Wednesday, May 27, 2009

"உங்களுக்கு குழந்தை பொறந்திருக்கு....”


"உங்களுக்கு குழந்தை பொறந்திருக்கு..”

எந்த ஒரு தகப்பனுக்கும் இது ஒரு தெய்வீக வார்த்தை. அதுவும் அது பெண் குழந்தையெனும் பட்சத்தில் அவனை விட அதிர்ஷ்டக்காரன் யாருமிருக்கமுடியாது.


ஆண் குழந்தை பத்து வயதுவரை வீட்டுக்குக் கொண்டுவரும் பஞ்சாயத்துகள் எதையும் பெண்குழந்தைகள் கொண்டுவருவதில்லை. யார் வீட்டுக்கு உங்கள் பெண் குழந்தைகளை அனுப்பினாலும் “என்ன அமைதியா இருக்கா தெரியுமா உம் புள்ள. என் வீட்டுலயும் இருக்குதே ஒரு வாலு..” என்றுதான் கமெண்ட் வருகிறது.


பையனாக இருக்கும் பட்சத்தில் அவனுக்கு என்ன விளையாட்டுப் பொருள் வேண்டுமோ அதைக் கேட்டு வாங்குவதோ, போகும் சொந்தக்காரர் வீட்டில் அது இல்லாவிட்டால் “அது இல்லையா” என்று கேட்பதோ நடக்கிறது. அதுவே பெண் குழந்தைகளுக்கு ‘இதுதான் வேண்டும்’ என்று கேட்கும் மனோபாவம் இருப்பதில்லை. என்ன இருக்கிறதோ அதை வைத்து விளையாடுவதும், ஒன்றுமில்லாவிட்டால் அமைதியாக இருக்கவோ பழகிவிடுகிறார்கள்.


ஒரு பெண்குழந்தையை பலவித உடைகள் மாட்டி அழகு பார்ப்பதைப் போல, ஆண்குழந்தையை அழகு பார்ப்பதில்லை. ஆண் குழந்தைகள்... ‘அது ஒரு ஆண்குழந்தை’ என்ற ஊறிப்போன பொதுப்புத்தி சந்தோஷத்திலேயே மற்ற சந்தோஷங்கள் எதையும் அடையாமல் இருக்கிறது.

நீங்கள் எங்காவது வெளியூர் போயிருந்தால் மகள் “எப்பப்பா வருவீங்க” என்றும் மகன் ‘என்ன வாங்கீட்டு வருவீங்க’ என்றும் கேட்பதை எதிர்கொண்டிருக்கலாம். பெண்கள் பொருட்களால் ஆளப்படுவதை விட பாசத்தால் ஆளப்படுபவர்கள்.

இங்கே திருப்பூரில் பணிபுரியும் பலரும் பெற்றோரை விட்டு பலமைல் தூரம் வந்து பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆண்களாகட்டும், பெண்களாகட்டும். ஆனால் பெண்கள் அவர்களின் பெற்றோரோடு உரிய கால இடைவெளியில் பேசிக்கொண்டும், சென்று பார்த்து நலம் விசாரித்துக்கொண்டும் இருப்பதைப் போல... ஆண்கள் தங்கள் பெற்றோருடன் உறவு பாராட்டுகிறார்களா என்றால்... ஒரு பெரிய இல்லை!

திருமணமாய் தனிக்குடித்தனத்தில் இருக்கும் தம்பதிகளில் கணவன் தன் வீட்டிற்கு சென்று வருவதும், பெற்றோரைப் பார்த்து வருவதையும் விட மனைவிகள் தங்கள் பெற்றோரைத் தாங்குவது அதிகம்.

ஏதோ ஒரு பொது இடத்திலோ, திருமண மண்டபத்திலோ இருக்கிறீர்கள். உங்கள் வாரிசு ஏதோ ஒரு குறும்புத்தனம் செய்கிறது. மகன் என்றால் கூப்பிட்டு அதட்ட வேண்டியிருக்கும். மகள் என்றால் தூரத்திலிருந்து உங்கள் மிரட்டலான கண்பார்வையிலேயே அவள் சுதாரித்துக் கொள்வாள்.

உங்கள் விட்டிற்குள் நுழைந்தாலே உங்கள் குழந்தை மகனா, மகளா என்பதைச் சொல்லிவிட முடியும். மகள்கள் இருக்கும் வீடுகளின்முன் செருப்புகள் ஜோடியாகத்தான் இருக்கும். மகன்கள் இருக்கும் வீடுகளில் தாறுமாறாக அவை கழட்டிப் போடப்படும். (அப்படியும் நேராக இருந்தால் அம்மா எடுத்து வைத்திருக்கக் கூடும்!) மகள்கள் இருக்கும் வீடுகளில் கூடுமானவரை அவையவை அதனதன் இடத்தில் இருக்கும். மகன்கள் அடங்காமல் போட்டது போட்டபடி வைத்திருப்பார்கள்.

விவரம் தெரிந்தபிறகு மகள்கள் கூடுமானவரை அப்பா அம்மா சாப்பிட்டாச்சா என்று பார்த்தபிறகுதான் சாப்பிடுகிறார்கள். மகன்களை அந்தக் கவலையெல்லாம் ஆட்கொள்வதில்லை.


உங்கள் குழந்தை மகளாயிருக்க நீங்கள் அதிர்ஷ்டக்காரராக இருக்க வேண்டும். காரணம்.. பெண்குழந்தைகள் தேவதைகள். அந்த தேவதைகள் எல்லா வீட்டிலும் வாசம் செய்வதில்லை.

ஒருநிமிடத்திற்கு ஷாரூக்கானின் சம்பளத்தைவிட, ரஜினிகாந்தின் சம்பளத்தை விட, அமிதாப்பின் சம்பளத்தை விட, முகேஷ் அம்பானியின் சம்பளத்தை விட... ஒரு பெண்ணான இந்திரா நூயி-யின் சம்பளம் அதிகம். பெண்கள் எந்த உயரத்தையும் தொட வல்லவர்கள்.

பெண்மையைக் கொண்டாடுவோம்!

****

முக்கியக்குறிப்பு: இன்றைக்கு தோழர் லக்கிலுக் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ரஜினிகாந்த், கமலஹாசன், வடகரை வேலன், பரிசல்காரன், எம்.எம்.அப்துல்லா வரிசையில் பெண் மகவைப் பெற்ற பேறைப் பெற்ற அவரை வாழ்த்தும் விதமாக இந்தப் பதிவு எழுதப்பட்டது. இதில் இருக்கும் கருத்துகள் யாவும் அலுவலக நண்பர்கள், தோழிகளோடு கலந்துரையாடி (வேலையே செய்யமாட்டியாடா நீ?) எழுதியவையே.

ஒருதலைப்பட்சமாகவே இருப்பதாகப் பட்டால்....

விட்டுத்தள்ளுங்க பாஸு!

.

Tuesday, May 26, 2009

அவியல் 26 மே 2009

300 ஃபாலோயர்கள் ரெண்டு லட்சம் ஹிட்ஸ் என்றெல்லாம் பீத்திக் கொள்வதை நிறுத்துடா என்றது சமீபத்தில் பார்த்த ஒரு வலைப்பூ. ஏப்ரல் 2009ல் (போன மாசம்க!) போலி ஐ.பி.எல். வீரர் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள (www.fakeiplplayer.blogspot.com) வலைப்பூவின் ப்ரொஃபைலைப் பார்த்தவர்கள் இதுவரை ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர்! ஃபாலோயர்கள் 7883 பேர்! ஹிட் கவுண்டரெல்லாம் போடவில்லை அவர்! ஒவ்வொரு பதிவிற்கும் 250 முதல் ஆயிரக்கணக்கில் கமெண்டுகள் வந்து குவிகிறது!


கிசுகிசுன்னாலே அவ்ளோ இஷ்டம்பா நம்மாளுகளுக்கு!


****************

கோவைக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது நாலைந்து ‘பசங்க’ வண்டியில் ஏறினார்கள். அவர்களோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டே “‘பசங்க’ படம் பார்த்துட்டீங்களாப்பா?” என்று கேட்டதற்கு அவர்களில் ஒரு வாண்டு சொன்னது:-


“இன்னும் எங்கப்பா சி. டி. வாங்கீட்டு வரலைண்ணா”


ம்கும்! கிழிஞ்சது போ!


*********************

ஐ.பி.எல்-லில் அதிகமாக விளம்பரங்களில் தென்பட்டது கொல்கத்தா அணியினர்தான். எப்போது பார்த்தாலும் ஷாரூக் மற்றும் கொல்கத்தா அணியினரை சந்திக்க வேண்டுமா.. **** குடியுங்கள்’ என்ற விளம்பரம் வந்து கொண்டே இருந்தது. ரொம்ப அதிகம் பேர் அவர்களைச் சந்திக்க ஆவலாயிருந்தார்கள் போல. அவர்களே கிளம்பி அவசர அவசரமாக இந்தியா வந்துவிட்டார்கள்! ஓவர் வெளம்பரம் ஒடம்புக்கு ஆகாது!

ஃபைனலில் பெங்களூர் ஜெயிக்க வேண்டும் என்றும், டெக்கான் சார்ஜர்ஸ் ஜெயிக்கும் என்றும் நினைத்தேன். ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தது கேப்டன் இந்தியாக்காரர் என்ற எண்ணம்.

போன முறை ஷேன் வார்னே, இந்த முறை கில்கிறிஸ்ட் என்று ஆஸ்திரேலியா சீனியர்கள் கலக்கிக் கொண்டிருக்க.. நம்ம சீனியர்கள்...

நோ கமெண்ட்ஸ்!

**********************

கிரேசி கிரி பற்றி. அவன் சின்ன வயசில் வீட்டருகே உள்ள ஸ்டாப்பில் மினி பஸ் வந்து நின்றிருக்கிறது. விளையாட்டாய் ஏறி, இறங்கியிருக்கிறான். அடுத்த நாள் அவன் அண்ணனிடம் கம்ப்ளெய்ண்ட் போயிருக்கிறது. அண்ணன் பிரம்பை எடுத்துக் கொண்டு கோபமாக கேட்டதற்கு இவன் சொன்னானாம்.

“ஏறும் வழின்னு போட்டிருந்தது. ஏறினேன். பஸ்ஸுக்குள்ள இன்னொரு பக்கம் இறங்கும் வழின்னு போட்டிருந்தது... இறங்கீட்டேன்”

கிரி இந்த முறை சீரியஸாக இன்னொரு விஷயம் சொன்னான்.. டாஸ்மாக்கில் சரக்கு கிடைக்கவில்லை என்று புகார் போனால் பல அதிகாரிகளுக்கு திட்டுகளும், மெமோக்களும் பறக்கிறதாம். ஆனால் பல நூலகங்களில் நூல்கள் மிகக்குறைவாய் இருந்தாலும் கண்டுகொள்ளவோ மேல் நடவடிக்கை எடுக்கவோ யாரும் தயாரில்லை என்று புலம்பினான்.

ப்ச்!

****************************

தரை பம்பரங்கள்
கயிற்றில் சுற்றும்
திரைப் பம்பரங்கள்
வயிற்றில் சுற்றும்
வயிற்றுக்காகப் பிழைக்கலாம்
வயிற்றில் பிழைக்கலாமா?
-நெல்லை ஜெயந்தா

*********************
மெயிலில் வந்த ஒரு ஃபோட்டோ. ‘இந்தியாவில் கிரிக்கெட்டில் ஏன் முன்னேற்றமடைந்து வருகிறது என்றால்..’ என்ற கேப்ஷனுடன் இந்தப் புகைப்படம் வந்தது..




இன்னொரு நண்பர் மெயிலில் கேட்டார்.. “நம்ம ஃபீல்டிங் ஏன் மோசம்னு இப்பத்தான் தெரியுது. பாருங்க அடிக்கறதுக்கு முன்னாடியே ஓடறானுக...”

******

Monday, May 25, 2009

நடிகர் விஜய்க்கு....



அன்புள்ள ‘இளைய தளபதி’ விஜய்க்கு..


சமீபகாலமாக பலரையும் பிடித்து ஆட்டும் பார்ட்டி மேனியா உங்களையும் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது என பல்வேறு குறிப்புகளின் மூலம் உணர்கிறோம்.

’பார்ட்டி மேனியா’ என நான் குறிப்பிடுவது சிம்பு, த்ரிஷா, விஷால் வகையறா நடிகர்களுக்கு இருக்கும் சாட்டர்டே பார்ட்டி அல்ல. கட்சி. கட்சி ஆரம்பிக்கும் நோய்.


நான் சூப்பர்ஸ்டார் வாரிசு என்று சொல்லிக் கொண்டிருந்த நீங்கள் எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் நடுவில் ரஜினி எதற்கு என்று டைரக்டாக எம்.ஜி.ஆரின் வாரிசாக உங்களைக் காட்டிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறீர்கள். வில்லு படத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ என்கிற பாட்டில் டைட்டில் ஆரம்பிக்கும்போதே என்னைப் போன்ற பலருக்கும் கிலி பிடித்து ஆட்டியது. அடுத்த படத்தின் பெயரும் வேட்டைக்காரன். அதற்கடுத்து ‘உரிமைக்குரல்’ என்று உறுதிப்படுத்தாத வட்டாரங்களிலிருந்து தகவல் வருகிறது. சரி.. திடீரென்று ஏன் இந்த எம்.ஜி.ஆர் பாசம் என்றால்.. டைட்டிலில் கொடியைக் காண்பித்து கட்சி துவங்கும் ஆசையை வெளிக்காட்டி விட்டீர்கள்.


மேலும் அதை உறுதிப்படுத்துவது.. ஆனந்த விகடனில் வெளியான உங்கள் பதில். ‘நான் கட்சி துவங்க வேண்டும் என்பது என் ரசிகர்களின் விருப்பம். என் பிறந்தநாளன்று நல்ல முடிவு சொல்லுவேன்’ என்றிருக்கிறீர்கள்.

உங்களைக் கட்சி துவங்கச் சொல்லுபவன் உங்களின் உண்மையான ரசிகனாய் இருக்க முடியாது. அதை நம்பி நீங்கள் கட்சி துவங்கினால் அது எப்படி இருக்கும் என்பது கடந்த கால கட்சி துவங்கிய வரலாறுகளைப் பார்த்தாலே புரியும்.

டிகர் திலகம் சிவாஜி கணேசன் சொன்னால் தீக்குளிக்கக் கூட தயாராக இருந்த இளைஞர் கூட்டம் இருந்தது. நாம் மிகவும் மதிக்கும் இலக்கியப் பேச்சாளர் தமிழருவி மணியன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவாஜி கணேசனுக்காக ஒரு நண்பரை அடித்த கதை சொல்லியிருந்தார். தி.மு.க. ஆதரவாளனான சிவாஜி கணேசன் திருப்பதி சென்று வந்தது விமர்சனத்துக்குள்ளாகவே மனக்கசப்போடு இருந்து 1961ல் காமராஜர் மீதுள்ள அன்பால் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க ஆரம்பித்தார். 1982ல் இந்திரா காந்தி அமைச்சரவையில் ராஜ்யசபா உறுப்பினராகவும் ஆனார். பிறகு 1988 பிப்ரவரியில் தமிழக முன்னேற்ற முன்னணி என்று சொந்தக் கட்சி ஆரம்பித்தார். 1989 தேர்தலில் போட்டியிட்டு எல்லா இடங்களிலும் தோற்றது அந்தக் கட்சி. சிவாஜி கணேசனே திருவையாறு தொகுதியில் தி.மு.க வேட்பாளரிடம் பத்தாயிரத்து சொச்ச வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தோல்விக்குப் பிறகு வி.பி.சிங்கின் அழைப்பின் பேரில் கட்சியை கலைப்பதாக அறிவித்து விட்டு தொண்டர்களை ஜனதா தளத்தில் சேரச் சொன்னார். அப்போது அவர் சொன்னது.

ட்சி ஆரம்பிக்கும் அவசியம் எனக்கிருக்கவில்லை. ஏனோ நிர்பந்திக்கப்பட்டேன். எனது கட்சியும் நானும் அடைந்த தோல்வி என் வாழ்வின் மிக சங்கடமான சூழ்நிலைகளில் ஒன்று. என்ன செய்ய? தவறான முடிவுகளை நாம் எடுக்கும்போது அதனால் வரும் ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ளத்தானே வேண்டும்?”

டுத்தது விஜய டி. ராஜேந்தர். பல காலமாக தி.மு.கவிற்காக உயிரைக் கொடுக்கும் தொண்டராக இருந்த இவர், 1991ல் தாயக மறுமலர்ச்சிக் கழகம் என்கிற கட்சியைத் துவங்கினார். துவங்கும்போது மிகுந்த பரபரப்பு ஏற்படுத்திய இவர், மீண்டும் 1996ல் தாய்க்கழகத்துடன் இணைந்து பார்க் டவுனில் போட்டியிட்டு வென்றார். அதே பார்க் டவுனில் 2001 தேர்தலில் தோற்ற இவர் 2004ல் தி.மு.கவிலிருந்து விலகி ‘அகில இந்திய லட்சிய திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற புதிய கட்சியைத் துவங்கி தி.மு.கவிற்கு எதிரான அ.தி.மு.க கூட்டணிக்கு தனது ஆதரவை (?) அளித்தார். ‘அள்ளி அள்ளிக் குடுப்பாங்க அம்மா. கிள்ளிக்கூட குடுக்க மாட்டார் கருணாநிதி’ என்றெல்லாம் அடுக்குமொழி பேசிய இவர், 2006 தேர்தலில் அம்மா ஒரு சீட்டைக்கூட தனது கட்சிக்கு ஒதுக்காதது கண்டு ‘நான் வாழ்வதில்லை தன்மானத்தை விட்டு.. சுயமரியாதை என் சொத்து.. உதயசூரியனுக்கு ஓட்டைக் குத்து’ என்று வசனத்தையும், ஆதரவையும் ஒருசேர மாற்றினார். இன்றுவரை அனைத்துக் கட்சி கூட்டம் என்றால் மட்டுமே இவர் தலை தெரிகிறது. மற்றபடி இவர் யாரை ஆதரிக்கிறார்.. இவர் கட்சியால் மக்களுக்கு.. அட்லீஸ்ட். இவருக்கு என்ன லாபம் என்பதெல்லாம் இவரது நியூமராலஜி குருவுக்கே வெளிச்சம்.


கே. பாக்யராஜ். ‘என் வாரிசு’ என்று எம்.ஜி.ஆரால் அழைக்கப்பட்டவர் இவர். எம்.ஜி.ஆருக்காக உயிரையே கொடுக்கக்கூடிய அளவு அவர்மீது பற்று கொண்ட இவர் தனிக்கட்சி தொடங்கி, ஜெயலலிதாவை ஆதரித்து இப்போது தி.மு.கவை ஆதரிக்கிறார். இந்தப் பதிவை எழுதுவதற்காக எத்தனை தேடினாலும் இவரது கட்சியின் பெயர் கிடைக்கவில்லை.. நினைவிலும் இல்லை. இதிலிருந்தே இவர் கட்சியின் நிலையை அறியலாம். இவரும் இப்போது தி.மு.கவில்தான் ஐக்கியமாகி பிரச்சாரம் செய்தி கொண்டிருக்கிறார்.


இப்போது ஆரம்பித்த விஜயகாந்த், சரத்குமார் சாதித்தது என்ன? எல்லா இடங்களிலும் ஓட்டைப் பிரிக்கும் வேலையின்றி வேறு என்ன சாதிக்க முடிந்தது அவர்களால்? அதுவும் விஜயகாந்த் அந்த வேலையையாவது செய்கிறார் என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். சரத்குமார் நிலை படு பரிதாபம். உங்களைப் போன்ற நடிகர்கள் அல்லாது கொங்கு முன்னேற்றப் பேரவை போல சாதிக்காரர்களும் கட்சி ஆரம்பித்து மக்களையும் நாட்டையும் குழப்புவதும், தங்கள் சுயலாபத்தைப் பெருக்குவதும்தான் நடந்துகொண்டிருக்கிறது. இவர்கள் மாதிரியானவர்கள் 2001ல் நான், 2016ல் நான், 2021ல் நான், 2025ல்நான் என்று ஆளாளுக்கு முதல்வர் பதவியை ரிசர்வ் செய்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


இதையெல்லாம் சொல்ல நீ யார் என்று கேட்காதீர்கள். எனக்கும், என் மகள்களுக்கும், மனைவிக்கும் உங்கள் வேகம் பிடிக்கும். உங்கள் ரசிகர்கள்தான் நாங்கள். அந்த வேலையை நீங்கள் ஒழுங்காய் செய்தாலே போதும். என்னைப் போன்ற மக்களுக்கு இனி ஒரு புதிய கட்சி தேவையே இல்லை. அப்படி அரசியல் பாதைதான் வேண்டும் என்றால் ஜே.கே.ரித்தீஷ் போல பிரபலமான கட்சி ஒன்றில் இணைந்து கொள்ளுங்கள். எம்.ஜி.ஆரில் தொடங்கி பலரும் தி.மு.க/அ.தி.மு.க போன்ற ஆலமரத்தின் விழுதுகளாகத்தான் தங்கள் அரசியல் வாழ்வை ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படி ஒரு கட்சியில் சேர்ந்து தொண்டனாக உழைத்து கஷடமெல்லாம் பட்டு பின்னாளில் ஏதேனும் பதவி கிடைத்தால் அதைத் தந்த மக்களுக்கு ஏதேனும் நல்லது செய்து...

இதெல்லாம் முடியுமா என்று யோசித்துக் கொள்ளுங்கள்...

அதை விடுத்து தனிக்கட்சி கனவெல்லாம் காணாதீர்கள். ப்ளீஸ்.

நடிப்பு உங்கள் தொழில். நடியுங்கள். கமலஹாசனிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். திரைத்துறையிலேயே முழுமூச்சாய் இருங்கள். மனத்ருப்திகாக சேவை செய்ய கட்சியெல்லாம் அவசியமே இல்லை. ஆனானப்பட்ட ரஜினிகாந்தே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கும் களம் அது. அவரை ஆரம்பியுங்கள் என்று தூண்டிவிட்டுக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு கட்சி ஆரம்பிக்காமல் மறைமுகமாக அவர் நல்லது செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தவர்கள் அறிவார்கள். அறிவுள்ளவர்கள் உணர்வார்கள்.

எங்களுக்குத் தேவை கட்சியல்ல. உங்களால் முடிந்த நல்லது ஏதாவதை செய்து கொண்டே இருங்கள். அதுபோதும் எந்த பிரபல்யமுமின்றி இருக்கும் பலரும் பல சேவைகள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கு எந்த கட்சி பின்புலமோ, தலைவனாகத்தான் இருக்கவேண்டும் என்ற நிர்பந்தமோ இல்லை.

புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்ட இந்தக் கடிதத்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகரிடம் காட்டுங்கள். ஏதாவது பலனிருக்கிறதா என்று பார்ப்போம்!

அளவில்லா அன்போடு
உங்கள் குத்துப்பாட்டுக்கு ஆட்டம்போடும்
சாதாரண ரசிகன்.



.