ந்து கலக்குவார்கள் என்பதும் / அவர்களிருவரும் காதலிக்கத் துவங்கி - காதலில் திளைப்பதும் காண்பிக்கப்பட்டிருக்கும். அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கான்செப்ட்கள் அட்டகாசம். யார் குடுத்திருந்தாலும் சபாஷ்! 

இதில் விசேஷம் என்னவென்றால், மதன் கார்க்கியின் அசத்தலான வரிகள். தனியாகக் கேட்டால், இருவரும் பாடும் காதல் பாடல் போலவும், படத்தில், காண்பிக்கப்படும் ப்ராடக்ட் விளம்பரங்களுக்கான வரிகள் போலவும் இருக்கும்.

மதன் கார்க்கி.... You Rock Man!!!

இப்போது வரிகளையும் அது எதற்காக காண்பிக்கப் படுகிறது என்பதையும் பாருங்கள்:

**********************************************************
உன் பிடியிலே என் உயிரும் இருக்க,
ஓர் உரசலில் என் வேர்கள் சிலிர்க்க - நீ
எனில் முட்கள் கொய்தாய்!
காலை உந்தன் முத்தத்தில் விடியும்,
நாளும் உனில் தப்பாது முடியும்! - நீ
எனை மென்மை செய்தாய்!
எனது ரோமனே
சிறிது கீறவா?
விழியின் கூரிலே
மனதை கூறவா?
முகத்தின் மூடியை
திருடிப் போகவா?
நீங்கா.......தே!
என் ரோமனே....வா!

<ஷேவிங் ரேஸர்>
************************
(2)
கொஞ்ச கொஞ்ச கொஞ்சமாய் எனை பிதுக்கி
ஐலா ஐலா எடுப்பாயா?
தூரிகையிலே எனை கிடத்தி விண்
மீன்கள் வெள்ளை அடிப்பாயா?
துப்புத் துலக்க வருவாயா?
முத்துச் சிதறல் oh yeah!
பூ இல்லாமல் ஐலா,
வாசம் oh yeah!
நீ இங்கு சிரித்துவிட்டாய் அதனாலா?
மறுபடி சிரித்திட நிலவுகள் குதித்திட
பூமி எங்கிலும் ஒளி - இனி
மின்சாரப் பஞ்சம்
தீர்ப்போம் சிரி துளி!
<டூத் பேஸ்ட்>
***********************
(3)
உந்தன் மேனி எங்கிலும் எனை எடுத்து
ஐலா ஐலா நீ பூச
எட்டிப் பார்த்திடும் காக்கைகளும்
கண்ணை மூடுமே கூச
வானின் விளிம்பிலே hey yeah!
இளஞ்சிவப்பை oh yeah!
ரோஜா பூவில் ஐலா!
வண்ணத்தை oh yeah!
நிலவினில் சலித்தெடுப்பேன் உனக்காக!
சருமத்து மிளிர்வினில் ஒளிர்வினில் தெரிவது
தேவதைகளின் திரள் - உன்
கீழே பூக்கும் வெண் பூக்கள்
பூக்கள் இல்லை, நிழல்!

<ஃபேர்னஸ் க்ரீம்>

******************************
(4)
சக்கையென வானத்தைப் பிழிந்து
ஐந்து கடலின் ஆழத்தைக் கடைந்து
நான் என் கண்கள் கொண்டேன்
ஐலா விழி நீலத்தை எடுக்க
ஆடை என உன் மார்பில் உடுத்த
பேய் வெறி உன்னில் கண்டேன்
இதழின் வரியிலே
நூல்கள் பறிக்கவா?
காதல் தறியிலே
நாணம் உரிக்கவா?
பருத்தித் திரியிலே
பொறிகள் தெறிக்கவா?
ஓடா.......தே!
என் ஜீன் மானே....வா!
<ஜீன்ஸ்>

****************************

எப்பூடி!!! 

Monday, January 19, 2015

இந்த நாடும்...

“போய்யா.. ஒரு பஸ் போனா இன்னொண்ணு வரும்.. அங்க போய் நில்லு”

முகத்திலறைந்தாற்போல ஒரு பதில் எனக்குச் சொல்லப்பட்டது.

நேற்று மாலை திருப்பூர் பேருந்து நிலையத்தில், உடுமலைக்கான பேருந்துக்காக நூற்றுக் கணக்கானவர்கள் காத்திருந்தனர். மகள்களை அனுப்பச் சென்றிருந்த நான், இவ்வளவு கூட்டம் எதனால் என்றறியாமல் ஏதும் பேருந்துகள் கேன்சலா என்னவோ என்றறியாமல் அங்கே போக்குவரத்துக் கழகம் சார்பில் இருந்த ஒரு அறையில் சென்று, ‘உடுமலைக்குப் பஸ் அரை மணி நேரமா இல்லையே சார்.. என்னாச்சு?’ என்று கேட்டதற்குத்தான் இந்த பதில்.

இத்தனைக்கும், தனியாகச் சென்றால் ஒரு பய மதிக்க மாட்டான் என்று மகளோடு சென்றுதான் கேட்டேன்.

இத்தனை அலட்சியமான பதில் வரும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

“வழக்கமா நாலைஞ்சு நிக்கும்லப்பா?” என்றாள் என் மகள்.

“பொங்கல்னால டிரைவர்ஸ் இன்னும் வர்லங்க. அதான் கம்மி” என்று அவர் பாந்தமாகச் சொல்லியிருந்தால் ‘சரிங்க சார்’ என்று திரும்பியிருப்பினேயன்றி அவர் சட்டையைப் பிடித்து கேள்வியெல்லாம் கேட்டிருக்கப் போவதில்லை.

வெளியே வந்தபின்னரும் முறைத்துக் கொண்டே இருந்தார். அதன்பிறகு மகளுக்கு வாட்டர் பாட்டில் வாங்க, அவர் கூண்டைக் கடந்தபோதும் அதே முறைப்பு தொடர்ந்ததைப் பார்க்க முடிந்தது.

இந்த நிலையில், ‘பொதுமக்கள் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்’ என்றெல்லாம் சொல்வது என்ன மடத்தனம்? கொஞ்சமாவது சிரிக்கக் கற்றுக் கொண்டு இதையெல்லாம் சொல்லலாம் இவர்கள்.

எனக்கெப்போதுமே இப்படிப்பட்ட ஆசாமிகள்தான் - அரசு அலுவலகங்களில் - வாய்க்கிறார்கள்.

எது அவரை, அப்படி அலட்சியமாய் பதில் சொல்ல வைத்தது என்று நேற்று முழுவதும் சிந்தனை செய்தபடி இருந்தேன். கண்டது இதுதான்:

1. நான் அரசாங்க ஊழியன். இவன் சாதாரண பொதுஜனம். இவனெப்படி என்னை வந்து கேள்வி கேட்கப் போச்சு?

2. வக்கற்றவர்கள்தான் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டை பயன்படுத்துகிறார்கள். இவன் ஒரு வக்கற்றவன். நான் ஒரு அதிகாரி. இவனுக்கு நான் என்ன பதில் சொல்வது?

3. வெளியே 100-200 பேர் பேருந்துக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவன் மட்டும் என்ன புரட்சியாளன்?

4. &$%&க் கொழுப்பு.

இவர்கள் மாற என்ன செய்யலாம் / செய்ய வேண்டும்?

ஒன்றுமில்லை. எனக்கு ஒட்டுமொத்தமாய் நம்பிக்கையிழக்க வைத்துவிட்டது அரசாங்க அதிகாரிகளின் பழகுமுறைதான். அறிந்தவனாய்ச் சென்றால் அவர்களது பழகுமுறைக்கும், பொதுஜனமாய்ச் சென்றால் அவர்களது பழகுமுறைக்கும் லட்சம் வித்தியாசங்கள்.

என்றைக்கு ஒன்றுமறியாமல், தன் தேவைக்காக தம்மை வந்து அணுகும் பொது ஜனத்தை மரியாதையாக, அவர்கள் திருப்தியுறும் விதமாக அலுவலர்கள் நடத்துகிறார்களோ.. அன்றைக்குதான் நாடு உருப்படும்.

ஆமென்.