Showing posts with label chess. Show all posts
Showing posts with label chess. Show all posts

Monday, July 27, 2009

அடுத்த கட்டம்

ஞாபகமிருக்கிறதா?

எல்லோர்க்கும் பெய்யும் மழை என்ற என் சென்ற வருடத்து பதிவில் செஸ் வீராங்கனை மோஹனப்ரியா பற்றியும் அவருக்கு நண்பர் அப்துல்லா செய்த உதவிகளையும் குறிப்பிட்டிருந்தேன்.


இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் அவர்?

“இந்த ஜூலை (2009) மாசம் நடந்த இரண்டு போட்டிகளில் - அதாவது - ஜுலை ஐந்தில் நடந்த 16 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியிலும், சென்ற ஞாயிறு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியிலும் மாநிலத்திலேயே முதலாவதாக வந்திருக்கிறார்” என்கிறார் ஜெயச்சந்தர். மோஹனப்ரியாவின் தந்தை.


“அப்துல்லாவின் உதவிகள் உங்களுக்கு பயனுள்ளதாய் இருந்ததா?”

“நிச்சயமாக. நீங்கள் முன்பே குறிப்பிட்டிருந்தது போல டைமர் கருவி கூட இல்லாமல் இரவல் வாங்கித்தான் போட்டிகளில் மோஹனப்ரியா கலந்து கொண்டிருந்தார். அப்துல்லா டைமர் கருவியும், பயிற்சி எடுத்துக் கொள்ள ஒரு மடிக்கணினியும் தந்து உதவினார்.

அதுமட்டுமில்லாமல் சில டோர்னமெண்டுகளில் அவள் கல்ந்து கொள்ளவும் ஸ்பான்சர்ஷிப் செய்தார்”



MOHANAPRIYA. J


"அதற்குப் பிறகு அவர் என்னென்ன ஜெயித்தார்?”

“நாக்பூரில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் தங்க மெடல் வாங்கினார். ஈரானில் நடந்த ஆசிய 14 வயதுக்குட்பட்டோரான போட்டியில் 4வதாக வந்தார். வியட்நாமில் நடந்த - கிட்டத்தட்ட 70 நாடுகள் பங்கேற்ற WORLD YOUTH CHESS CHAMPIONSHIPல் - 14வது இடத்தில் வந்தார்.

இதெல்லாம் போக Women International Master (WIM) ஆக மூன்று Norms பெற்றாக வேண்டும். மோஹனப்ரியா இரண்டு Norms பெற்றிருக்கிறார். இன்னொரு முக்கியமான விஷயம் - தமிழக அளவில் இதுவரை பெண்களில் யாரும் ஒரு Norm கூட பெற்றது கிடையாது. சமீபத்தில் Under 16, Under 19 இரண்டிலும் மாநில முதலாவதாக வந்திருக்கிறார்”


“படிப்பு?”

“அப்போது அவள் பத்தாவது படித்துக் கொண்டிருந்தார். ஆறுமாதம் பள்ளிக்கு செல்ல இயலாது. பல போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டியிருக்கும். பல செஸ் வீரர்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் முகப்பேர் வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளியில்தான் படிக்கிறார். ஆறு மாதம் பள்ளிக்கு போகாததால் ஸ்பெஷல் கோச்சிங் எல்லாம் கொடுக்க வேண்டியதாயிற்று. படிப்புக்கு. அந்த செலவு வேறு. பிறகு மீண்டும் வந்தபோது செஸ் விளையாட்டில் இடைவெளியானதால் வார்ம்-அப் தேவைப்பட்டது. ஆகவே கிராண்ட் மாஸ்டர் கோச்சை ஏற்பாடு செய்து கிட்டத்தட்ட 30000 செலவில் மோஹனப்ரியாவிற்கு பயிற்சி அளித்தேன்”

“இதற்கெல்லாம் பண உதவி?”

“நானாகத்தான் செய்து கொண்டிருக்கிறேன். அவ்வப்போது சில ஸ்பான்ஸர்ஸ் கிடைத்தாலும் நிரந்தரமாக யாரும் ஸ்பான்ஸர் செய்ய முன்வரவில்லை. என் இரண்டாவது மகள் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். அவளது படிப்புச் செலவு, குடும்பச் செலவுகளிடையே மோஹனப்ரியாவின் கனவை காய்ந்துவிடாமல் கொண்டு செல்வது பெரும்பாடாகத்தான் இருக்கிறது

தமிழ்நாடு செஸ் அசோசியேஷன் அவர்களுக்குட்பட்ட அளவில் உதவி செய்துகொண்டிருக்கிறார்கள் என்றாலும் அது போதுவதில்லை. உதாரணத்திற்கு மாநில அளவில் வெற்றி பெற்றால் - அடுத்த கட்டமாக - தேசிய அளவிலான போட்டிகளுக்கு அனுப்ப அவர்கள் ஒத்துழைப்பார்கள். அப்படி செல்லும்போது ஒரு நாளுக்கான படியாக ரூ.100 கொடுப்பார்கள். அது போதாதில்லையா? அதற்காகத்தான் ஸ்பான்சர்சைத் தேட வேண்டியதாயிருக்கிறது”


“தற்போதைக்கு உங்களுக்கு என்ன உதவி தேவைப்படுகிறது?”

“16 & 19 வயதுக்குட்பட்ட போட்டிகளில் மாநில அளவில் முதலாவதாக வந்தார் அல்லவா.. அதன் அடுத்த படியாக அதே பிரிவுகளில் தேசிய அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 25-செப்.5 வரை மும்பையிலும், செப்டம்பர் 15 -25 கேரளாவிலும் நடக்க இருக்கிறது. இடையில் செப் 6-15 நாக்பூரிலும் ஒரு டோர்னமெண்ட் நடக்க இருக்கிறது. அதற்கான கோச்சிங்கிற்காக இருபதாயிரம், மற்றும் போக்குவரத்திற்காக முப்பதாயிரம் செலவாகும் என எதிர்பார்க்கிறோம். இப்போதைக்கு அதுக்கான ஏற்பாடுகளில்தான் இருக்கேன். எங்கிருந்தாவது உதவி வந்தடையும் என்ற நம்பிக்கையிருக்கிறது”

வாழ்க்கை ஒரு சதுரங்கம். நிச்சயமாக உங்கள் மகளை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வீர்கள் ஜெயசந்தர்!




.


Thursday, September 25, 2008

எல்லோர்க்கும் பெய்யும் மழை!




அந்தப்பெண்ணுக்கு அவள் தந்தை ஆறு வயதிருக்கும்போது சதுரங்கம் கற்றுக் கொடுக்கிறார். அவருக்கும் சதுரங்க ஆட்டம் மீது வெறி. பொழுதுபோக்காய் சொல்லிக் கொடுத்தாலும் அபார கவனிப்பும், நொடிப்பொழுது நகர்த்தல்களுமாய் கற்றுக் கொடுத்த தந்தையையே நாலே மாதங்களுக்குள் வென்று விடுகிறாள் அவள். அதற்குப் பிறகு பலமுறை விளையாடும்போது. தன் மகளிடம் தனித்திறமை இருப்பதாய்ப் படுகிறது அவருக்கு. சதுரங்கத்தில் மிகுந்த பற்று கொண்ட அவர் பல நண்பர்களுடன் விளையாடும்போதெல்லாம் உணர்ந்திராத சவால்களை தனது மகளுடன் விளையாடும்போது உணர்கிறார்.

அவர் பெயர் ஜெயச்சந்தர். சென்னைத் துறைமுகத்தில் பணி. சதுரங்கத்தில் தனித்திறமை கொண்ட மூத்த மகளை ஊக்குவிக்க நினைக்கிறார். ‘நம் மகள் என்பதால் எனக்குத்தான் அவள் விளையாடுவது சிறப்பாகத் தெரிகிறதோ’ என்று சந்தேகம் வந்தவர், சதுரங்கத்தில் திறமை வாய்ந்த தனது சில நண்பர்களுடன் தன் மகளை மோத விடுகிறார். அவர்களும் ‘உன் மகளிடம் நல்ல திறமை ஒளிந்துள்ளது’ என்று சான்றளிக்கின்றனர். அப்போது ஒரு நண்பர் மூலமாக சென்னை செஸ் ஃபெடரேஷனில் இருக்கும் ஒருவரது அறிமுகம் கிடைக்கிறது. அவரும் இவரது மகளை வெகுவாகப் பாராட்டி விட்டு, பெரிய அளவில் போட்டிகளில் இவள் கலந்து கொள்ள வேண்டும் என்று ஊக்குவிக்கிறார்.

அந்தப் பெண் தான் மோஹனப்ரியா. சிலதினங்களுக்கு முன் ஒரு போட்டிக்காக இவள் வியட்நாம் செல்ல உதவிகேட்டு பதிவு வெளியாகி, அதன் மூலம் பதிவர் புதுகை அப்துல்லா உதவியளிப்பதாய் சொன்ன அதே மோஹனப்ரியா!

ஆரம்ப வருடங்களில் மோஹனப்ரியாவின் தந்தை எப்படி சமாளித்தார்? பிடித்தமெல்லாம் போக வரும் எட்டாயிரம் ரூபாயில் இவளை எப்படி பல ஊர்களுக்கும், நாடுகளுக்கும் போட்டிக்கு அனுப்புவது? ஊக்குவிக்க பலர் இருக்க, இவள் தந்தை வீட்டை விற்கிறார்! ஆலந்தூரில் தன் சொந்த வீட்டை விற்று, தற்போது வாடகை வீட்டில் குடியிருக்கிறார். இரண்டாவது மகள் மூன்றாம் வகுப்பு படிக்கிறாள்.

இதுவரை ரஷ்யா, ஜார்ஜியா, சிங்கப்பூர், துருக்கி, துபாய் உட்பட பல நாடுகளுக்கும் சென்று சர்வதேசப் போட்டிகள் பலவற்றில் கலந்து கொள்ள அவர் வீட்டை விற்ற பணம் உதவிற்று. சென்ற இடமெல்லாம் மோஹனப்ரியாவுக்கு சிறப்பே. இரு நாடுகளில் தங்கப் பதக்கத்தையும், ஒரு நாட்டில் வெள்ளியும் வென்ற இவர் சென்ற இடமெல்லாம் சிறப்பு பெற என்ன காரணம்?

தேசிய அளவிலோ, (NATIONAL) சர்வதேச அளவிலோ (INTERNATIONAL) போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டுமானால் சதுரங்க வீரர் தனக்கென தனிப் பயிற்சியாளர் வைத்துக் கொள்வது அவசியம். சென்னையில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சர்வதேசப் பயிற்சியாளர் ஒரே ஒருவர்தான். தேசியப் பயிற்சியாளர் ஐந்து, ஆறு பேர் உள்ளனர். சர்வதேசப் பயிற்சியாளருக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. ஆயிரமும், தேசிய அளவிலான பயிற்சியாளருக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. ஐநூறும் கட்டணம் ஆகும். அதாவது ஒரு நாளைக்கு ஒரு மணி நேரப் பயிற்சி என்று வைத்துக் கொண்டாலும் மாதத்துக்கு ரூ. 15000 அல்லது ரூ.30000! எங்கே போவார் அந்தத் தந்தை?

ஆம்! இதுவரை அவள் தனக்கென பயிற்சியாளரே வைத்துக் கொள்ளவில்லை! பல நாடுகளில் போட்டியின் போது இவளுடன் போட்டியிடுபவரின் பயிற்சியாளர் ஒரு சுற்றில் மோஹனப்ரியாவின் நகர்த்தல்களைப் பார்த்து, கிரகித்துக் கொண்டு அடுத்த சுற்றில் தங்கள் மாணவருக்கு சொல்லிக் கொடுத்து தயார்படுத்திக் கொண்டிருக்க பயிற்சியாளர் இல்லாமலேயே பல சவால்களைச் சந்தித்தவள் இவள்! இன்னொரு விஷயம் இரு தினங்களுக்கு முன் வரை சதுரங்கப் போட்டிக்கு முக்கியமாகத் தேவைப்படும் ‘டைமர்’ கூட இந்தப் பெண்ணிடம் கிடையாது. உடன் விளையாடி, சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இருக்கும் (அல்லது) அடுத்த சுற்றுக்காக காத்திருக்கும் சக வீரர்களிடம் டைமரை இரவல் வாங்கித்தான் விளையாடியிருக்கிறாள்! அது மட்டுமல்ல, விளையாடிப் பயிற்சி எடுத்துக் கொள்ள கணினியும் இவளிடம் இல்லை! இத்தனை சங்கடங்கள், சவால்களுக்கிடையில்தான் அந்த த்ங்க, வெள்ளிப் பதக்கங்கள்!

இப்படி விளையாடி இவள் அடைந்திருப்பது ஜீனியர் லெவலில் உலக அளவில் பத்தாவது இடம், இந்தியாவில் ஜூனியர் லெவலில் முதலிடம்! அதுவும் தொடர்ந்து மூன்று வருடங்களாக!

முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் பத்தாவது படிக்கும் இவளுக்கு படிப்பிலும் நல்ல பெயர். இதுவரை முதல் அல்லது இரண்டாவது இடம்தானாம்! இரண்டாவது ரேங்கைத் தாண்டியதில்லையாம்!


இந்த நிலையில் வியட்நாமில் நடைபெறவிருக்கும் சர்வதேசப் போட்டியில் பங்குபெற மோஹனப்ரியா செல்ல வழியின்றித் தவிக்கிறார் அவளது தந்தை. கையிருப்பு எல்லாம் கரைந்துபோக, இதுவரை எவரிடமும் ஸ்பான்சர்ஷிப் கேட்காத இவள் தந்தை கையைப் பிசைந்து நிற்கிறார். நண்பர்கள் மூலம் வலைப்பதிவில் வேண்டுகோள் விடுக்கப் படுகிறது. ‘என் நிறுவனம் மூலம் ஆவன செய்கிறேன்’ என்று உறுதியளிக்கிறார் புதுகை அப்துல்லா!

இதற்கிடையில் தமிழக செஸ் ஃபெடரேஷனில் மோஹனப்ரியா வியட்நாம் செல்ல ரூ.70000/- அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நண்பர் அப்துல்லா தான் ஒத்துக் கொண்டபடி அந்தப் பெண்ணை அழைத்து என்னென்ன தேவைகள் என்று விசாரித்திருக்கிறார்.

அவர்கள் தேவைப் பட்டபடி டைமர் கருவியும், மோஹனப்ரியா விளையாடிப் பயிற்சி பெற மடிக்கணினியும், சதுரங்க விளையாட்டுக்கான மென்பொருட்களும் இரு தினங்களுக்கு முன் வழங்கிவிட்டார்! அதுமட்டுமல்ல, சதுரங்க விளையாட்டின் மூலம் மோஹன்ப்ரியாவுக்கு வருமானம் கிடைக்கும் வரை இந்தியாவுக்குள் எந்த நகருக்கு விளையாடப் போனாலும் அதற்கான செலவுகளை தனது நிறுவனம் ஏற்றுக் கொள்வதாய் அறிவித்திருக்கிறார் அப்துல்லா.

தனது அதிகார எல்லைக்குட்பட்டு இவ்வளவு மட்டுமே செய்ய முடிந்தது என்று வருத்தப்படும் அப்துல்லா, அந்தப் பெண்ணுக்கு ஒரு வருடத்திற்கு சர்வதேசப் பயிற்சியாளர் (மாதம் ரூ.30000/-) நியமிக்க அனுமதி கேட்டு, அடுத்த BOARD DIRECTORS MEETING- க்காக காத்திருக்கிறார்.

சொந்தத் திறமை மூலம் இப்படி ஒரு உயரத்தை எட்டிப் பிடித்த மோஹனப்ரியாவைப் பாராட்டுவதா...

தகுதியுள்ள அந்தப் பெண் வெல்ல வழிவகுக்கும் அப்துல்லாவைப் பாராட்டுவதா..

மனதுக்கு நிறைவாக உணர்கிறேன் அப்துல்லா. வேறொன்றும் இல்லை சொல்ல.