“தம்பி இதுல கண்ணம்மான்னு ஒரு பேரிருக்கும். எடுத்துக்குடு” - அந்தப் பெரியவர் தன் சீட்டிலிருந்து என்னிடம் அவரது நோகியாவை நீட்டினார். நோகியா 1100. பலரது ஆல்டைம் ஃபேவரைட் மொபைல்.
பேருந்தில் ஏறும் வாசலை ஒட்டிய, இடதுபுற இரட்டை சீட்டில் நானும் உமாவும் அமர்ந்திருந்தோம். வலது புறம் அந்தப் பெரியவர் அமர்ந்திருந்தார்.
நான் கண்ணம்மாவைத் தேடினேன். மொபைலில். ம்ஹும். ‘K' வரிசையில் அப்படி ஒரு பெயரே இருக்கவில்லை.
“ஐயா.. அந்தப் பேரே இல்லீங்களே..”
“அடென்ன தம்பி.. உன்ரகூட ரோதனையாருக்கு. நமக்கு அதெல்லாம் பார்க்கத் தெரியாததாலதானே கேட்கறேன்.. ரெண்டு நாள் பேசலைன்னா நம்பர் அவிஞ்சு போயிருமா.... இல்லீன்ற?” என்றார் கொஞ்சம், கோபமும் கொஞ்சம் எரிச்சலும் கலந்த தொனியில்.
“இல்லைங்கய்யா.. கே-ல கண்ணம்மாங்கற பேர் இல்லைங்க...”
“அதெ எவன்கண்டான் கேயாவது ஏயாவது... நல்லாப் பார்த்து எடுத்துக்குடு.. வூட்டுல சமைக்கச் சொல்லோணும்” என்றார்.
மணி இரவு ஒன்பதரை. கோவையிலிருந்து திருப்பூர் சென்று கொண்டிருந்தது பேருந்து.
நான் மறுபடி தேடிவிட்டு “இல்லைங்க...” என்றேன்.
அவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, உமாவை நோக்கி “நீ பாத்துக்குடும்மணி.. என்ர மருமவப்புள்ள மாதிரி நீயும் வெவரமாத்தான் இருப்ப” என்றார்.
நான் இந்த நேரத்துக்குள் அவரை ரசிக்கத் தொடங்கியிருந்தேன். உமா சிரித்துக் கொண்டே ‘அந்தப் பேர் இல்லீங்கய்யா.. அவர் பார்க்கறப்ப நானும் பார்த்தேன்’ என்றார்.
“ம்ம்ம்... அப்டீன்னா பாலு இருக்கான்னு பாரேன்” என்றார்.
நான் ஃபோனை வாங்கிப் பார்த்தேன். Balu K, Bala, Balasubbu என்றொரு நான்கைந்து பாலுக்கள் இருந்தனர்.
அவரிடம் சொல்லி, கேட்டேன்.
“எந்த பாலுங்க?”
“என்ர மவன்தான்”
உமா சிரித்துவிட்டார். அவர் பார்க்கவே, ஜன்னலோரம் முகம் திருப்பிக் கொண்டார்.
“அதெல்லாம் இதுல இல்லீங்கய்யா.. என்ன பேர்ல பாலுவை நீங்க இதுல பதிவு செஞ்சிருக்கீங்கன்னு தெரியணும்” என்றேன்.
“என்ர மவனை மொதல்ல ஒதைக்கணும். இந்தக் கெரகம் வேணாம்னா கேட்டாத்தானே..” என்று கொஞ்சம் உரக்கவே - சொல்லிவிட்டு “கொஞ்ச நேரம் முந்திகூட கூப்டான் கண்ணு...” என்றார்.
“அப்டீன்னா இருங்கய்யா..” என்று சொல்லிவிட்டு ரிசீவ்ட் காலை சோதித்தேன். பாலு.கே என்றிருந்தது.
அதை டயல் செய்து ‘பேசுங்க..’ என்று அவரிடம் நீட்டினேன்.
என்னை ஆழமாக முறைத்து.. ‘இப்ப மட்டும் எப்படிக் கெடச்சுதாம்?’ என்று கேட்டுவிட்டு ‘அடே பாலு.. வூட்லயா இருக்கியா தோட்டத்துலயா?...’ என்று உரத்த குரலில் பேசத் தொடங்கியவர் ‘ பாலு... பாலு.... இதென்ன அவன் பேசமாட்டீங்கறான்..?’ என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.
நான் ஃபோனை வாங்கிப் பார்க்க ரிங்டோன் போய்க் கொண்டிருந்தது. ‘இன்னும் அவர் எடுக்கலைங்க’ என்று சொல்லச் சொல்ல எடுத்தார் யாரோ. அந்தப் பெரியவரிடம் நீட்டினேன்.
அவர் மகன்தான். இரவே திரும்பிவிடுவதாகவும், அதனால் மருமகளை சமைத்து வைக்கச் சொல்லியும் கூறினார்.
அதற்குள் நான் என் ஃபோனில் Angry Birds விளையாட ஆரம்பித்திருந்தேன். அவர் ஃபோனை வைத்துவிட்ட கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவருக்கு ஒரு அழைப்பு வந்தது.
எடுத்தவர் பேசத் தொடங்கினார். இப்போது அழைத்தது அவர் மருமகள். பேசியவர் முடிவில்.. “அவன் தோட்டத்துல இருப்பான். உன்ரகிட்டயே சொல்லிடலாமுன்னு பார்த்தா, இங்க ஒரு தம்பி இதுல உன்ர பேரே இல்லைன்னுடுச்சு” என்று என்னைப் பற்றி புகார் வாசித்துக் கொண்டிருந்தார்.
ஃபோனை வைத்துவிட்டு ‘இப்ப பேசிட்டேன்ல? படிச்சவனாட்டம் இருக்க.. இத்தாத்தண்டில போனை வெச்சு நோண்டிகிட்டிருக்க.. பேரில்லைன்ற” என்று அவர் சொல்லவும், ‘இங்க குடுங்கய்யா’ என்று அவர் ஃபோனை வாங்கி ரிசீவ்ட் காலைப் பார்க்க ‘Gannama” என்று இருந்தது.
“ஐயா.. கண்ணம்மாக்கு கே தாங்க வரும்.. இதுல ஜி போட்டிருக்கு. அதான் தெரியல..” என்றேன்.
“அந்தக் கெரகெமெல்லாம் எனக்குத் தெரியுமா.. படிச்சவனுக. உங்களுக்குதான் தெரியணும்.. “ என்றவர் “சரி விடு... என்ர மருமவன்கிட்ட பேசணும்... சுப்புன்னு இருக்கும்பாரு... எடுத்துக் கொடு” என்றார்.
நான் 'A' விலிருந்து தேட ஆரம்பித்தேன்.
.
Friday, September 9, 2011
Tuesday, September 6, 2011
ஒரே தகவல்
கடந்த மூன்று மாதங்களாக பெரிசாக எதையுமே கற்றுக் கொள்ளவில்லை. இது பற்றி இப்போதுதான் முதல்முதலாகச் சொல்கிறேன். முதலிலேயே சொல்லியிருந்தால் மொத்தியிருப்பீர்கள் என்று தெரியும். எழுதாமல் இருப்பது எப்படி என்று எழுதுவதற்காக, எழுதாமல் இருப்பது எப்படி என்று தெரிந்து கொள்வதற்காக எழுதாமல் இருந்து அதிலேயே மூழ்கி விட்டேன். எழுதாமல் இருப்பது என்பது நம்பிக்கை சார்ந்தது அல்ல. அது ஒரு வெட்டித்தனம். ஒன்றை எழுதுகிறீர்கள். அதை வெளியிட்டுவிட்டால் எல்லாரும் உங்களை மண்டையிலேயே போடுவார்கள். “இதை நான் நம்ப மாட்டேன்” என்று யாராவது சொன்னால் அது மடமை. எழுதுவது படிப்பவரை சோதித்துப் பார்க்கும் செயல். அது ஒரு விஞ்ஞான உண்மை. அதே போன்றதுதான் எழுதாமல் இருப்பதும். என்னுடைய எழுத்து ஒருவருக்கு இலக்கிய ரீதியாக இன்பம் தருகிறதோ இல்லையோ, அதில் உள்ள ஒரு சில வார்த்தைகளின் சூட்சுமங்கள் அதை வாசிப்பவரின் வாழ்வில் மிகப் பெரிய எரிச்சலை உண்டு பண்ணும். அதில் முக்கியமானவை உங்கள் கையையே கடித்துக் கொள்வது, மண்டையைப் பிய்த்துக் கொள்வது. இதை நான் வெறுமனே பரபரப்புக்காக சொல்லவில்லை. என் எழுத்தைப் படித்து, அதில் நான் சொல்லியிருக்கும் ஒரு விஷத்தை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். 48 நாட்கள் மங்காத்தா பார்க்க வேண்டும் என்பது போன்ற நடைமுறை சாத்தியமில்லாத எதுவும் நான் சொல்வதில் இருக்காது. ட்விட்டர், பஸ்ஸ், ப்ளாக், ஃபேஸ்புக் ஆகியவற்றை விலக்க வேண்டும் என்பது போன்ற மனித விரோத பத்தியங்களும் இல்லை. “அப்படிப்பட்ட விஷயத்தை நீயே முயற்சி செய்து மெண்டல் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகலாமே?” என்று நீங்கள் என்னைக் கேட்கலாம். எனக்கும் மெண்டல் பட்டம் வேண்டும்தான். ஆனால் அது என்னை எழுதியவர்களை ஆக்கி, அதை ரசிப்பதன் மூலமாக மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
.
.
Friday, September 2, 2011
கடுகு
# ஃபேஸ்புக்ல என்னை க்ரூப்ல இணைச்சவங்க, ஒரு மெய்லுக்கு ஒரு ரூவா கொடுத்தாலே ஒரே வருஷத்துல கோடீஸ்வரன் ஆகிடுவேன் போலிருக்கே.. #முடியல
# 'கருப்புப் பேரழகா கண்ணுக்குள்ள நிக்கறியே ஜோரா..' பாடல் டான்ஸுடன்.. விநாயகர் சிலையருகே.. சதுர்த்தி விழாவாம்! பொருத்தமாத்தான் போடறாங்க!
# பின்னால ஒருத்தன்: 'இனிமேதான் படமே' #டேய்.. இன்னும் அரை மணிநேரத்துல முடியப்போகுதுடா...
# மங்காத்தாவை 'மங்காத்தாடா'-ன்னு இப்பதான் சொல்றாங்க. விஜய்யோட நண்பனை, 'நண்பேன்டா'ன்னு தமிழ்நாடே எப்பவோ சொல்ல ஆரம்பிச்சாச்சு!
# ஸ்ரீகாந்த்தேவா, தேனிசைத் தென்றல் தேவா-வின் இரட்டைக் குழந்தையா?
# பிடிச்சவங்களுக்குக் கூப்ட்டு, எடுக்கலைன்னா, திருப்பி கால் வர்ற வரைக்கும் நொடிக்கொருக்கா ஸ்க்ரீனைப் பார்க்கற வியாதி உங்களுக்கும் இருக்கா?
# இமேஜைப் பற்றிக் கவலைப்பட வேண்டியவர்கள் புகைப்படக் கலைஞர்கள் மட்டுமே.
# ஃபோன்ல பேசச்சொன்னா, முன்னாடி ஆயிரம் பேர் உட்கார்ந்துட்டிருக்கறப்ப மைக்ல பேசறா மாதிரியே பேசறான்.. #ஹலோஓஓஓஓஓஓஓஓ
# 'உயர்தர சைவ உணவகம்' - இத ஹோட்டல் பேருக்குப் பின்னால டிஃபால்ட்டா வெச்சுக்கறாங்க. அதுக்கு அர்த்தம் தெரியுமான்னே தெரியல!
# 'பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணும்' என்பதுதான் வாழ்வில் பலரது சோகத்துக்கு காரணமாக இருக்கிறது.
# அன்னா-வுடன் உண்ணாவிரதம் இருக்கச் சென்ற நடிகர் விஜயை சந்திக்க விரும்பும் டெல்லி ரசிகர்கள் 2 to 3 மதிய உணவு இடைவேளையில் சந்திக்கலாம்.
# என் வயதை, நான் பிறந்த நாளை வைத்துக் கணிக்கிறேன். நான் வாழ்ந்ததை, உன்னைப் பார்த்த நாளை வைத்துக் கணிக்கிறேன். #Feelings
# நீயின்றி அமையாது வாழ்வு. #Feelings
# மழை வருவது போலிருந்தால் எல்லாரும் குடை தேடுகிறார்கள். நான் உன்னைத் தேடுகிறேன். #Feelings
# '3 நீங்க எடுத்துட்டு, 1 மட்டும் ஆளுக்குப் பாதியா? தேவையில்ல.. அதையும் நீங்களே வெச்சுக்கங்க' என்ற இந்திய அணியின் ஆண்மையைப் பாராட்டுகிறேன். -Test
# திருமணநாளுக்கு நேரில் சென்று வாழ்த்துவது, அரசியல் பிரமுகர்கள் தங்கள் கட்சியினரை சிறையில் சென்று சந்திக்கும் காட்சியை நினைவுபடுத்துகிறது.
# ஒருத்தன் நல்லா பாடினா 1ஸ் மோர் கேட்கற மாதிரி.. நல்லா விளையாடறாங்கன்னு தொடர்ந்து விளையாடச் சொல்லி ரசிக்கறாங்களோ?-Followon
# 'தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் பட்டியல் எதுவும் இல்லை' - ஜெ. #வெவரம்மா நீங்க! பட்டியல்தான் இல்லைன்னிருக்கீங்க!
# இந்த வாஷிங்பவுடர், ஷாம்பூ விளம்பரங்கள்ல காமிக்கற ஆராய்ச்சிக் கூடங்கள நிஜமாவே அவங்க வெச்சிருப்பாங்களா?
# பாட்டுப் போட்டின்னா பாட மட்டும் சொல்லுங்கடா.. மேக்கப் பண்ணிகிட்டு ஆடறது, ஓடறதுன்னு மகா கொடுமை பண்றாங்க...
# பில்லியனில் இளம்பெண் வைத்து வண்டி ஓட்டுபவர்களை நாம் முந்தினால், அதன் பின் அவர் நம்மை அவ்வளவு சீக்கிரம் முந்துவதில்லை #அவதானிப்பு
# 'The word Krishna means the person who is attractive to everyone' - இப்ப படிச்சிட்டிருக்கற கட்டுரைல இருந்து. கரெக்டாதான் சொல்லிருக்காங்க.
# சரக்கடிக்கும்போது நண்பர்களுக்குள் பின்பற்ற வேண்டுமென்று சொல்லிக்கொள்கிற விதிமுறைகளனைத்தும் அதிகபட்சம் 2வது ரவுண்ட் வரையே நீடிக்கிறது.
# வாக்-கிங் என்பதையே பேராக வைத்திருக்கிறார்கள் சிலர்! #நட-ராஜா
# அழைக்கும் நபர் எதிர்முனையில் என்ன மாதிரியான முகபாவனை காட்டிவிட்டு உங்கள் ஃபோனை எடுக்கிறார் என்று தெரிந்துகொள்ளாதவரை நீங்கள் பாக்யசாலி!
# இந்த பாஸ்'களுக்கு இருக்கற கெட்ட பழக்கங்கள்லயே No1 ஃபோன் பண்றப்ப, 'எங்கிருக்க?'ன்னு கேட்கறது. எங்க இருந்தா என்ன, வேலையச் சொல்லுங்க எசமான்!
# மதியம் சாப்பாட்டுக்கு ஆர்டர் சொல்லிவிட்டேன். இதோ அலைபேசியைத் திறந்து அன்னா ஹசாரேவை ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் ஆதரிக்கப் போகிறேன்.
# நள்ளிரவில் பெற்றோம். நள்ளிரவிற்குப் பின் வாழ்த்தினால் ஒரு SMS-க்கு ஒரு ரூபாயென்பதால் அதற்கு முன்னரே வாழ்த்திக் கொண்டோம். ஜெய்ஹிந்த்!
# படு கேவலமான விளம்பர ஸ்கிரிப்டில் நடிப்பதில் வடக்கே ஷாரூக்குக்கும், தெற்கே சூர்யாவிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
# சிநேகா, திவ்யா, அனுஷ்கா, தீபிகா, கோபிகா என்றொருவன் கலந்துகட்டி ரசிக்கத் தொடங்கும்போது தேசிய ஒற்றுமை உருவாகிறது.
# முதல் இன்னிங்ஸை விட 20 ரன்கள் கூடுதலாக எடுத்த இந்திய அணியை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.
# ஹோட்டலில் ஒருகுழந்தையை அவள் அம்மா உரக்க அழைத்ததில் மொத்த ஹோட்டலும் அந்தக் குழந்தையைப் பார்த்தது. குழந்தையின் பெயர்தான் காரணம். #காஞ்சனாஆஆ
# 'எல்'லுக்கு பதிலாக 'எஃப்' இடுவது அதிர்ஷ்டத்துக்கு நல்லதல்ல.
# ஒரு நண்பரிடமிருந்து வந்த மெய்ல் இப்படி ஆரம்பிக்கிறது: “Dear my 5278 readers..” - அவ்வ்வ்வ்...........
** ** **
(ஆஃபீஸில் ட்விட்டர்/ஃபேஸ்புக் தடை என்று சொன்ன நண்பர்களுக்காக....)
.
Subscribe to:
Posts (Atom)