Tuesday, March 3, 2009

என்ன தவம் செய்தனை... க்ருஷ்ணா..

ஸ்கூல்ல நாங்க ஒரு அஞ்சு பேர். நான், சரவணமூர்த்தி, தர்மராஜ், ரஞ்சித், முத்துராமன். ஒண்ணாங்க்ளாஸ்லேர்ந்து அஞ்சாங்க்ளாஸ் வரைக்கும் செட்டா இருந்தோம். ஆறாங்க்ளாஸ்ல ஸ்கூல் ஒரே (உடுமலைப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி) ஸ்கூல்தான். செக்‌ஷன் பிரிச்சப்போ எக்குத்தப்பா பிரிஞ்சுட்டோம்.

ஒண்ணாங்களாஸ்ல ஒவ்வொருத்தரா ஒண்ணு சேர்ந்து நாலு பேரா என் வீட்டுக்கு வருவாங்க. என் வீடுதான் ஸ்கூலுக்குப் பக்கத்துல இருந்தது. ஒண்ணா போய், ஒண்ணா வருவோம். பெரிசாகி ஒருத்தன் டாக்டராகணும், ஒருத்தன் இஞ்சினியர் ஆகணும்.. இப்படி எந்த கமிட்மெண்டும் இல்லாத குழந்தைப் பருவம்.

இதுல ரஞ்சித், தர்மராஜ்கிட்ட ஒரு தொடர்பும் இப்ப இல்ல. முத்துராமன் இங்க திருப்பூர்லதான் இருக்கான்னாலும் எப்பவாவது ரோட்ல பார்த்து ஒரு சிறு தலையசைவோட போகறதோட சரி.

சரவணமுர்த்திய நினைக்கும்போது உடனே என் நினைவுக்கு வர்ற விஷயம்.. எல்லாருமே.. அல்லது பெரும்பாலானவங்க தங்களோட அப்பாவை வாங்க போங்கன்னு கூப்பிடுவாங்க. அம்மாவை வா, போன்னுதான் கூப்பிடுவாங்க. அம்மாவையும் இவன் வாங்க, போங்கன்னுதான் கூப்பிடுவான். இந்த சரவணமூர்த்தி கூட தொடர்பு இல்ல. ஆனா அவன் சம்பந்தப்பட்ட ஒரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கு.

ஒருதடவை ஹார்லிக்ஸ் விளம்பரம் ஒண்ணுல இந்த பத்து காரியத்துல ஒண்ணையாவது இன்னைக்கு பண்ணுங்க-ன்னு இருந்தது. படிச்சா.. அதுல ‘ரொம்ப நாள் தொடர்பில் இல்லாத உங்கள் நண்பருக்குத் தொலைபேசுங்கள்’ன்னு இருந்தது. உடனே என் ஞாபகத்துக்கு வந்தது சரவணமூர்த்திதான். முத்துராமனைத் தொடர்பு கொண்டு அவன் நம்பர் வாங்கி... “ஹலோ”ன்னேன். கிட்டத்தட்ட 20,25 வருஷங்கள் கழிச்சு ஒரு நண்பன்கிட்ட பேசறேன். அவன் ரொம்ப ஸ்டைலா “ஹலோ”ங்கறான். “நான் கிருஷ்ணகுமார் பேசறேன்”ன்னதும் ஒரு உணர்ச்சியும் இல்லாம “தெரியல”ன்னுட்டான். அதான் உண்மை. 25 வருஷம் கழிச்சுக் கூப்ட்டா எவனுக்குத் தெரியும்? முத்துராமன் அடிக்கடி பேசுவேன்னு சொன்னானேன்னு, அவன் பேரைச் சொன்னா அது புரியவே அரை மணிநேரமாச்சு அவனுக்கு. அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா விளக்கினா.. “ஓ! கே.பி-யா? ஏண்டா அதச் சொல்றதில்லயா?”ங்கறான். அவன் என் இனிஷியலச் சொல்லித்தான் கூப்பிடுவான். (அப்போ கவாஸகி பஜாஜ் செம ஃபேமஸ்!) பேசிட்டு வெச்சுட்டான்.

அதுக்கப்பறம் அப்படி ஒரு விளம்பரத்தை நான் பார்க்கவுமில்லை. அவனைக் கூப்பிடவும் இல்ல! ஏன்னு எனக்கே தெரியல.

_--------------------------

ஏழாங்களாஸ்லேர்ந்து 9ம் க்ளாஸ் வரைக்கும் நான் ஜெய்சங்கர்-ங்கற பையனோட ரொம்ப அட்டாச்டா இருந்தேன். அவன் ஒரு நாள் பேசலைன்னா அப்செட் ஆகிடுவேன்.. அந்தளவு. நாங்க ரெண்டுபேரும் திக் ஃப்ரெண்ட்ஸ்ங்கறது ஸ்கூலுக்கே தெரியும். படிப்பிலயும் அவனும், நானும் ஃபர்ஸ்ட், செகண்ட்னு வாங்குவோம். என்ன காரணமோ நடுவுல ஒருத்தன் எங்க ரெண்டு பேரையும் பிரிச்சான். (அவன் பேருகூட ஞாபகம் வரல இப்போ!) க்ளாஸ்ல அவன் என்கிட்ட பேசறதில்லன்னு தெரிஞ்சு எங்க க்ளாஸ் மாஸ்டர் எங்க ரெண்டுபேரையும் கைகோர்த்து முட்டிகூட போடச் சொன்னார். “நான் பேசுவேன். அவன்தான் பேச மாட்டீங்கறான்”ன்னு நான் சொன்னது எடுபடவே இல்ல. அரை நாள் பூரா அப்படி நின்னும் அவன் என்கிட்ட பேசவே இல்ல. எங்க கணக்கு மாஸ்டர் என்கிட்ட “விடுடா. படிப்ப கவனி. அவன்கிட்ட யாரோ என்னமோ சொல்லீட்டாங்க”ன்னார். ப்ளஸ் ஒன்-ல அவன் இங்க்லீஷ் மீடியம் போய்ட்டான். பாதில திருச்சிக்கு போய்ட்டான். ப்ளஸ் டூ படிக்கறப்போ அவன் திருச்சில சூசைட் பண்ணிகிட்டதா தகவல் வந்து இங்க்லீஷ் மீடியம் பசங்க போய்ட்டு வந்தாங்க. எனக்கு ஒரு ஃபீலிங்க்ஸும் வரல. ஆனா போய்ட்டு வந்த பசங்க “அவங்கம்மா உன்னைக் கேட்டாங்கடா”ன்னப்போ தொண்டை அடைச்சுகிட்டது.

**************************

அதுக்கப்பறம் ஜனனி ஆர்ட்ஸ் வெங்கடாசலம் தம்பி சசிதான். இவன் மேலயும் அப்படி ஒரு ஃப்ரெண்ட்ஷிப். எங்க போனாலும் இவன்கூட சுத்துவேன். இவனும், நானும், பாக்யா ஆர்ட்ஸ் வெச்சிருக்கற நாகராஜும் எப்பப் பார்த்தாலும் ஒண்ணா சுத்தீட்டு ஒரு ட்ரிப் பாண்டிச்சேரியெல்லாம் போனோம். அப்போ மூணு பேரும் கடைசி வரைக்கும் இப்படியே இருக்கணும். மூணு பேரும் ஒரே மாதிரி வீடு கட்டி, நம்ம வைஃப் மூணு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருந்து... இப்படி பல கனவுகள்.. கற்பனைகள். இப்போ ‘ஹாய் ஹலோ’வோட சரி. சசி அடிக்கடி பேசுவான். என் வலைப்பூ படிப்பான். ‘ஒனக்கொரு சூப்பர் டெம்ப்ளேட் ரெடி பண்ணி வெச்சிருக்கேன்’ன்னு ரொம்ப நாளா சொல்றான். பார்க்கலாம்.


ரொம்ப ரொம்ப முக்கியமான ஃப்ரெண்ட்ஷிப்னா அது கனலி, செந்தில்தான். கனலி இப்போ திருப்பூர்லதான் இருக்காரு. செந்தில் லண்டன் போய்ட்டான். இவங்க ரெண்டு பேரையும்தான் நான் மனசாட்சி-ம்பேன். இந்த லிஸ்ட்ல இப்போ சௌந்தரும் வந்திருக்காரு. ஆனா கனலி, செந்தில்ன்னா..... ப்ச்.. சம்திங் எக்ஸ்ட்ரார்டினரி!

இவங்க ரெண்டு பேரும் என்ன சொன்னாலும் எங்கவீட்ல நோ அப்ஜெக்‌ஷன்.

***********************

இதுக்கப்பறம் எனக்குக் கிடைச்ச வலையுலக நட்புகள் பத்தித்தான் ஊருக்கே தெரியுமே... சாரு வெளியிடற பத்து புக், சாரு வெளியிட்ட அடுத்த பத்து நிமிஷத்துல இந்த சாருக்கும் கிடைக்க வைச்ச நண்பர்...

த.மு.எ.ச வெளியிட்ட மாண்ட்டோவின் படைப்புகள்-ங்கற அற்புதமான ஆவணத்துக்கு நிகரான புத்தகத்தை ஜஸ்ட் லைக் தட் அனுப்பி ஒண்ணுந்தெரியாம் அண்ணே சொல்ற நண்பர்... இப்படி ஆரம்பிச்சா உண்மைத்தமிழன் பதிவா நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்டு போகுமளவு நண்பர்கள்!

Monday, March 2, 2009

தூக்கம் உன் கண்களை...




“எந்தப் பழக்கமும் பழகப் பழகப் பழகிவிடும். விடிகாலையில் எழுவதைத் தவிர”

பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன் ரெகுலராக டைரி எழுதிக் கொண்டிருந்த காலத்தில் என் ஒரு வருடத்து டைரியின் முகப்புப் பக்கத்து வாசகம் இது.

இன்னைக்கு வரைக்கும் இந்த அதிகாலை எழுவது வெறும் கனவாவே தொடருது எனக்கு. (எப்படிப் பொருந்துது பாருங்க இந்த வாசகம்!)

நடுவுல கொஞ்ச நாள் காலைல அஞ்சு அஞ்சரைக்கு எழுந்து புக்ஸ் படிப்பேன். திடீர்னு அது ஆறரைக்கு ஷிஃப்ட் ஆகும். மறுபடி ஏழு, ஏழரைன்னு வந்து நிக்குது இப்போ.

இத மட்டும் தொடர்ந்து செய்ய முடிஞ்சா நிறைய நேரம் மிச்சமாகும், ஆனா முடிய மாட்டீங்குது!

எங்க அலுவலக நண்பர்கள் கூட இதப் பத்தி பேச்சு வந்தது. ‘எனக்கும் அப்படித்தான்’ன்னு சில பேர் சொல்ல, எல்லாருமா ஒரு ஷட்டில் டீம் ரெடி பண்ணி, காலைல ஆறு மணிக்கு மீட் பண்றதுன்னு முடிவாச்சு.

நான் இருக்கற ஏரியாலேர்ந்து அங்க போக நாலு கிலோ மீட்டர். அஞ்சரைக்கு கிளம்புவேன். பனி மூட்டம். ஐபாட்ல இளையராஜா சாங்ஸ். அதுவும் கண்டிப்பா ‘காலைத்தென்றல் பாடிவரும்’ & ‘புத்தம் புதுக் காலை’ ரெண்டு பாட்டும் நிச்சயமா இருக்கும். மெதுவா பைக்கை ஓட்டிகிட்டு ரெண்டு பக்கமும் வயல் வெளிகள் இருக்கற ஏரியாவுல இந்தப் பாட்டுகளைக் கேட்கறப்போ ‘சொர்க்கம் மண்ணில்தான்’னு தோணும்.

எல்லாம் நல்லாத்தான் போய்ட்டிருந்தது. திடீர்னு ஒருத்தர் ஆறு-ங்கறது ஆறரைக்கு வெச்சுக்கலாம்னாரு. அங்கதான் ஏழரை ஆரம்பிச்சது. அப்படியே ஒருத்தர் ஒருத்தரா ஜகா வாங்க, ஷட்டில்ல சிங்கிள்ஸ் ஆடலாம்.. ஆனா சிங்கிளா ஆட முடியாதில்ல.. அது ட்ராப் ஆச்சு.

அப்புறம் ஃபேக்டரிக்குள்ளயே நாலைஞ்சு பசங்க ‘சார்.. வாலிபால் விளையாடலாமா சார்’ன்னு கெளப்பினாங்க. எனக்கு ஓக்கே’ன்னேன். கொஞ்ச நாள் அதுவும் விளையாடினோம். அப்பறம் ஃபேக்டரில பிஸி ஆரம்பிச்சப்போ, நைட் வொர்க் வெச்சு, அதிகாலைல அவங்க வர்றதுக்கு ஆப்பு வந்துடுச்சு!

பேசாம வீட்டிலயே எக்ஸர்சைஸ் பண்ணலாம்னு ஒருநாள் நேரத்துல எழுந்து ஆரம்பிச்சேன். மொத நாளே கழுத்துல சுளுக்கு வந்து, நேரா நிக்கறவனப் பார்க்க இடதுபக்கம் திரும்பி நின்னு பார்க்க வேண்டிய நிலைமை வந்துச்சு.

இரவு எத்தனை மணிக்குத் தூங்கறன்னு கேட்டா.. அது கணக்கு வழக்கில்லாம, அடங்காம இருக்கு. ஒரு நாள் 10, 11, 12,1ன்னு அது இஷ்டத்துக்கு போகுது. மொதல்ல எத்தனை மணிக்கு தூங்கினாலும் ஆறு மணிக்கு எழுந்த கிருஷ்ணாக்கு ஏன் இப்படி ஆச்சுன்னு தெரியல. ஆனா இரவு எழுதறதுங்கறது எனக்குப் பிடிச்ச ஒரு விஷயம். வீட்ல திட்டுவாங்க. ‘யூ நோ யுவன் ஷங்கர், ஏ.ஆர்.ரகுமானெல்லாம் நைட்பேர்ட்ஸ். அதுவும் ஏ.ஆர்.ரகுமான் நைட்லதான் ரொம்ப பிஸியா கம்போஸ் பண்ணுவாராம்'ன்னு உமாகிட்ட சொல்லுவேன்.

'அவரு அப்படி வொர்க் பண்ணி ஆஸ்கார் வாங்கீட்டார். நீங்க அட்லீஸ்ட் ஒரு செகண்ட் ஹேண்ட் காராவது வாங்குங்க. அப்புறம் பேசுங்க'ங்கறாங்க. எதாவது சொல்லமுடியுமா?


என் சின்னப் பொண்ணு மேகா, அலாரம் அடிச்சா அடுத்த நிமிஷம் எழுந்து ப்ரஷ் பண்ணப் போயிடறா. நான் என்னடான்னா அலாரம் அடிச்சா, அடுத்த நிமிஷம் அரக்கப் பரக்க எழுந்து கம்ப்யூட்டர் டேபிள், தலகாணின்னு எல்லாத்தையும் தேடி அந்த அலாரத்தை ஸ்டாப் பண்ணீட்டு தொடர்ந்து தூங்கறேன். காலைல எனக்கு எதிரி அந்த அலாரம்தான்! ஏன் இப்படி ஆய்ட்ட கிருஷ்ணா!?!

இத்தனை நாள் இல்லாத சங்கடம் இப்ப ஏண்டா ஒனக்கு-ன்னு நீங்க கேட்கலாம். பதிவெழுத எதையாவது ட்ராஃப்ட் பண்ணி வெச்சுட்டு காலைல ஏர்லி மார்னிங் ஏழரைக்கு எழுந்து, எட்டு டூ எட்டரை வலைல போடுவேன். மார்ச் ஒண்ணாந்தேதியிலேர்ந்து மின்வெட்டு நேரம் 8 டூ 10ன்னு மாத்தீட்டாங்க. (மொதல்ல 12 டூ 2 இருந்தது.. இந்த இருந்ததுன்னு அடிக்கறப்போ ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா இருண்டதுன்னு வந்தது. அதுவும் சரிதானே!)

பாருங்க.. இந்த வலையுலகத்துக்கு வந்த சோதனைன்னு நான் நெனைச்சுட்டேன்.

‘ஏன் இன்னைக்கு உங்க ப்ளாக்ல ஒண்ணும் அப்டேட் பண்ணல’ன்னு கேட்டு வந்த ஆயிரக்கணக்கான மெயில்களுக்கு இதுதான் பதில்!

காலைல நேரத்துல எழுந்திருக்க ஏதாவது ஐடியா சொல்லுங்க.. ப்ளீஸ்.

உங்களுக்குப் புண்ணியமாப் போகும்!

Friday, February 27, 2009

பெயரில் என்ன இருக்கிறது?


பெயரில் என்ன இருக்கிறது?

ஷேக்ஸ்பியர் தொடங்கி நீலபத்மநாபன் வரை இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டார்கள். ஆமாம்.. பெயரில் என்ன இருக்கிறது...?

யோசித்துப் பார்த்தால் ஒன்றுமில்லைதான். ஆனால் ஒரு பெயரை வைக்க, நமக்குத் தெரிந்தவர்கள் ‘என் பையனுக்கு/பொண்ணுக்கு ஒரு நல்ல பேர் சொல்லுங்க சார்’ எனும்போது அப்படி நினைக்க முடிகிறதா?

நியூமராலஜி கந்தாயங்களை விடுங்கள். ‘நாம வைக்கற பேரு நல்லாயிருக்கணும், பெரிசானா சம்பந்தப்பட்டவங்க நம்மளைத் திட்டக்கூடாது’ என்று எப்படியெல்லாம் யோசிக்கிறோம்!

நான் என் முதல் மகளுக்குப் பெயர் வைக்க மிகவும் யோசித்தேன். யாரிடமாவது ‘ஐடியா சொல்லுங்க’ என்று கேட்டால் ‘மொத லெட்டர் என்ன?’ என்று கடுப்பேற்றினார்கள். அப்போது நான் வைரமுத்துவின் புத்தகங்களை மாய்ந்து மாய்ந்து படித்துக் கொண்டிருந்த நேரம். ‘சிகரங்களை நோக்கி’ படித்துக் கொண்டிருந்தேன். ‘ஓவியா’ என்ற அதில்வரும் கதாபாத்திரத்தில் ஈர்க்கப்பட்டு அந்தப் பெயரை வைக்கலாம் என்று நினைத்திருந்தேன்.

நண்பர் ஒருவரது கடையில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது நாங்கள் ‘மச்சான்’ என்றழைக்கும் எனது நண்பர் ஒருவர்தான் மீரா என்ற பெயரைச் சொல்ல.. உடனே மிகப் பிடித்துப்போய், சைக்கிளை அவசர அவசரமாக மிதித்து, நகராட்சி அலுவலகம்போய், அந்தப் பெயரை பர்த் சர்ட்டிஃபிகேட்டில் பதிவுசெய்து, பிறகுதான் உமாவிடமே அந்தப் பெயரைச் சொன்னேன்! இரண்டாவது மகளுக்குப் பெயர் வைக்கும்போது வழக்கமான எல்லாப் பெற்றோர்கள் போலவே (ரைமிங் முக்கியம்..!) மீராவுக்கு ரைமிங்காக மேகா என்று சட்டென்று வைத்துவிட்டோம்!

அதேபோல கதைகள் எழுத ஆரம்பித்தபோது என் சொந்தப் பெயரிலேதான் எழுதினேன். கவிதைக்கு வேறொரு புனைப்பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தபோது ‘சட்’டென்று அம்மா, அப்பா பெயர்களின் (அனந்தலட்சுமி-பாலசுப்ரமணியன்) முதல் பகுதிகளை இணைத்து ‘அனந்த்பாலா’ என்று வைத்துக் கொண்டேன். அந்தப் பெயர் எனக்கு மிகப் பிடித்த ஒரு பெயர்.

அதேபோல எழுத்தாளர் சுஜாதா (இன்றைக்கு அவரை நினைக்காமல் இருக்க முடியுமா!) கணையாழியின் கடைசி பக்கங்களில் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் என்ற பெயரில் எழுதி, அவரே சுஜாதா என்ற பெயரின் ஸ்ரீரங்கம் எஸ்.ஆரை வம்புக்கிழுத்ததெல்லாம் படித்து, நாமளும் ரெண்டு மூணு புனைப்பெயர் வெச்சுகிட்டா என்ன’ என்று நினைத்து ஒரு சில கதைகளை ‘சத்ரியன்’ என்ற பெயரில் அனுப்பினேன்!

இதைவிடக் கூத்து என்னவென்றால்... விவேக்-ரூபலா, பரத்-சுசீலா, நரேன்-வைஜயந்தி, போல நாளைக்கு நாம ஃபேமஸ் எழுத்தாளராகும்போது நம்ம டிடக்டீவ்க்கு என்ன பேர் வைக்க என்று விட்டத்தைப் பார்த்து யோசித்து, யோசித்து அஷோக்ராஜா என்ற பெயரையும் வைத்து ஒரு நாவல் ஐந்தாறு அத்தியாயங்கள் எழுதினேன். நல்லவேளை தமிழர்கள் தப்பித்தார்கள்!

வலைப்பதிவு ஆரம்பித்தபோது, இந்தக் குழப்பமெல்லாம் இருக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கும். (நானெல்லாம் எப்படி வலைப்பதிவு ஆரம்பிச்சேன்னு இல்ல!) அதாவது ப்ளாக்கரின் உள்ளே புகுந்து அது பெயர் கேட்டபோது, அதிகபட்சம் ஐந்து நிமிடங்களில் இந்த பரிசல்காரன் என்ற பெயரை நானாக செலக்ட் செய்து அடித்துவிட்டேன். (இந்தப் பெயர்க்காரணம் கேட்பவர்களுக்கு.. இதோ இந்தப் பதிவில் பதிலிருக்கிறது!) மிகவும் யோசித்து செய்யும் எதையும் விடவும், டக்கென்று வந்துவிழுகிற சில, நல்லவண்ணம் க்ளிக் ஆகும் என்பதற்கு இந்தப் பெயரே உதாரணம்.

சென்றவாரம் கிழக்கு பதிப்பக முதன்மை உதவி ஆசிரியர்களில் ஒருவரும், பதிவருமான ச.நா.கண்ணன் திருமணத்துக்குப் போக முடிவெடுத்து காலை ஆறரை மணிக்கு நண்பர் வெயிலானின் அலுவலக வாசலில் பைக்கை நிறுத்த.. அங்கிருந்த வாட்ச்மேன் பெரியவர் “யாருங்க நீங்க?” என்றார். “இல்லீங்க வெயிலான் சாருக்காக வெய்ட் பண்றேன்” எனக்கூற அவருக்குப் புரியவில்லை. எனக்கு அவசரத்தில் வெயிலானின் நிஜப்பெயரே ஞாபகத்துக்கு வரவில்லை. யோசித்து ‘உங்க மேனேஜர் ரமேஷ்’ என்றபோதும் அவர் யோசனையாகவே தலையசைத்தார். பிறகு வெயிலானிடம் இதுபற்றிச் சொன்னபோது ‘ஸ்ரீகாந்த்னு சொன்னாத்தான் தெரியும்” என்றார்.

திருப்பூர் வலைப்பதிவர் பேரவையின் பொருளாளரான ஈரவெங்காயம் சாமிநாதன் பெயரை எனது அலைபேசியில் ஈரவெங்காயம் என்று சேமித்து வைத்திருந்து, அவர் அழைப்பு வரும்போதெல்லாம் ஒரு புன்னகையோடுதான் எடுக்கிறேன். (ஈரவெங்காயம் காலிங்...) நேற்று சந்தித்தபோது தன் வலைப்பெயரை மாற்றப் போவதாகச் சொன்னார். மாற்றாதீர்கள்.. நாங்கள் உங்கள் பெயரைச் சுருக்கி.. ஈ.வெ.சா (ஈர வெங்காயம் சாமிநாதன்!) என்று கூப்பிடுக் கொண்டிருக்கிறோம்.. அது நல்லாயிருக்கு!

வடகரை வேலன் அண்ணாச்சியை அழைத்து ‘வேலனா.. நாங்க ஐ.சி.ஐ.சி.ஐ-லேர்ந்து பேசறோம்’ என்று நாமக்கல் சிபி கலாய்த்தபோது அவர் சொன்னாராம்.. ‘என்னை வேலன்னு பதிவர்களைத் தவிர யாரும் கூப்பிடமாட்டாங்க.. ஏன்னா என் பேரு ராஜேந்திரன்’ என்றாராம். (அடுத்ததாக கலாய்க்கறவங்க நோட் பண்ணிக்கங்கப்பா!) அதைவிடவும் நாங்களெல்லாம் ‘அண்ணாச்சி... அண்ணாச்சி’ என்றழைப்பதில்தான் அவர் இன்னும் மகிழ்ந்திருக்கக் கூடும். அவரது ஜிமெயில் ப்ரொஃபைலில் அவரே மாற்றிவிட்டாரே... அண்ணாச்சி என்று!

ஈரோட்டுத் தொழிலதிபர் நந்து... ‘நிலா ஃபாதர்தானே நீங்க’ என்று பலரும் கேட்கும்போதெல்லாம் எத்தனை அகமகிழ்வார் என்பதை ஒரு மகளின் தந்தையாய் என்னாலும் உணரமுடிகிறது.

நான் மிகவும் மதிக்கும் பதிவர்களில் ஒருவரான எழுத்தாளர் பைத்தியக்காரனை அழைத்து நேற்று முன்தினம் பேசிக் கொண்டிருந்தேன்.. ‘எப்படி இப்படியொரு பெயரை தேர்ந்தெடுத்தீர்கள்’ என்று கேட்க நினைத்தேன். அல்லது ‘எப்படி எல்லாருக்கும் பொதுவானவொரு பெயரை நீங்கள் மட்டும் வைக்கலாம்’ என்றும் கேட்டிருக்கவேண்டும்! அவர் என்னோடு நெருங்கிய நண்பராய்ப் பேசிக் கொண்டிருந்ததில் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கவே நேரம் சரியாய் இருந்தது. ‘நான் சாதாரணமானவன்தாங்க பரிசல்.. நேர்ல பார்த்தா தோள்ல கைபோட்டு பேசுவேன்’ என்றார். என் தோளில் விழுவது உங்கள் கைக்கு சாதாரணமாக இருக்கலாம். என் தோளுக்கு எவ்வளவு பெரிய விஷயமது!

ச.நா.கண்ணன் திருமணத்தில் எழுத்தாளர்கள் பா.ராகவன், மருதன், முத்துக்குமார் ஆகியோரைச் சந்தித்து கிருஷ்ணகுமார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அடுத்ததாக ‘பரிசல்காரன்’ என்று சொன்னபோது ‘ஓ! அது நீங்கதானா’ என்று அவர்கள் சொன்னபோதும், குலுக்கிய கையை இன்னும் அழுத்தமாய்ப் பிடித்தபோதும் மிக மகிழ்வாய் இருந்தது.

பெயரில் என்னவோ இருக்கிறது!