Friday, September 12, 2008

அதிஷாவுக்கு நேர்ந்த கொடுமை!




(ராஜ், அடியேன், வெயிலான், அதிஷா)


இந்தப் பதிவை இன்றைக்கு எழுதலாமா, நாளைக்கு எழுதலாமா என்று யோசித்து யோசித்துக் குழம்பிப் போய், ‘சரி... நாளைக்கே எழுதலாம்’ என்று நேற்றைக்கு முடிவானதால் இன்றைக்கு எழுதுகிறேன்.

பதிவர் அதிஷாவிடமிருந்து நேற்று (12.09.08) ஒரு அழைப்பு வந்தது.

“கிருஷ்ணா.. நான் கோவையில இருக்கேன். உங்களைப் பார்க்க திருப்பூர் வந்துகிட்டிருக்கேன். அஞ்சு மணிக்குள்ள வந்துடுவேன்”

வலையில் கொஞ்ச நாளாக அதிஷாவின் பங்களிப்பைக் காணோமே, மனுஷன் இங்க இருக்காரா என்று நினைத்தபடி வெயிலானுக்கு ஃபோன் போட்டேன். (அந்த ஃபோனை அவர் புடிச்சாரா-ன்னு கேக்கக்கூடாது!)

அதிஷா திருப்பூர் வந்து கொண்டிருப்பதைச் சொன்னேன். அவர் உடனே இன்னோரு பதிவரான ராமன் என்பவருக்கு ஃபோன் போட்டு “மச்சான்... ஒருத்தன் சிக்கீருக்காண்டா” என்று விளக்கிவிட்டார்.

எனக்கு ஈரவெங்காயம் என்ற பெயரில் பதிவெழுதும் சாமிநாதன் ஞாபகம் வந்தது. நமக்குத்தான் எதையும் நேரடியாகச் சொல்லியே பழக்கமில்லையே....

“சாமிநாதன்.. ஃப்ரீயா?”

“ஏன் கிருஷ்ணா.. என்ன விஷயம்?”

“அதிஷா-ன்னு ஒரு பதிவர் இருக்காங்கள்ல.. அந்த மேடம் இப்ப திருப்பூர் வந்துகிட்டிருக்காங்க”

“மேடமா? சும்மா கத விடாதீங்க. நேத்துதான் அவரும் லக்கியும் இருக்கற ஃபோட்டோ வரவணையான் ப்ளாக்ல பார்த்தேன்”

“அதெல்லாம் வலையுலக நுண்ணரசியல் சாமிநாதன். ஆக்சுவலா அந்தப் பொண்ணு பேரு விநோதினி. வினோத்-ன்னு சொல்லி ஆம்பிளையா காமிச்சுக்குது”

“அப்ப லக்கிகூட...”

“அது சும்மா. அவரு ப்ளாக்கரே அல்ல. லக்கியோட ஃப்ரெண்டு. ப்ளாக்ல ஏதாவது பொண்ணுங்க ஃபோட்டோ போட்டு பார்த்திருக்கீங்களா? இதெல்லாம் லக்கியோட ஐடியா”

“எ..என்ன சொல்றீங்க?”

“சரி.. ஒண்ணு கேக்கறேன். லக்கியைத்தவிர வேற யார்கூடயாவது அதிஷா ஃபோட்டோவைப் பார்த்திருக்கீங்களா?”

கொஞ்சம் யோசித்துவிட்டு.. “இல்ல”

“அதான் மேட்டரு. அந்தப் பொண்ணு லக்கியோட வேலை செய்யுது. லக்கிதான் ‘பொண்ணுன்னு காமிச்சுக்காதம்மா. பல கிராதகனுக இருக்கானுக’ன்னு அட்வைஸி, இந்த மாதிரி நாடகம் நடத்திகிட்டு இருக்காரு”

“ஓஹோ... அவங்க எப்ப திருப்பூர் வர்றாங்க?”

“வந்தாச்சு. இன்னும் பத்து, பதினைஞ்சு நிமிஷத்துல ஹோட்டல் சரவணாஸ்ல இருப்பாங்க”

“பத்தே நிமிஷத்துல அங்க வர்றேன்” என்று வைத்துவிட்டார்.

அதற்குள் வெயிலான் காரெடுத்துப்போய் அதிஷாவையும், அவருடன் வந்திருந்த கோவை நண்பர் கோகுலையும் அழைத்துக் கொண்டு வந்தார். நான் சாமிநாதன் மேட்டரைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, பச்சை சுடிதாரில் ஒரு பெண் கையில் பேக்குடன் அந்த ஹோட்டலை நோக்கி வந்து எங்களுக்கு அருகே வந்து நின்றுகொண்டு யாருக்காகவோ காத்திருந்தது.

சாமிநாதன், அதிஷா ‘மேடத்தை’ப் பார்க்கும் ஆவலில் வீட்டுக்குப் போய் டிரெஸ் மாற்றிக்கொண்டிருந்தாரோ என்னமோ ஆளையே காணவில்லை. கொஞ்ச நேரத்தில், கூலிங்க்ளாஸெல்லாம் போட்டுக் கொண்டு பைக்கில் ஸ்டைலிஷாக வந்துகொண்டிருந்தார். தூரத்தில் அவரைப் பார்த்ததும் அதிஷா கொஞ்சம் நகர்ந்து நின்றுவிட, நானும், வெயிலானும் அந்த பச்சைச் சுடிதார் பெண்ணுக்கு முன் போய் நின்று கொண்டு அவரைப் பார்த்து கையசைத்தோம். அவர் வந்து கூலிங்க்ளாஸை ஸ்டைலாக கழற்றியபடி “ஹாய்.. வணக்கம்” என்று சொல்லிக் கொண்டே பச்சைச் சுடிதாரைப் பார்த்துக் கொண்டே இருந்தார். ‘சீக்கிரம் இண்ட்ரட்யூஸ் பண்ணுங்கடா’ என்று நினைத்திருப்பார் போல. அடிவாங்கத் தெம்பில்லாத காரணத்தால் நாங்கள் சிரித்துவிட, அவரும் புரிந்து கொண்டு சுற்று முற்றும் பார்த்து “அவருதானே அதிஷா?” என்றபடி ஐக்கியமாகிவிட்டார்! கொஞ்ச நேரத்தில் பதிவர் ராமன், அவரது நண்பர் வெங்கட்ரமணனுடன் வந்து சேர்ந்தார்.


(வெயிலான், அதிஷா, உயரமான ராம், அடியேன், வெயிலானின் சாரதி ராஜ், அதிஷா பொண்ணுன்னு சொல்லி ஏமாத்தீட்டாங்களே என்று தலைகுனிந்து நிற்கும் சாமிநாதன்)


அதிஷாவின் தங்கை மகள் ஹரிணிக்கு (ஞாயிறு) காதணி விழா. மருதமலையில். அதற்கு அழைப்பு விடுத்து விட்டு, அப்படியே மினி பதிவர் சந்திப்பு நடத்திவிட்டுப் போகத்தான் வந்திருந்தார். (ஆனால் பதிவர் சந்திப்புதான் நடந்தது. மினி இல்லை! ப்ச். அதிஷா விரதமாம்!)





(சாமிநாதன், ராஜ், வெயிலான், ராமன், அதிஷா, வெங்கட்ரமணன்)

சரவணாஸில் நாங்கள் எட்டு பேரும் ஒரே டேபிளைச் சுற்றி உட்கார்ந்து ஆளாளுக்கு ஒவ்வொன்றை ஆர்டர் செய்து சாப்பிட்டபடி சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தோம். இடையிடையே அதிஷாவுக்கு அவரது டேமேஜரிடமிருந்து ஃபோன் வர.. “மதுரையைத் தாண்டீட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல திருச்சி போயிடுவேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தார். (உண்மைத் தமிழன் ஃப்ரெண்டு இப்படி பொய் சொல்லலாமா?)

ராமன் ‘இவர்தான் பரிசல்காரன்’ என்று என்னை அவரது நண்பருக்கு அறிமுகப்படுத்தி விட்டு, என்னிடம் வந்து ‘ஆமா.. நீங்க யாரு?’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். ‘நீங்களும் அதிஷாவும் டென்ஷனாவே இருக்கீங்க’ என்று டென்ஷனாகச் சொல்லிக் கொண்டேயிருந்தார். (நீங்க எல்லாரும் பிஸினஸ் மேக்னட்ஸ்!, வெயிலான் மேனேஜராய்ட்டாரு. நாங்க மேலிடத்துல டூப்படிச்சுட்டு வந்து சந்திப்பு நடத்தறோம். டென்ஷனாகாம எப்படியிருக்கும்?)

ராமனின் நண்பர் வெங்கட்ரமணன் பிஸினஸே கண்ணாக வந்தவர்களில் தனது லைனில் யாராவது இருக்கிறார்களா என்று விசாரிப்பதிலேயே குறியாக இருந்தார். (நைஸ் மேன்!)

அதிஷாவின் நண்பர் கோகுலுக்கு நான் அடித்த மொக்கை ஜோக்குகள் புரியவில்லை. போதாத குறைக்கு அதிஷா வேறு அவரிடம் ‘போயும் போயும் இந்தாள் பக்கத்துலயா உட்கார்ந்த?” என்று கேட்டு விட்டார். அதனாலேயே அவர் ஒருவிதப் படபடப்புடன் காணப்பட்டார்.

ராம் நாங்கள், (சிவா-திவா போன்ற) சீரியஸாக சில டாபிக்குகள் பேசிக் கொண்டிருந்தபோது “என்னங்க... ப்ளாக்னா இவ்வளவு அரசியலா? ஆனா நீங்க எழுதறது அவ்ளோ ஜாலியா இருக்கு. பேசறது வேற மாதிரி இருக்கு?” என்று கேட்டார். ‘அது எழுத, இது பேச’ என்று சமாதானப் படுத்தினோம்.


(வெயிலான், அதிஷாவின் நண்பர் கோகுல், அதிஷா, மறைந்திருந்து பார்க்கும் ராம், அடியேன், ராஜ், சாமிநாதன்)


வெயிலானையும், அவரது சாரதி ராஜையும் பற்றிச் சொல்லாமல் இருக்கமுடியாது. வெயிலானின் கார் சாரதியான ராஜுக்கு ப்ளாக் உலகம் பற்றி பலவிஷயங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார் வெயிலான். ஒரு மேனேஜர், இவர் என் கார் ட்ரைவர் என்ற எந்தவிதப் பாகுபாட்டையும் வெயிலானிடம் பார்க்கமுடியாது. அதற்காக வெயிலானுக்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட். (ஒரு மனிதன் மனிதனாக நடந்துகொள்வதை தனியாகப் பாராட்ட வேண்டிய அளவுக்கு மனிதம் குறைந்துவிட்டதா...)


ஒரு வழியாக சாப்பிட்டு முடிந்து, வீட்டுக்குப் போகலாம் என்று நினைத்த போது அதிஷா மறுத்துவிட்டார். “ஸாரி கிருஷ்ணா. உங்க குட்டீஸைப் பார்க்கணும்ன்னு நானும் ஆசையா இருந்தேன். ஆனா எங்க மேனேஜர்கிட்ட இன்னும் இருபது நிமிஷத்துல திருச்சி போய் ஒரு மெய்ல் பண்றேன்’ன்னுட்டேன். மெய்ல் அனுப்ப வேண்டிய டீட்டெய்ல்ஸ் லாப்டாப்ல இருக்கு. சீக்கிரம் கோவை போய் அனுப்பணும்” என்று கிளம்பத் தயாரானார்.

கேமரா கொண்டுவரவில்லையே என்று வருத்தப் பட்டுக் கொண்டிருந்த போது சாமிநாதன் தனது நோக்கியா மொபைலில் படங்கள் எடுத்துக் கொடுத்தார்.


சிகரெட் வேண்டாமே என்று சொன்னாலும் கேட்காமல் சிகரெட் அடித்துவிட்டு வெயிலானோடு காரில் கிளம்பிவிட்டார்!

சரி... அப்படி என்ன கொடுமை அதிஷாவுக்கு நேர்ந்தது என்று கேட்கிறீர்களா?

அவர் திருப்பூர் வந்து இறங்கியதும் ஒரு இவரிடம் வந்து ஒரு நோட்டீஸ் கொடுத்திருக்கிறார். “பஸ்ஸிலிருந்து அத்தனை பேர் இறங்கினோம். அதெப்படி அவன் என்னை வந்து பார்த்து இந்த நோட்டீஸைக் குடுக்கலாம்” என்று பொருமித் தள்ளிவிட்டார் மனுஷன்!

அப்படி அந்த நோட்டீஸில் என்ன இருந்தது என்றால்.....

வேண்டாம். சொன்னால் திட்டுவார்!

(சந்திப்பு நடந்து அரை மணிநேரத்துக்குள்ளேயே, புகைப்படங்களை மின்னஞ்சலில் அனுப்பி ஆச்சர்யப்படுத்திய சாமிநாதனுக்கு நன்றிகள்!)

விஜய் டி.வி-யில் வலைபதிவர்கள் நிகழ்ச்சிகள்!

விஜய் டி.வி-யின் நிகழ்ச்சிகள் இப்பொழுது உணர்ச்சிகளை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்வது போல ஆகிவிட்டது. யார் அடுத்த பிரபுதேவா, ஜோடி நெ. 1, சூப்பர் சிங்கர், கனா காணும் காலங்கள், தமிழ் பேச்சு என் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஏதாவது ஒரு அழுகாச்சியைக் காண்பிக்காமல் இருப்பதில்லை. அவர்கள் அழுவதெல்லாம் உனக்கு விளையாட்டா என்று கேட்காதீர்கள். அதெல்லாம் ஓக்கே, அதை அளவுக்கு அதிகமாய்க் காண்பித்து டிராமா பண்ணவேண்டிய அவசியம் என்ன வந்தது என்றுதான் கோபமாய் இருக்கிறது.

அடுத்தது என்ன ப்ரோக்ராம் செய்ய என்று விஜய் டி.வி.க்கு சில யோசனைகள் சொல்லலாமா என்று யோசித்தபோது, இப்போதைக்கு நடத்துகிற ப்ரோக்ராமையே வலைப்பதிவர்களுக்காக நடத்தினால் என்ன என்ற யோசனை வந்தது... இனி நிகழ்ச்சிகள்...



சூப்பர் பதிவர்:-


போட்ட பத்து நிமிடங்களில் சூடான இடுகைக்குப் போகவேண்டும்.

போட்ட உடனேயே தமிலிஷ்.காமில் முகப்பில் வரவேண்டும்.

கொஞ்ச நேரத்திலேயே பத்து, பதினைந்து பின்னூட்டம் வரவேண்டும்!

(இப்போதைக்கு இந்தவிஷயத்தில் யார் சூப்பர் என்று லக்கிருந்தால் தெரிந்துகொள்வீர்கள்!)


உங்களில் யார் அடுத்த குசும்பன்:-



எல்லாப் பதிவுகளிலும் போய் ஒன்றுக்கு மேற்பட்ட பின்னூட்டம் போட வேண்டும்.

அதில் சிலவற்றைப் பார்த்து வயிறு வலிக்கச் சிரிப்பு வரவேண்டும்.

சமீபத்திய சில புகைப்படங்களைக் கார்டூனாக்க வேண்டும்.

நீங்கள் பின்னூட்டம் போட்டிருக்கிறீர்களா என்று பார்த்து, பதிவை விட்டுவிட்டு உங்கள் பின்னூட்டத்தைப் படிக்கவே வாசகர்கள் வரவேண்டும்.


ஜோடி.நெ.1



இப்போதைக்கு இந்தப் போட்டியில் இரண்டுபேர் டைட்டிலையே வென்றிருக்கிறார்கள்.

1. யெஸ்.பாலபாரதி-மலர்வனம் லட்சுமி
2. மங்களூர் சிவா – பூங்கொடி

விதிகள் வேறொன்றுமில்லை... இரு ஜோடிகளுமே பதிவர்களாக இருக்க வேண்டும்!




விளம்பர இடைவேளைக்குப் பின் அறிவிப்புகள் தொடரும்...


டொட்டடாய்ங்......



























இன்று ஓணம் கொண்டாடும் சேச்சி, சேட்டன்மாருக்கு ஓணம் வாழ்த்துக்கள்!


அறிவிப்புகள் தொடர்கிறது...


நீயா-நானா:-


யாராடோவது பதிவுக்குப் போய் அவர் பதிவுக்கு எதிர் கருத்துக்களைப் போட்டு, அவரை வம்புக்கிழுத்து விவாதப் போர் நடத்தவேண்டும்.

இப்போதைக்கு டைட்டில் ஹோல்டர்: வால்பையன்


வலைப்பூ காணும் காலங்கள்



புதிதாக களத்துக்கு வரும் பதிவர்களுக்காக..

எல்லா பதிவர்களுக்கும் போய் பதிவைப் படித்து, பின்னூட்டம் போட்டு தான் ஆரம்பிக்கவிருக்கும் வலைப்பூவின் நிலைப்பாட்டை (மொக்கைப் பதிவா, சீரியஸா, அரசியலா) தெளிவுபடுத்திக் கொண்டு அவ்வகைப் பதிவர்களை அதிகம் வாசித்து......

இது ஸ்கூல் மாதிரி என்பதால் கொஞ்சம் சீரியஸான போட்டி!



பதிவர் சந்திப்பு எங்கள் மூச்சு



இது பதிவர் சந்திப்புக்கான போட்டி. எப்போதாவது ஒரு நாள் என்று மாதத்துக்கு ஒரு முறை அறிவிக்கப்பட்ட சந்திப்பும், அதுபோக வாரத்துக்கு ஒருமுறை அறிவிக்கப்படாத சந்திப்பும், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மீன் வாங்கப் போகும்போது சந்திப்பும், அதுபோக 24 மணிநேரத்துக்கு ஒருமுறை காபி சாப்பிட வெளியில் செல்லும் போது சந்திப்பும் நடத்த வேண்டும். இதற்கு கோச்சிங் நடத்த கோவி.கண்ணன் & கோ-வை அணுகலாம்.



முக்கியமான பின்குறிப்பு:- மேலே வலதுமூலையில் க்ளிக்கி இட்லிவடையாரின் பதிவில் குறிப்பிட்டுள்ள இளம் வீராங்கனைக்கு ஏதாவது உதவுங்கள். (Thanks: SK)

Wednesday, September 10, 2008

பாதியில் எழுந்து வந்த சினிமாக்கள்!

நான் பதிவெழுத ஆரம்பித்தபோது (ஆஹா.. கிளம்பீட்டான்யா ப்ளேஷ்பேக்கோட...) தினமும் பதிவு போடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொள்ளவில்லை. (அப்படீன்னு ஏன் சொல்றாங்க?) ஆனால் கொஞ்சநாள் ஃபீல்டுல நிக்கறதுக்காக தொடர்ந்து பதிவு போட்டேன். நடுவுல ஒரு நாள் பதிவு போடல. அப்ப ஒருத்தர் என் மின்னஞ்சலுக்கு ‘இன்று நீங்கள் ஏன் பதிவு போடவில்லை? வந்து, பார்த்து ஏமாந்து போனேன்’ என்று மடலனுப்பியிருந்தார். அதுக்கப்புறம்தான் ஆஹா.. இனி விடக் கூடாதுடா-ன்னு தினமும் எழுத ஆரம்பிச்சேன்.(அவர் பேரைச் சொல்லலாம்தான். அப்புறம் அவரை சும்மா விடமாட்டீங்க. பாவம்! பொழைச்சு போகட்டும்!)

கொஞ்சநாள்ல ‘தினமும் எழுதறதுன்னா எதை எழுத?’ அப்படீன்னு ஒரு பயம் வரும்ன்னு நெனைச்சேன். வர்ல! அதுக்குப் பதிலா ‘இதை எழுதவா, அதை எழுதவா’ன்னுதான் தோணிச்சு! ‘எழுத்தாளன்னா எதையும் கூர்ந்து பார்க்கணும், எல்லாவற்றிலும் ஒரு சிறுகதை இருக்கும்’ன்னு சுஜாதா ஒரு தடவை சொல்லப்போக அது அப்படியே சின்ன வயசிலேர்ந்தே பழகினதும் ஒரு காரணம்! (அவரு எழுத்தாளனுக்குத்தானே சொன்னாரு? ஒனக்கு என்ன வந்தது...?)

ஆனா இப்போ எதையாவது எழுதினா, என் பதிவு எதிர்பதிவு ஆக்கப்பட்டு கலக்கறாங்க! சில பதிவுகளைப் பார்க்கும்போது, எனக்கும் கை துடிதுடிக்க நானும் எதிர்பதிவு போடறேன். இதுக்கு நடுவுல ‘தொடர்பதிவு எழுதவாங்க’ன்னு கூப்பிடற நண்பர்களோட கட்டளை வேற! அதுனால பதிவுகளுக்குப் பஞ்சமில்லை.

தொடர்பதிவு எழுதக் கூப்பிட்டா முடிஞ்சமட்டும் நான் தவிர்க்கறதில்லை. என்னை மதிச்சு கூப்பிடறாங்க... அதுக்கு ஒரு நன்றியா பதிவு போட்டுடுவேன்.

சரி... இப்போ விஷயத்துக்கு வருவோம்...

தாமிரா பாதியிலேயே எழுந்து வந்த தமிழ்சினிமாக்கள் மூன்று -ன்னு ஒரு பதிவு போட்டுட்டு நீங்களும் கலந்துக்கணும்ன்னு (நீங்களும்ன்னா நீங்க இல்ல, நான்) கேட்டிருக்கார். அதுல மூணுபடம்தான் இருக்கணும்ன்னு விதிமுறை வேற!

இனி நான் பாதியில் எழுந்து வந்த சினிமாக்கள்:-


ராணுவவீரன்:-

1981ல் வெளிவந்தது இந்தப் படம்! அப்ப எனக்கு 7 வயசு. இந்தப்படத்துக்கு என்னை என் பாட்டி அப்பாகிட்ட சண்டை போட்டு (கிருஷ்ணகுமாரும் வரணும்..) கூட்டீட்டு போனாங்க. உடுமலைப்பேட்டை கல்பனா தியேட்டர்ல படம். நல்ல மசாலா படம். ப்ரஜா ராஜ்யம் கட்சித்தலைவர் சிரஞ்சீவிதான் வில்லன். ஒரு கட்டத்துல ரஜினி, ஊர் மக்கள் பயம்நீங்கி, ஒத்துமையா இருக்க பாட்டுப் பாடிகிட்டு இருக்கார். படம் பார்க்கப் பார்க்க என்னால தாங்க முடியல. அடக்க முடியாத அளவுக்கு.....


வேற வழியே இல்லாம கால்வாசி படம் ஓடறப்ப வெளில வந்து... பாட்டி கூட டாய்லெட் போய் உச்சா போனேன். இது நான் பாதியில எழுந்த படம் இல்ல.. கால்வாசில எழுந்துவந்த படம்! (அப்புறம் போய் உக்கார்ந்து முழுசா பார்த்தேன்..)

இரண்டாவது படம்...

அபூர்வ சகோதரர்கள்.

நான் ஒரு தடவைக்கு மேல் (தியேட்டரில்) பார்த்த படங்கள் நாலே நாலு. தர்மதுரை, அபூர்வ சகோதரர்கள், சந்திரமுகி, தசாவதாரம். ஒவ்வொன்றும் மூன்று முறை. என்னடா சினிமா நடிகை மாதிரி இரண்டு ரஜினி படம், இரண்டு கமல் படம் சொல்கிறான் என்று நினைக்காதீர்கள். ரஜினியை ரசிக்கும் அளவு கமலையும் மிகப் பிடிக்கும் எனக்கு!

அபூர்வ சகோதரர்கள் உடுமலை லதாங்கி தியேட்டரில் பார்த்தேன். என்னா ஸ்க்ரீன் ப்ளே, என்னா டயலாக்ஸ், கமலுக்கு இணையான நாகேஷ் நடிப்பு... இதை கமல் படித்தால் (நெனப்புதான்) கோபப்படுவார்., ‘நாகேஷுக்கு இணையான கமல் நடிப்புன்னு போடுங்க கிருஷ்ணா’ என்பார்!

ச்சான்ஸே இல்லை! அசத்தலான படம். அந்தப் படத்தை இரண்டாவது தடவையாக நண்பர்களுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். இடைவேளை முடிந்து கொஞ்ச நேரத்தில் என் சீட்டருகே ஒரு தடியன் வந்தான்.

“ஏய்.. தம்பி.. நீ என் சீட்ல உட்கார்ந்திருக்க. எழுந்திரு” என்றான்.

உடனே, ‘ஏய்... யாரைப் பார்த்து என்ன சொன்ன?’ என்று வீறு கொண்டு எழுகிற கஷ்டமெல்லாம் படாமல்.. (முடியாததை ஏன் செய்யணும்?)

“ண்ணா.. முன்னால பாருங்கண்ணா. அந்த சீட் காலியா இருக்குல்ல? அதுதான் நீங்க உட்கார்ந்திருந்தது. இது நான் உட்கார்ந்திருந்த சீட்தான்”

“ஏய்.. என்னடா எதுத்து பேசற?” என்றவன் வாயிலிருந்து வந்தது சரக்கு வாடை என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அப்போதே சரண்டராகி எஸ்கேப்பாகி இருக்கலாம். விதி யாரை விட்டது! அவன் அப்ப்டிச் சொன்னபோதும் கேட்காமல்..

“இல்லீங்கண்ணா.. நான் என் ஃப்ரெண்ட்ஸோடதான் வந்திருந்தேன். நீங்க வேணும்னா கேளுங்களேன்” என்று திரும்ப, அவர்களோ கர்ம சிரத்தையாக ஜெயசங்கரை அப்பு கமல் கலாய்ப்பதைப் பார்த்து மூழ்கிப் போயிருந்தார்கள்.

“ஏண்டா.. உன் ஃப்ரெண்ட்சுங்கற... அப்படித் தெரியலியே” என்று அவன் மேலும் என்னைச் சீண்ட, எனக்கு படம் பார்க்கும் ஆவலே வடிந்து போய், ஒரு மாதிரி ஆகிவிட்டது. ஒன்றுமே பேசாமல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து வெளியே வந்து நின்றுவிட்டேன். கொஞ்சநேரத்திலேயே என் நண்பன் ஒருவன் வந்து “டேய்... ஏண்டா வந்துட்ட? அவன் ஏதோ குடிச்சுட்டு பேசறான். இப்ப அவன் சீட்டுக்கு போய்ட்டான். வா” என்றழைத்தபோதும் போகும் மூடு இல்லாமல் தியேட்டர் வாசலில் நின்று படம் முடியும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

மூன்றாவது படம்... என்ன யோசித்தாலும் இல்லை!

தாமிரா கேட்டது படம் பிடிக்காமல் பாதியில் வந்த படங்கள். அப்படி அந்தப் படத்திற்கும் பாதியில் வந்ததாய் நினைவில்லை. சின்ன வயசில் என்ன குப்பைப் படமென்றாலும் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன். பிறகு ரசனையோடு பார்க்கப் பழகியபிறகு பிடிக்காவிட்டாலும் பாதியில் வரமுடிவதில்லை. காரணம்: பைக். பாதியில் வந்தால் பைக்கை எடுக்க விடமாட்டார்கள்.

குருவி, குசேலன் வரை பாதியிலேயே போய்த் தொலையலாம் என்று நினைத்த படங்கள் பல உண்டு. ஆனால் “பைக் குடுக்கலீன்னாலும் பரவாயில்ல, வா.. நடந்தே போகலாம். என்னால முடியலப்பா” என்று அழுதுகொண்டே பார்த்த... இல்லை, உட்கார்ந்திருந்த ஒரு படம்: மெர்க்குரிப் பூக்கள்! பாலகுமாரனின் மாஸ்டர் பீஸ் நாவல் தலைப்பு என்று நம்பிப் போய் ஏமாந்த படம். இதுவரை அதற்கு இணையான த்ராபைப் படத்தைப் பார்க்கவில்லை!