
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் சென்றமுறையே மிகுந்த எதிர்பார்ப்பையும், எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வெற்றியையும் பெற்று இரண்டாவது சீசனுக்கு ரசிகர்களை ஏகத்துக்கும் தயார்படுத்திவிட்டது.
ஐ.பி.எல் தேதிகள் நெருங்கிவரும் வேளையில் பாகிஸ்தானில் இலங்கைவீரர்களின் மீது கொலைவெறித் தாக்குதல் நடைபெற்றது. ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது தேர்தலும் வருவதால் பாதுகாப்பு கொடுப்பதில் சிரமமிருக்குமென்ற கவலையைத் தெரிவிக்கிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் சிதம்பரம்.
ஐ.பி.எல். தலைவர் லலித்மோடி பலவித யோசனைகள், சர்ச்சைகளுக்கிடையே ‘போட்டிகளை இந்தியாவில் நடத்தமாட்டோம். இங்கிலாந்து அல்லது தென்னாப்பிரிக்காவில் போட்டி நடைபெறும். இந்திய ரசிகர்கள் மன்னிக்கவும்’ என்று அறிவிக்கிறார். (நான் உடனேயே மன்னிச்சுட்டேன்ப்பா. எங்க நடந்தாலும் 21 இஞ்ச் டி.விதான் நமக்கு கதி!)
இங்கேதான் ஆரம்பித்தது அரசியல். உடனே குஜராத் தலைவர் நரேந்திரமோடி ‘இது தேசத்துக்கே அவமானம்’ என்றொரு அறிக்கை வெளியிடுகிறார். கோபம் கொண்ட சிதம்பரமும் ‘இதொன்றும் தேசத்துக்கு அவமானமல்ல. 2002 குஜராத் கலவரங்கள்தான் இதுவரை தேசத்துக்கு அவமானமாக இன்றுவரை இருந்து வருகிறது’ என்கிறார்.
காங்கிரஸ் கட்சி விழித்துக் கொண்டு அலசி ஆராய்ந்து.. ‘மோடி இப்படிச் சொல்கிறாரே.. அவரது குஜராத் மாநில டி.ஜி.பி வாக்குப்பதிவுக்கு 15 நாள் முன்னும் 3 நாட்கள் பின்னும் பாதுகாப்புக் கொடுப்பதில் சிரமமிருக்கும்’ என்றாரே.. அதைத்தானே நாங்களும் சொன்னோம்’ என்கிறார்கள்.
இதற்கிடையில் பாதுகாப்பு குறித்து பேசிக்கொண்டிருக்கையில் பி.சி.சி.ஐ. அவசரப்பட்டு போட்டியிடங்களை மாற்றப் போவதாக அறிவித்தது துரதிருஷ்டவசமானது என்று அரசு தரப்பிலிருந்து அறிக்கை வருகிறது.
‘ஏற்கனவே மூன்று முறை ஷெட்யூலை மாற்றியாயிற்று. இன்னும் காத்திருக்க இயலாது. மேலும் எங்களை நம்பி வரும் வீரர்களுக்கு பாதுகாப்பு மிக முக்கியம்’ என்ற லலித்மோடி மத்திய அரசு NO EXTRA TROOPS FOR SECURITY என்றதையும் கர்நாடகா உட்பட சில மாநில அரசுகள் பாதுகாப்பு குறித்து உறுதிப்படுத்தவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
இடையே அருண்ஜேட்லி சிதம்பரத்தை நோக்கி சில விமர்சன அம்புகளை வீசுகிறார். ‘ஒரு பாதுகாப்பான நாடென்றால் எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டாமா? நாளைக்கே கும்பமேளா நடக்கும்.. இத்தனை பேர் வந்தால்தான் பாதுகாப்பு என்பீர்களா? இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் மதக்கூட்டம், விழாக்கள் என்று எத்தனை இருக்கிறது. இது இப்படியே போய் எங்கே கொண்டுபோய் விடும்? மற்ற நாடுகளில் நம் பெயர் பாதிக்கப்படாதா? ஐ.பி.எல். என்பது ஏறக்குறைய நமது உள்ளூர் போட்டி. இதை வெளிநாட்டில் நடத்துவது என் நாட்டில் எனக்குப் பாதுகாப்பில்லை என்பதாகாதா? இது வளர்ந்து இந்தியச் சுற்றுலாவே பாதிப்புக்குள்ளாகாதா’ என்றெல்லாம் அவர் அடுக்கிய கேள்விகளுக்கு ‘ஜேட்லி எப்போதுமே எதையுமே மிகைப்படுத்திப் பேசி அரசியல் செய்பவர். ஐ.பி.எல் வெறும் ஸ்போர்ட்ஸ் அல்ல. மிக்க புத்திசாலித்தனமாக ஸ்போர்ட்ஸும் பிஸினஸூம் கலக்கப்பட்ட கலவை அது. இவ்வளவெல்லாம் உணர்ச்சிவசப்படத் தேவையில்லை’ என்று பதில் சொல்லிவிடுகிறார் சிதம்பரம்.
இறுதியாக....

நேற்று ‘தென்னாப்பிரிக்காவில்தான் ஐ.பி.எல்-2’ என்று அறிவிக்கப்பட்டு விட்டது! (இனி அது IPL ஆ SAPLஆ?)
ஐ.பி.எல். போட்டிகள் முடிந்த பத்தாவது நாளே இரண்டாம் T 20 உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. அதனால் அங்கே வைத்தால் நம் ஆட்களுக்கு பிட்ச், காலநிலைகள் பழகிவிடும் என்று சச்சின் டெண்டுல்கர் சொன்னது போலவே நானும் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் ஏப்ரல், மே-யில் இங்கிலாந்தின் காலநிலைகள் கிரிக்கெட்டுக்குச் சாதகமாக இருக்காது என்பதால் தென்னாப்பிரிக்கா தேர்வு செய்யப்பட்டு விட்டதாக லலித்மோடி அறிவித்து விடுகிறார். ஏப்ரல் 10ல் ஆரம்பிக்க வேண்டிய ஐ.பி.எல், ஏப்ரல் 18ல் ஆரம்பமாகி மே 24ல் முடிவடைகிறது. (எலக்ஷன் ஏப்ரல் 16-மே 13)
59 ஆட்டங்கள் அடங்கிய ஐ.பி.எல்-2 இந்திய தொலைக்காட்சி ரசிகர்களுக்காக இந்திய நேரம் மாலை 4 மணி, மற்றும் 8 மணிக்கு நடைபெறும் வண்ணம் அட்டவணை தயாரிக்கப்படும்’ என்றும் உறுதியளித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் நடைபெறுவதால் என்ன லாப நஷ்டங்கள்? நிச்சயமாக வெளிநாட்டு வீரர்கள், ரசிகர்கள் வருகையால் சுற்றுலாத்துறைக்கு வரும் வருமானம் இழப்புதான்.
வீரர்களுக்கு... யார் ஜெயித்தாலும் அந்த டீமில் இந்தியர்கள் இருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு வெளிநாட்டு மண்ணில் திறனதிகரிக்கும். முக்கியமாக சர்வதேச அணியில் இன்னும் தேர்வாகாத ஐ.பி.எல்-லில் மட்டும் விளையாடும் வீரர்கள் இந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு தங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ளலாம்.
நேரில் சென்று பார்க்கலாம் என்று நினைத்திருந்த பெருந்தலைகளுக்கு இது ஏமாற்றம் தரும் செய்தியாக இருக்கலாம். ஆனால் கிரிக்கெட் ஆட்டத்தை நேரில் கண்ட எனது சில நண்பர்கள் ‘அதோ அங்கபாரு சச்சின். இதோ சேவக்-னு கத்தலாம்டா. ஆனா கிரிக்கெட் ரசிகனா பார்க்கணும்னா டி.விதான் பெஸ்ட்’ என்கிறார்கள். (அதிலும் மண் விழுகிறது. கண்ட கண்ட சேனல்களுக்கெல்லாம் உரிமை கொடுத்து-கொடுத்த காசை வசூலிக்க – அவர்கள் விளம்பரங்களை வாங்கிக் குவித்து ஐந்தேமுக்காலாவது பால் போடப்படும்போதே விளம்பரம்! சில முக்கியமான மாட்ச்களை மறுஒளிபரப்புவதே இல்லை)
இங்கே... கொல்கத்தா ஈடன் கார்டனில் ஷாருக் டான்ஸ் ஆடியபடி உற்சாகப்படுத்த... ஆர்ப்பரிக்கும் கூட்டம். அங்கே ஜோஹன்னெஸ்பெர்க்கில் அவர் ஆடினால் ஆர்ப்பரிக்குமா? இங்கே மும்பையில் ப்ரீத்தி ஜிந்தாவின் கையசைப்புக்கு அலையடிக்கும் கூட்டத்தால் மொகாலி அணிக்கு கிடைக்கும் உத்வேகம் அதே ப்ரீத்தி ஜிந்தா கையசைப்பால் போர்ட் எலிசபெத்தில் கிடைக்குமா? (இது வேணா நடக்கும்!!)
ரசிகர்கள் இதைப் பார்க்கும் கோணம் வித்தியாசமாக இருக்கிறது.
*இந்தியாவில் எல்லா விளையாட்டுகளிலும் புகுந்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் அரசியல் கிரிக்கெட்டிலும் வந்துவிட்டது.
*இனி கிரிக்கெட் சாமானிய இந்தியனுக்கல்லவா? மோடிகளுக்குத்தானா?
*தென்னாப்பிரிக்காவில் சட்டம், ஒழுங்கு மோசமாக இருக்கிறது. சிறு பணத்திற்கெல்லாம் கொலைகள் நடப்பது உங்களுக்குத் தெரியுமா? வீரர்கள் பாதுகாப்பு சரி... போட்டிகளைப் பார்க்கச் செல்லும் ரசிகர்களுக்கு பாதுகாப்பு இருக்குமா?
இப்படி கேள்வி மேல் கேள்வி வந்து விழுந்து கொண்டிருக்கிறது.
இதெல்லாம்.. சச்சினோ, தோனியோ, யுவராஜோ, சேவக்கோ களத்தில் இறங்கி விளாசும் வரைதான். ஆரம்பித்தால்.. எல்லா விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளிதான்.
அந்த முற்றுப்புள்ளி அவர்கள் சிக்ஸ்ர் அடித்து எடுக்கப்படாமல் கூரையில் நிற்கும் பந்தாகத்தான் இருக்கும்.