பாலா படத்தைப் பொறுத்தவரை... ‘இந்த மாதிரியெல்லாம் இருக்காது.. இவரு படம் வேறமாதிரி’ என்று ரசிகனை தன் தளத்தை நோக்கி இழுத்துவந்து உட்கார வைப்பதில் பாலா ஜெயிக்கிறார்.
இன்றைய தமிழ்ச்சினிமாச் சூழல் என்பது - ரசிகத்தன்மையைப் பொறுத்தவரை- கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவே இருந்துவருகிறது. ஒரு திரைப்படத்தின் ஓபனிங் கதாநாயகர்களுக்காகத்தான் இருந்துவருகிறது. பாலாவின் நான் கடவுள் பாலாவுக்காக மட்டுமே இந்த ஓபனிங்கை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல கொஞ்சம் இளையராஜாவுக்காகவும். இருவருமே ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறார்கள். அதில் இளையராஜா கொஞ்சம் அதிகமாகவே.

நேர்மையாய் இருப்பவர்களுக்கே இந்த ஆடை தெரியும் என்று சொல்லப்பட்டு, நிர்வாண மன்னனை எல்லோரும் பாராட்டியதுபோல நான் பாராட்டத் தயாரில்லை என்கிறார்கள் சில பேர். மெத்தச்சரி.
எல்லாரும் பாராட்டுவதற்காகப் பாராட்டுவது எவ்வளவு தவறோ அதேபோல எல்லாரும் பாராட்டுகிறார்கள் என்பதற்காக சிலர் திட்டுவதும்.
திட்டும் அளவுக்கு அப்படி ஒன்றும் கேவலமான புரிதலற்ற படமில்லை நான் கடவுள்.
பல வருடங்களுக்கு முன் ஜோசியர்கள் சொல்கேட்டு தந்தையால் காசியில் விடப்பட்ட நாயகனைத் தேடி வரும் தந்தை, நாயகனைத் தன்னுடன் கூட்டிப் போக விழைகிறார். நாயகனின் குரு, “நீ ஒரு சாதாரண மனிதனல்ல, உனக்கு சொந்த பந்தங்கள் இருக்கக் கூடாது. போய் அவற்றைக் களைந்துவிட்டு வா” என்கிறார்.
குருவிடம் இருந்த காலங்களில் ஒரு அகோரியாக இருந்தவன் நாயகன்.

(வட நாட்டில்... மண்டை ஓட்டில் உணவருந்தும் ஒரு அகோரி)
(படக்காட்சி அல்ல)
(படக்காட்சி அல்ல)
(அகோரி என்பவர்கள் நரமாமிசம் உண்டு வாழ்பவர்கள் என்ற கருத்துண்டு. ஓரளவு உண்மையாயினும் இவர்கள் தாமாக உயிர்களை அழித்துக் கொல்வதாக எங்கும் சொல்லப் படவில்லை. இன்றளவும் வாரணாசி உட்பட சில வட நகரங்களில் அகோரிகள் சாதாரண மனிதர்கள் போலவே உலாவருகின்றனர் எனச் சொல்லப்படுகிறது.)
அவ்வாறு அகோரியாக இருந்த அவன் சொந்த பந்தங்கள் என்ற பற்றை..., அந்த ஊரில் அவனிருக்கும்போது அவனிடம் ‘சாமி… சாமி..’ என்று பற்று வைக்கும் அம்சவல்லியின் பற்றை, எவ்வாறு அறுத்தெறிகிறார் என்பதே கதை. தனது பற்றை அறுக்க அம்சவல்லிக்கு அவர் அந்த முடிவைத் தரவில்லை... அவளது துன்பங்களிலிருந்து அவளை விடுவிக்கவே அந்த முடிவு என்பதும் ஒரு கோணம்.
நாயகியரின், பெண்களின் இடை உடைகளில் சதையைக் காட்டும் படங்களுக்கு மத்தியில் மாற்றுத் திறன் கொண்ட எண்ணற்ற பிச்சைக்காரர்களின் முகங்களைக் காட்டி கலங்க வைத்திருக்கிறார் பாலா. பிச்சைப்பாத்திரம் பாடலை தொலைக்காட்சியில் பார்க்க நேரிட்ட என் தோழி ஒருத்தி ‘ஐயோ இந்தப் படத்துக்கு நான் போக மாட்டேன்ப்பா’ என்று சொன்னதுதான் இந்தப் படத்தின் பலமும் பலவீனமுமாய் இருக்கிறது!
அப்புறம் பாலாவின் பாத்திரத் தேர்வுகள்..
ஆர்யாவுக்கும், பூஜாவுக்கு இது வாழ்நாள் முழுதும் சொல்லிக் கொள்ளக் கூடிய படம். மீடியாக்களில் சொல்லவில்லை என்றால் நாயகி பூஜாதான் என்பதை எவராலும் கணிக்க முடியாது.
காசியில் ஆர்யாவின் குருஜி-யில் தொடங்கி, பிச்சைக்காரர்கள் கூட்டத்தில் அந்தத் தாத்தாவின் (கவிஞர் விக்ரமாதித்யன்) மடியில் மழலை சிரிப்பு சிரித்தபடியே இருந்த குழந்தை உட்பட ஒவ்வொரு கேரகடர்களும் அற்புதம். எந்தக் குறையுமில்லை. அந்த வில்லன் தாண்டவன்... பேச்சிலும், பாடி லாங்குவேஜிலும் ஆர்.பி.விஸ்வத்தை உரித்து வைத்திருக்கிறார். நல்லதொரு வரவு. (பேரு ராஜேந்திரன்-னு படிச்சதா ஞாபகம்!)
பிச்சைக்காரர்கள் வாழ்வைக் காட்டும்போது எங்கே சோக வயலினுடன் தூங்க வைத்துவிடுவார்களோ என்று நினைத்தால் அவர்களுக்குள் இருக்கும், கிண்டல் கேலியை படம் நெடுகிலும் தூவி பார்வையாளர்களை கவர்கிறார் இயக்குனர்.
தன் தந்தையை விட்டு வரும்போது அவருக்காக அழும் அம்சவல்லி, தாண்டவன் & கோ-விடம் சிக்கியதும் இங்கே இவர்களுக்காக அழும்போது, அவர்கள் அவர்கள் வாழ்வை எவ்வளவு ஈஸியாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பதைக் காட்ட முயன்றிருக்கிறார் இயக்குனர்.
காசியிலிருந்து படம் மலைக்கோயிலுக்கு வரும்போது கண்ணைமூடிக் கொண்டு படம் வேறு தளத்திற்குப் பயணிக்கிறது என்று சொல்லக்கூடிய பின்னணி இசை அபாரம். நாயகனை அனுப்பும்போது குருஜி பேசுமிடத்திலும், அம்மாவிடம் அப்பா நாயகன் இத்தனை வருடம் என்ன செய்து கொண்டிருந்தான் என்று சொல்லுமிடத்திலும் இசை மூலமாகவே படத்தை விளக்கியிருக்கிறார் ராஜா. அந்த சிவோஹம் பாடலும், வீட்டு மாடியில் உடுக்கையடிக்கும்போதும், தந்தை நாயகனைக் கண்டு கொள்ளும் காட்சியிலும் ஒலிக்கும் பின்னணி இசைக்கு என்ன கொடுத்தாலும் தகும்.
இயக்குனர், இசைக்கு அடுத்து பார்வையாளர்களின் அதிக கைதட்டலை படத்தின் வசனங்கள் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. காரணம் சில ஆழமான வசனங்களுக்கு மக்கள் தரும் கரவொலி அவர்களின் ஆழ்ந்த புரிதலை வெளிப்படுத்துவதால். வசனகர்த்தா திரு.ஜெயமோகனிடம் இதுகுறித்துப் பேசியபோது “பல இடங்களில் அந்தந்தக் கேரக்டரைப் பேசவைத்துப் பதிவு செய்யப் பட்டது. ஸ்பாட் ரெகார்டிங். அந்த சமயத்தில் அந்த கேரக்டர் என்ன சொல்லும் என்பதைத்தான் வசனமாய் எழுதினேன்” என்றார். என்றாலும் ‘நெருப்புல ஏதுடா சுத்தம், அசுத்தம்’ என்று நாயகன் கேட்பதும், பிச்சைக்காரர்கள் தங்களுக்குள் அமைச்சரவை ஒதுக்குவதும், காவல் நிலையத்தில் பூஜா குடும்பத்தினர் ஆடிப்பாடும்போது நடக்கும் சம்பாஷணைகளும் ஜெயமோகனின் ஆளுமையைக் காட்டுகிறது. சபாஷ் ஜெமோ!
குறைகள்?
திரைக்கதை நேர்த்தியில் கொஞ்சம் கோட்டை விட்டுவிட்டார். அதேபோல பாலா படம் என்றால் இப்படித்தான் என்ற கட்டுக்குள் பாலா மாட்டிக் கொண்டுவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. நாயகன் யாருக்கும் அடங்கமாட்டான் (சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள்), அவ்வளவு ஈஸியாக காதலிக்க மாட்டான் (சேது நீங்கலான மற்ற படங்கள்) என்பது போன்ற ரிபீடேஷன்கள்.
சேதுவின் பாண்டிமடம், நந்தாவில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி போன்றே இதில் பிச்சைக்காரர்களின் இடமும். நன்றாகத்தான் இருக்கிறதெனினும்... மாற்றமில்லாவிட்டால் ஒருவித லேபிளில் பாலா மாட்டிக் கொள்ளும் அபாயமிருக்கிறது.
அதேபோல இந்தப் படத்துக்காக ராஜா போட்ட இரண்டு நல்ல பாடல்களை படத்தில் சேர்க்காததற்கு பாலாவிற்கு குட்டு!
“ஒண்ணும் புரியல... ஆனாலும் ரெண்டரை மணிநேரம் ஒக்கார வெச்சுட்டாருடா” என்ற கமெண்டை வெளியே வருகையில் கேட்க முடிந்தது.
வெற்றி, தோல்வி என்பதற்கப்பாற்பட்டு பாலா பாராட்டுக்குரியவர் என்பதை நிரூபித்துவிட்டார்.
நான் கடவுள் – எனக்குப் பிடிச்சதுப்பா!