Friday, September 12, 2014

வரு-மானம்

நண்பனோடு அந்த உணவகத்தில் டின்னரில் இருந்தபோது, ரேடியோ போன்றொரு ஒலி கேட்டது.

‘நால்ரோடு சிக்னல் நால்ரோடு சிக்னல்’

நிமிர்ந்தால் வாக்கிடாக்கியுடன் ஒரு ட்ராஃபிக் போலிஸ்காரர் உள்ளே வந்தமர்ந்தார். கொஞ்சமே கொஞ்சம் அந்த வாக்கி டாக்கியின் சத்தத்தைக் குறைத்தார். வாஷ் பேசினில் போய்க் கைகழுவி வந்தவர், “ஏம்ப்பா டிஷ்யூ பேப்பர் இல்லையா?’ என்றார். நார்மலாக இந்த எழுத்து 12 ஃபாண்ட் சைஸ் என்றால், அவர் கேட்டதை ஃபாண்ட் சைஸ் 30ல் எழுதலாம் அவ்வளவு ச-த்-த-மா-க-க் கேட்டார்.

‘இல்லை சார்’ என்று மிகவும் தன்மையாக பதில் சொன்ன சர்வர், இடதுபுறச் சுவற்றைப் பார்த்தார். அங்கே டிஷ்யூ பேப்பர் உபயோகத்தால் அழியும் மரங்களைப் பற்றிய ஒரு சிறிய போஸ்டர் இருந்தது. போக்குவரத்து காவல்துறை நண்பர் அதைக் கவனித்ததாய்த் தெரியவில்லை.

“என்ன இருக்கு?” என்றார். அதே 30 ஃபாண்ட் சைஸ் குரல்.

ஆர்டர் செய்துவிட்டு, வாக்கி டாக்கியின் சப்தத்தைக் கொஞ்சம் குறைத்துவிட்டு, ஃபோனை எடுத்தார்.

“அப்பறம் மாப்ள? எங்க இருக்க?”

“..............................” - எதிர்முனையின் பேசியது - நல்லவேளை - கேட்கவில்லை.

“நான் இங்க சாப்டுட்டு இருக்கேன் மாப்ள. கல்யாணம் முடிஞ்சு விருந்துக்கெல்லாம் போகாமயே டூட்டீல ஜாய் பண்ணீட்ட போல?”

அவரது குரலுக்கு உணவருந்திக் கொண்டிருந்த எல்லாருமே திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் அதை சட்டை செய்ததாய்த் தெரியவே இல்லை.

சில நொடிகள் சம்பாஷணைக்குப் பிறகு, “அப்பறம்? இன்னைக்கு என்ன வசூல்?” என்றார் அதே சத்தமான குரலில்.

நான், திடுக்கிட்டு -  நிமிர்ந்து நேராய் அவரையே பார்த்தேன். அவர் சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார். தலை நிமிரவில்லை. அது தலைநிமிரக்கூடிய உரையாடலும் இல்லை.

“அவ்ளோதானா? இதை வெச்சுட்டு என்னய்யா பண்ணப்போற? கல்யாணத்துக்கே எப்டியும் செலவு ரெண்டு ரெண்டரை ஆகிருக்காது? டெய்லியும் வெறும் 500, 600தான்னா என்ன பண்ணுவ?”

இதற்கு எதிர்முனை, ‘உனக்கு?’ என்று கேட்டிருக்கவேண்டும் என்பது இவரது பதிலில் தெரிந்தது.

“ப்ச்..  இங்க அதவிட மோசம் மாப்ள. காலைல இருந்து ஒண்ணும் சிக்காம, சாயந்தரம் ஒரே ஒரு மணல் லாரிக்காரான் வந்தான். வெறும் 400 ரூவாதான் கறக்க முடிஞ்சது. கடுப்பாய்டுச்சு மாப்ள இன்னைக்கு”

பொது இடத்தில், நான்கைந்து பேர் அங்கங்கே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவகத்தில் லஞ்சப் பரிமாற்றம் குறித்து வெளிப்படையாய், இத்தனை சத்தமாய்ப் பேசிக் கொள்வது குறித்த கவலை கிஞ்சித்தும் அவருக்கு இருக்கவில்லை. அதை ஏதோ ‘இன்னைக்கு எங்க பாஸ் என்னைப் பாராட்டினார்’ என்று ஊழியர்கள் செய்தி பரிமாறிக் கொள்வதைப் போல, பெருமையாய்ப் பகிர்ந்து கொள்கிறார்.

எனக்கு அதற்கு மேல் அங்கிருக்கப் பிடிக்கவில்லை. நண்பனிடம் புலம்பிக் கொண்டே, அவசர அவசரமாய் அந்த இடம் விட்டு நகர்ந்தேன். கை கழுவிட்டு, பில் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன். அதிகபட்சமாய் அந்தக் காவல்துறை நண்பரைக் கடக்கும்போது அவரை முறைக்க மட்டுமே முடிந்தது. அதுவும் அவர் பார்க்கவில்லை என்றதால் இருக்கலாம்.

வெளியே வந்து பைக் எடுக்க நிற்கையில் நண்பன் சொன்னான். “அவனுக்கே அக்கறை இல்லை, பயம் இல்லை. நீ ஏன் இவ்ளோ டென்ஷனாகற?”

“இல்ல பாஸ். முப்பது வயசுக்குள்ளதான் இருக்கும். இத்தனை பேர் கவனிக்கறாங்கன்னுகூட தெரியாதா? பொது இடத்துல பெருமையா பேசற விஷயமா இது?”

“தைரியமா பேசறான்னா அவ்ளோ லஞ்சம் குடுத்துதான் அவனும் வேலை வாங்கீருப்பான். அத அடைக்கணும்ல?”

‘அது சரி” என்ற நான் ஒரு நிமிஷம் நின்றேன். போனமுறை இதைப்போன்ற ஷாப்பிங் மால் விவகாரம் ஒன்றைப் பகிர்ந்தபோது, நண்பர்கள் ‘நானா இருந்தா சும்மா வந்திருக்க மாட்டேன். நாலு கேள்வி கேட்டுட்டுதான் வந்திருப்பேன்’ என்றெல்லாம் உசுப்பேற்றியது ஞாபகம் வந்தது. கேட்கலாமா வேண்டாமா என்று ஓரிரு நொடிகள் யோசித்துவிட்டு, ‘ப்ச்’ என்று பைக்கை எடுக்கப் போனேன்.

திடீரென்று ஒன்றை கவனித்து, “இரு வர்றேன்” என்று நண்பனிடம் சொல்லிவிட்டு, நேராக அந்த போலீஸ்காரரை நோக்கி சென்றேன்.

சாப்பிட்டு முடித்திருந்த அவர் என்னைப் பார்த்ததும் “என்ன?” என்பதாய் புருவமுயர்த்தினார்.

“உங்க பைக்கை, க்ராஸா நிறுத்திருக்கீங்க. என் பைக்கை எடுக்க முடியல. கொஞ்சம் வர்றீங்களா?” என்றேன். இப்போது என் குரல் சாதாரணத்தை விட கொஞ்சம் கடுமையாய், உயர்ந்திருந்தது.

“சைடுல தள்ளி வெச்சுட்டு எடுத்துப் போங்க பாஸ்”

“இல்லைங்க.. சைடு லாக் பண்ணீருக்கு. நீங்களே வந்து எடுங்க” என்றேன்.

அவர் மிகுந்த சலிப்புடனே எழுந்து வெளியே வந்தார். Anti Snatching Squad என்றெல்லாம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த தன் பைக்கை சைட் லாக் விடுவித்து நகர்த்தினார்.


அப்போது நான் என் பைக்கை எடுத்தவாறே, என் நண்பனைப் பார்த்து சொன்னேன்.

“நான் சொன்னேன்ல.. ? இவருதான் பாஸ்”

என் நண்பன் குழப்பமாய்ப் பார்க்க, அந்த போலீஸ்காரரும் என்னைப் பார்த்தார்.

“ஒண்ணும் இல்ல சார்.. வெறும் நானூறுதான் வருமானம் வந்துச்சுன்னு புலம்பிட்டிருந்தீங்கள்ல.. அதைப் பத்திதான் பேசிட்டிருந்தோம் சார்.. வர்ட்டுங்களா?” என்று பைக்கை உதைத்து விரட்டினேன்.

இன்றைக்கிலிருந்து அவர் திருந்துவாரா என்று தெரியாது. ஆனால், இன்றைக்கு அவர் வாங்கும் லஞ்சப்பணத்தை பொது இடங்களில் இவ்வளவு சத்தமாய்ப் பகிர்ந்துகொள்ள மாட்டாரென்பது மட்டும் நிச்சயம்.
.

Sunday, September 7, 2014

கேள்வி கேட்டா தப்பா சார்?

வரிசையில் நான் முதல் ஆள். Counter Opening Time: 8.45 AM என்றிருந்தது. நான் வாட்சைப் பார்த்தேன். 9.01 என்று காட்டியது. கொஞ்சம் தள்ளி, சலவைக்கல் பெஞ்ச்சில் உமாவும், மகள்களும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.

அது கோவையின் ஒரு Shopping Mall. ‘8.45க்கு டிக்கெட் வாங்கிட்டு, மால் ரெஸ்டாரண்ட்ல சாப்ட்டு, 9.30 ஷோ பார்க்கலாம்’ என்பது எங்கள் திட்டம்.

என் வாட்ச், ‘9..02’ என்றபோது சாவகாசமாக அரட்டை அடித்தபடி மூன்று பேர் கவுண்டர் கதவைத் திறந்து உள்ளே சென்றனர். உள்ளிருந்த, ஸ்க்ரீன் உயர்த்தப்படவில்லை. அவர்கள் உள்ளே நுழைந்ததும், நான்கைந்து கவுண்டர்கள் முன்னிலும் அங்கங்கே அமர்ந்திருந்தவர்கள் வந்து ஆக்ரமித்துக் கொண்டனர்.

9.03

9.04

9.05

9.06

இப்போது மாலின்,  பணிப்பெண் ஒருத்தி சீருடையில் அந்த கவுண்டர் கதவைத் திறந்து, ஒரு கையில் கதவைப் பிடித்தவாறே உள்ளிருந்த ஒருத்தியிடம் 500 ரூவாய்த் தாளை நீட்டி டிக்கெட் கேட்டார். உள்ளிருந்த பெண்ணும் ஜாலியாக சிரித்துக் கொண்டு, ஏதோ அரட்டை அடித்தபடியே அவளுக்கு முதல் டிக்கெட்டை வழங்க ஆயத்தமானார்.

வழக்கம்போல என்னுள் இருந்த அம்பி விழித்துக் கொள்ள, “ஏங்க 8.45 கவுண்டர் ஓபன்னு போட்டிருக்கு. டிக்கெட் வாங்கிட்டு சாப்டுட்டு படம் பார்க்கலாம்னு வந்தா, 9.10 ஆகப்போவுது.. இன்னும் டிக்கெட் இஷ்யூ ஆரம்பிக்காம இருக்கீங்களே?’ என்றேன்.

நான் சொன்னது உள்ளிருந்தவர்களுக்குக் கேட்க வாய்ப்பில்லை. பாதிக் கதவை திறந்தபடி நின்றிருந்த பெண் நான் சொன்னதை உள்ளே வழிமொழிந்தார்:

”எட்டே முக்கால்ன்னு போட்டு, எட்டேமுக்காலுக்குத் தொறக்கலியாம். இப்டி லேட் பண்ணினா எப்டி டிஃபன் சாப்டு படம் பார்க்கறதுன்னு கேட்கறாரு” என்றார், கொஞ்சம் அதிகபட்ச டெசிபலில்.

அதற்கு உள்ளிருந்து ஏதோ கமெண்ட் வர சட்டென்ற ஒரு பயங்கரச் சிரிப்பு அவர்களுக்குள்ளே பரவியது.

‘என்ன சொன்னாங்க?’ என்று கேட்டேன் சற்றே கோபமுற்ற நான்.

“அவங்க என்கிட்ட சொன்னாங்க”

“நான் சொன்னத உள்ள சொன்னீங்கள்ல? அவங்க என்ன சொன்னாங்கன்னு எங்கிட்டயும் சொல்லுங்க”


“அவங்க என்கிட்டதான் சொன்னாங்கன்னு சொல்றேன்ல?”

இதற்குள் உள்ளே இருந்த பெண், ‘ஏய்.. உள்ள வந்து கதவைச் சாத்துடி. இப்டி பாதிக் கதவை தொறந்து நின்னு பேசாத’ என்று அதட்ட அந்தப் பெண்ணும் உள்ளே சென்றார்.

ஓரிரு நிமிடங்களில் கண்ணாடியைத் தடுத்திருந்த திரை உயர்த்தப்பட, என் முன்னே இருந்த கவுண்டரில் டிக்கெட் கொடுக்கும் பெண்ணும், அவருடன் வெளியிலிருந்து வந்த பெண்ணும் நின்றிருந்தனர். என்னைப் பார்த்ததும், அந்தப் பெண், டிக்கெட் வழங்கும் பெண்ணிடம் ஏதோ சொல்ல, டக்கென்று அவர் சீட் மாறி வேறு கவுண்டரில் சென்றமர்ந்தார். இப்போது நான் நின்றிருந்த கவுண்டரில் டிக்கெட் வழங்க யாருமில்லை.

நான் மிகவும் சிறுமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன். மாலின் ஊழியப் பெண் வெளியே வந்து என்னை அவசரமாய்க் கடந்து சென்று விட, மற்ற டிக்கெட் கவுண்டர் வழியே ஆளாளுக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

ஏதுமறியாத என் மகள் மீரா என்னிடம் வந்து, ‘என்னாச்சுப்பா.. ஃபோன் குடுங்க நான் அந்தக் கவுண்டர்ல நின்னு வாங்கிடறேன்’ என்று என் ஃபோனை வாங்கி இன்னொரு வரிசையில் நின்றாள். இதையெல்லாம் முகத்தில் வெற்றிக் களையுடன் டிக்கெட் கொடுக்கும் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்.

நுழைவுச் சீட்டு கிடைத்ததும், நேராக மேலே திரையரங்குக்குப் போனோம். லிஃப்ட் கதவு திறக்கப்பட்டதும், அங்கிருந்த வரிசையில் போய் நின்றோம். 20 பேர்கள் இருந்த வரிசை, என் முன்னே நான்கைந்து பேராக குறைந்ததும் கவனித்தேன். கீழே 500 ரூபாயைக் கொண்டு வந்து டிக்கெட் வாங்கிய பெண் நின்று கொண்டிருந்தார். என்னைக் கண்டதும், அவர் அருகே நின்று கைப்பயைச் சோதித்துக் கொண்டிருந்தவரிடம் ஏதோ சொல்ல, அந்த அம்மணி என் முன் நின்றவர்களை விடுத்து, நேராக என்னைப் பார்த்தார்.

‘நான் சொன்னேன்ல.. இவன்தான் கீழ ரூல்ஸ் பேசினது’ – இதாகத்தான் இருக்க வேண்டும் என்பது உ.கை.நெ.கனி.

எனக்கு மீண்டும் ஒரு மாதிரி அவமான உணர்வு மேலிட, அவர்கள் அருகே சென்றதும் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்டேன்:

“ஜெயிச்சாச்சா? நான் நியாயமாக் கேட்ட கேள்விய உள்ள கிண்டலா சொல்லி, அந்தம்மாவை சீட் மாறி உட்கார வெச்சு எனக்கு லேட்டா டிக்கெட் கெடைக்க வெச்சதுல ஒரு சந்தோஷம் உங்களுக்கு.. இங்க இவங்ககிட்ட என்னைப் பத்தி கமெண்ட் பண்றதுல ஒரு சந்தோஷம். இப்ப நல்லா ஃபீல் பண்றீங்கள்ல?”

இதைக் கேட்டதும் சற்றுத் தள்ளி இருந்த சஃபாரி ஆசாமி வந்தார்.

”என்னம்மா ப்ரச்னை?’

“தெரியல சார். கீழயும் இப்டித்தான் ஏதோ கேட்டு ப்ரச்னை பண்ணாரு”

“என்ன சார் வேணும்?”

“கஸ்டமர் கேர்தான் சார் வேணும். வேறென்ன வேணும்? 50, 60 ரூவா டிக்கெட்டை விட்டு 120 ரூவா டிக்கெட் குடுத்து வர்றோம்னா, சொன்ன டயத்துக்கு எல்லாம் நடக்கும்னுதானே வர்றோம்? 8.45க்கு போட்டுட்ட்டு 9.10 வரைக்கும் கவுண்டர் திறக்கல. அதக் கேட்டதுக்குத்தான் இத்தனையும்....”

இதற்குள் உமாவும் மகள்களும், ‘வாங்க போலாம்’ என்றழைக்க, நானும் நகர்ந்தேன்.

இடைவேளையில் நடந்தவற்றை என் மகள்களிடம் பகிர்ந்து கொண்டேன். படம் முடிந்ததும், ‘வெளில போறப்ப அந்தப் பொண்ணைப் பார்த்து மறுபடி கேட்கலாமாப்பா?’ என்றாள் மீரா. ‘வெளில போற வழி வேற.. அதுனால அவங்களைப் பார்க்கப் போறதில்ல” என்றேன்.

ஆனால், சாப்பிட்டு விட்டு வேறு வழியாக எஸ்கலேட்டரில் இறங்க, கீழே அந்தப் பணிப்பெண் நின்று கொண்டிருந்தார்.

“ப்பா.. அந்தக்கா நிக்குது. ஏதும் கேட்கப் போறீங்களா?’

”இல்ல குட்டீம்மா. அவங்க கொஞ்சமாச்சும் நினைச்சுப் பார்ப்பாங்கன்னு நினைக்கறேன்” என்றேன்.

கீழே இறங்கி, அவரைக் கடக்க எத்தனிக்கையில் என்னைத் தடுத்து, “ஸாரி சார்.. நான் பண்ணது தப்புதான். ஃபேமலியோட, ஒரு லீவு நாளைக்கு வந்த உங்க மூடை ஸ்பாய்ல் பண்ணீட்டேன். மேனேஜர்ட்ட சொல்லி, கரெக்ட் டைமுக்கு கவுண்டர் திறக்க வைக்கறேன்” என்று சொல்வாரென்று நினைத்தேன். ம்ஹும். முன்னைவிடக் கடுமையாக முறைத்துவிட்டுக் கடந்தார்.


அடுத்தமுறை அங்கு செல்கையில், இந்தச் சம்பவம் மறந்து - அந்தப் பெண்ணைப் பார்த்து புன்னகைக்கும் மனோபாவம் எனக்கு வாய்க்கவேண்டும். பார்ப்போம்!
.

Saturday, August 2, 2014

வரம்!

அலுவலகத்தில் சிலபல டென்ஷன்ஸ். சிரிக்க மறந்து நாளாகிவிட்டது. மெய்ல், வாட்ஸப் நட்பு வட்டங்களிலிருந்து நான் ஒதுங்கி - அவர்களும் என்னை ஒதுக்கி - மாதங்களாயிற்று. சம்பிரதாய ஹலோ ஹாய்களுடன் கழிகிறது காலம். புன்னகைக்கு பதில் டார்கெட்களும், கைகுலுக்கல்களுக்குப் பதில் கமிட்மெண்ட்களுமாய் இடமாறிவிட்டிருக்கிறது காலச்சுவடில். ‘படிக்க நேரமில்லையா.. சிரிக்க நேரமில்லையா..’ என்றொரு காலத்தில் எதிர்ப்படுவோரிடமெல்லாம் கேட்டவனுக்கு ‘இதற்கெல்லாம் நேரம் மட்டுமில்லை, மனதும் சூழலும் வாய்க்க வேண்டும்’ என்று எதுவோ உணர்த்திக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கும் அதேபோன்றதொரு மனதுடன் வீடடைந்து, வழக்கமாய் ரெகார்ட் ஆகியிருந்த மகாபாரதம், சூப்பர் சிங்கரைப் பார்க்க ஆரம்பித்தேன். வாழ்வே குழம்பியிருக்க, பாரதம் சீரியலில் - அர்ஜுனனை - குழப்பிக் கொண்டிருந்தார் கிருஷ்ணர். முடிந்ததும் சூப்பர் சிங்கர்.

அசுவாரசியமாய்ப் பார்த்துக் / கேட்டுக் கொண்டிருந்த என்னை நிமிரச் செய்தது செந்தில்நாதன் வருகை.

வந்தவர், ‘பத்ரி, ஏஞ்சலின்னா யாரு?; என்கிறார். அவருக்கு எல்லாருமே பத்ரிதான்.

ஓடிவருகிறார் குட்டிப்பாப்பா ஏஞ்சலின். சூப்பர் சிங்கரின் டாப் 20 போட்டியாளர். அவர் கையைப் பற்றி, வருடியபடி கேட்கிறார் செந்தில்நாதன்:-

“ஏஞ்சலினுக்கு டெல்லிக்கு ராஜான்னாலும் தெரியுமா?”

“தெரியும்” - ஏஞ்சலின்.

“பாடு?”

பாடுகிறார் குட்டிப்பாப்பா ஏஞ்சலின். அவ்வளவுதான். செந்தில்நாதன் ‘க்ளுக்’ என்றொரு சந்தோஷ ஒலியை வெளிப்படுத்துகிறார். அடுத்த நிமிஷம் தொட்டு நாலு வரிகளை அவர் பாடும் வரை, துள்ளிக் குதிக்கிறார் செந்தில்நாதன். தாங்கமுடியாத மகிழ்ச்சி என்பார்களே.. அதைப் பார்க்க முடிகிறது அவர் முகத்தில், உடல் மொழியில். கால்கள் தரையில் நிற்க மறுத்துக் குதிக்கிற சந்தோஷம்.

செந்தில்நாதனைத் தெரியாதவர்களுக்கு:-

கண்கள் தெரியாது. மனவளர்ச்சியில் குன்றியவர். பெற்றவர்கள் விட்டுவிட்டுப் போய்விட எடுத்து வளர்த்தவர்கள் யாரோ. அவர்களில் தான் தாயாய் பாவித்து வந்தவர் இறந்து ஒரு மாதம் கூட ஆகியிருக்காது. அவர் இறந்துவிட்டாரென்பதையும் இவரால் புரிந்து கொள்ள முடியாது. இத்தனைக்கும் நடுவில் ஒரு பாடல் அவருக்களிக்கும் மகிழ்ச்சி அளப்பரியது.

நமக்கு?

தோசைக்கு வைத்த சட்னியில் கொஞ்சம் கடுகில்லை என்பதெல்லாம் பெரிய பிரச்சினையாகிவிடுகிறது.

செந்தில்நாதனாய் இருப்பதும் வரம்தான். என்ன, அது செந்தில்நாதனுக்குத் தெரிவதில்லை.
.