Showing posts with label Girls. Show all posts
Showing posts with label Girls. Show all posts

Thursday, March 5, 2009

எண்ணிப் பார்க்கிறேன்!

“இரவு இந்த நேரத்திலும் தமிழையும், உன்னை நம்பி வரும் வாசிப்பாளர்களைக் காப்பாற்ற வேண்டியும் நீ ஆற்றும் சேவை என்னைப் புல்லரிக்க வைக்கிறது பக்தா.. என்ன வரம் வேண்டுமென்று கேள்!”

“மஹாப்ரபோ!.. இந்த ஒரு பதிவு மட்டும் என் மனைவி கண்ணில் படாமல் தப்பிக்க வழிசெய்யுங்கள் ஸ்வாமி”

“அப்படியே ஆகட்.... 'ஹலோ... யெஸ்.. மகாவிஷ்ணு ஸ்பீக்கிங்.. ஆங்.. சொல்லு லக்‌ஷ்மிம்மா... இல்ல இங்க பரிசல்காரன்னு ஒருத்தன்... ஆங்... அதான்.. அதேதான்.. இல்லம்மா.. அது வந்து.. நீ சொல்லி கேட்காமயா? ஓக்கே.. ஓக்கே..’ ஸாரி பக்தா... உமா லக்‌ஷ்மியின் பக்தையென்று தெரியாமல் உனக்கு வரமளிக்கவிருந்தேனே... மீ த எஸ்கேப்பூ”

******************************

ஒரு மனிதனை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுவதில் முதலிடம் வகிப்பது இந்த சைட் அடித்தல்தான். கன்னியர் கடைக்கண் பார்வை பட்டால் என்ன ஆகுமென்று சொல்லாத இலக்கியமில்லை.. ஆட்டோக்கள் இல்லை!

அப்படி என்ன இதில் இருக்கிறது?

‘மனங்கவர்ந்த ஒரு பெண்ணைக் கண்டால் மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் ‘அட.. சூப்பர் ஃபிகர்டா’ என்று அட்ரினல் சுரப்பிகளுக்கு அவசர தந்தி கொடுக்க, அந்தச் சுரப்பியிலிருந்து அட்ரினலின் என்ற சமாச்சாரம் பெருக, இதயம் படபடத்து.. வியர்வை பெருக..”

ஹலோ.. சுஜாதா சார்... அதில்ல நாங்க கேட்கறது.. சைட் அடிக்கறதுங்கறது வேற. நீங்க சொல்றது காதலன், காதலியைப் பார்க்கறப்போ.
சைட் அடிக்கறதுல ஒரு சௌகரியம் என்னன்னா.. நாம் சைட் அடிக்கற பொண்ணு மேல நமக்கு எந்த ரெஸ்பான்ஸிபிலிடியும் இருக்கறதில்ல. பார்த்தமா.. போய்ட்டே இருந்தோமான்னு இருக்கும்.

நான் மொத மொதல்ல சைட் அடிச்ச பொண்ணு பேரு நல்லா ஞாபகம் இருக்கு. ஆனந்தி. எப்போ.. அஞ்சாங்க்ளாஸ்ல! ஒரு தடவை அவ, ஸ்கூலுக்கு லீவு போட்டப்போ, என் க்ளாஸ் டீச்சர் ‘நாளைக்கு அவ வர்றப்போ இந்தக் கணக்கைப் போட்டுட்டு வரச் சொல்லு. உன் நோட்டைக் குடு’ என்று என்னிடம் சொன்னார். என் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி அவள் வீடு. வீட்டிற்குப் போனது, கை, கால் கழுவி.. என்னிடம் இருந்த ஒரே ஒரு வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டையை அணிந்து கொண்டு பவுடர் அப்பிக்கொண்டு போய் அவள் வீடு முன் நிற்க வெளியே வந்து ‘வேணாம். நான் சுப்புலக்‌ஷ்மிகிட்ட வாங்கிக்கறேன்’ என்றுவிட்டு மறுபடி வீட்டிற்குள் ஓடிவிட.... ‘இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் பாஸ்’ என்று என்னை உள்ளிருந்து ஒருத்தன் கிண்டலடித்தான்.

சிறிதுகாலம் தொடர்ச்சியாக ஒரே பெண்ணை சைட் அடித்த வரலாறு என்று எடுத்துக் கொண்டால் பஸ் ஸ்டாண்டுக்கருகில் நாங்கள் நண்பர்கள் கூடும் ஒரு கடை வழியே தினமும் செல்லும் ஒரு பெண். மாநிறம். (‘போடா.. அவ கருப்பு. நீதான் மாநிறம்னு சொல்லிக்கற’ என்பான் சசி) எட்டு என்றுதான் பெயர் வைத்திருந்தோம். எட்டு போடுவதுபோல கால்களைப் பின்னிப் பின்னி நடப்பாள். அழகாக இருப்பதாகத் தோன்றியது. எங்கள் இடத்தைக் கடந்து செல்லும்போது அவள் பார்க்கும் பார்வை... இன்னும் கண்ணில்... இல்லை! (மஹாவிஷ்ணு வேற வரம் குடுக்காம எஸ்கேப்பாய்ட்டாரு. எதுக்கு வம்பு!) விவேக்-ரூபலா உதவி இல்லாமலே துப்பறிந்து பெயர் மகேஸ்வரி என்று கண்டறிந்தோம்.

ஒரு சுபயோக சுபதினத்தில் ‘பேசிப் பார்த்தாத்தான் என்ன?’ என்று தோன்ற, தொடர்ந்து போக பஸ் ஸ்டாண்டில் அவள் ஊர் டவுன் பஸ்ஸுக்காகக் காத்திருந்தவளை நெருங்கி.... டக்கென்று கடந்து போய்விட்டேன். ‘என்னடா.. பேசலியா?’ என்ற நண்பனிடம் ‘ப்ச்.. பேசிட்டா இப்போ இருக்கற த்ரில்லும் போயிடும். நானென்ன அவளை லவ் பண்ணவா போறேன்? விடுடா’ என்றேன். அடுத்தடுத்த நாட்களில் அவளை அந்த வழியே காணவில்லை.

எங்கள் நண்பர் நாகராஜின் பாக்யா ஆர்ட்ஸுக்கு ஒரு ஆர்டர் சம்பந்தமாக வந்திருந்த பெண்களில் தீபா என்ற பெண் என்னிடம் உரிமையோடு பேசுவாள். அடிக்கடி தோழிகளோடு வரும் அவளை நல்ல நண்பியாக நினைத்திருந்தேன். என் நண்பன் சசி அவளைக் காதலிப்பதாகச் சொல்ல.. ‘சரிடா.. நான் பேசறேன்’ என்று சமாதானப்படுத்தினேன். ஒரு நாள் அவளிடம் சொல்ல... அவள் ஒன்றுமே சொல்லாமல் போய்விட்டாள். அடுத்த நாள் அவளது தோழி ஒருத்தி வந்து ‘தீபா உங்களை ரொம்ப நாளா சைட் அடிச்சுட்டு இருக்கா. (இப்படித்தான் சொன்னாள்!) நீங்க என்னடான்னா சசிக்காக பேசினீங்களாம்’ என்று சொல்லி ஒரு கடிதத்தைக் கொடுத்தாள். ‘என்னை காதலிக்காவிட்டாலும் பரவாயில்லை. உங்க வண்டில ஒரு நாளாவது போய் காலேஜ் வாசல்ல எறங்கணும்’ என்று கோரிக்கை வைத்திருந்தாள். (டி.வி.எஸ்.சாம்ப்!) என்ன விநோதமான கோரிக்கைடா என்று நினைத்தபடி ‘வண்டில போய் எறங்கணும் அவ்ளோதானே.. இங்க வைக்கறேன். நாளைக்கு அவளை எடுத்துப் போகச் சொல்லு’ என்றேன் நான்.

இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன் ஊருக்கு சென்றிருந்தபோது ஒரு ஹோட்டல் முன் தீபா தனது குழந்தையுடன் நிற்க நான் கொஞ்ச நேரம் பேசிவிட்டு பைக்கில் அவளது கணவன் வர ‘வந்துட்டார். வண்டில போய் உட்காருங்க’ என்றபோது அடக்க முடியாமல் சிரித்துவிட்டார்! ஒருவேளை அவளும் தன் கணவனிடம் சொல்லியிருக்கக்கூடும்!

காலச் சக்கரம் சுழல்கிறது.....

இரண்டு நாட்கள் முன் நடந்த பள்ளி ஆண்டுவிழாவில் என் மகள் தாவணி உடுத்தி ஆடுகிறாள். ‘இவ்ளோ சின்னப் பொண்ணுக்கு இந்த ட்ரஸ்ஸா’ என்றபடி வியக்கிறேன் நான். நாளை அவளோடு நான் நடந்து செல்கையில் கடந்து செல்லும் இளைஞர்கள் அதே கடைக்கண் பார்வையை வீசக்கூடும். எப்படி உணர்வாள் அவள்? எப்படி எதிர்கொள்வேன் நான்? எதுவும் கேட்பாளா என்னிடம்? என்ன சொல்ல வேண்டும் நான்? எத்தனை திரைப்படம் பார்த்து ‘இப்படித்தான் அவங்கப்பன் டீல் பண்ணியிருக்கணும்’ என்று வியாக்கியானம் பேசுகிறேன். என் மகளுக்கு என்ன அறிவுரை தரப்போகிறேன்? பாலகுமாரன் படி.. ருத்ரன் படி.. சொல்லலாம். ‘என்ன ஞானத்தை நீ பெற்றாய்? எனக்குச் சொல்லிக்குடு’ என்று நிற்பாளே அவள்... ‘நீங்களும் இப்படித்தானாப்பா? பொண்ணுங்களை ஃபாலோ பண்ணியிருக்கீங்களா’ கேட்பாளே....

என்ன சொல்ல?

கேள்விகள்.... கேள்விகள்.... காலம் மட்டுமே விடை சொல்லும் கேள்விகள்.