கடந்த வெள்ளிக் கிழமை அதிஷா என்னை வந்து சந்தித்ததை சனிக்கிழமை பதிவாகப் போட்டுவிட்டு அதிஷாவுக்கு கூப்பிட்டேன்.
“நம்ம சந்திப்பை அதிஷாவுக்கு நேர்ந்த கொடுமை-ன்னு பதிவு போட்டுட்டேன் நண்பா” -ன்னேன்.
“எல்லாருக்கும் நான்தான் கிடைச்சனா? இப்பதான் நர்சிம் கூப்ட்டு எனக்கு கல்யாணம்ன்னு பதிவு போடறதா சொன்னார்” என்றார் அதிஷா.
எனக்குள்ளிருந்த குறும்பன் (குசும்பன் ஃப்ரெண்டு!) விழித்துக் கொள்ள... என் செல்லிலிருந்து அடுத்த அழைப்பு நர்சிம்முக்கு போனது.
“பாஸ்... அதிஷாவுக்கு கல்யாணம்ன்னு பதிவு போடறீங்களா?”
“ஆமா கிருஷ்ணா... ஆனா நான் சிஸ்டம்கிட்ட போக கொஞ்ச நேரமாகும். நீங்க எழுதறீங்களா?” என்று கேட்டார் நர்சிம்.
நான் அப்போது ஒரு வீக்லி மீட்டிங்கின் ஆரம்பத்தில் இருந்தேன். (வெளங்கிடும்!)
”எனக்கும் லேட்டாகுமே பாஸ். நீங்க எழுதிடுங்க. கொஞ்ச நேரத்துல நான் அதை சூடான இடுகைல கொண்டு வந்துடறேன்” என்றேன்.
அடுத்த சில மணித்துளிகளில் நர்சிம்மிடமிருந்து அழைப்பு.
காரில், லேப்பின் டாப்பில் லேப்டாப்பை வைத்தபடியே டைப்பி முடித்திருந்தார் மனுஷன்!
“கிருஷ்ணா.. படிக்கறேன் கேளுங்க” என்று முழுப் பதிவையும் படித்தார்.
“செந்தழல் ரவியும் வர்றாரு பாஸ். அதையும் கடைசில மென்ஷன் பண்ணிடுங்க” என்றேன்.
எழுதி, பதிவேற்றி விட்டார்!
கொஞ்ச நேரத்தில், வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சம் வேலையை முடித்துவிட்டு நர்சிம்மின் பதிவில் போய், சீரியஸாக ஒரு பின்னூட்டத்தைப் போட்டு, பார்ப்பவர்கள் உண்மை என்று நினைக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.
நர்சிம்மின் பதிவைத் திறந்தபோது அதில் நான் மிக மதிக்கும் பதிவர்கள் இருவர் அதிஷா திருமணத்துக்கு வாழ்த்துச் சொல்லியிருந்தார்கள். பைத்தியக்காரன் முதல் பின்னூட்டம் போட்டிருந்தார். அதேபோல ஜ்யோவ்ராம் சுந்தரும் பின்னூட்டம் போட்டிருந்தார். (மற்ற பின்னூட்டம் போட்டிருந்தவர்கள் விஷயம் தெரிந்து கிண்டலடித்திருந்தார்கள்)
படித்து கஷ்டமாகப் போய்விட்டது. அதில் ஜ்யோவ்ராம் சுந்தர் உடனே நர்சிம்முக்கு அலைபேசி “என்ன நடக்குது இங்கே” என்று விசாரித்திருக்கிறார். நர்சிம்மும் உண்மையைச் சொல்லிவிட்டார்.
“இதெல்லாம் பேசி வெச்சுட்டுதான் பண்றோமுங்க”என்று.
உடனே ஜ்யோவ்ராம் சுந்தர் சாரும் (அதாவது ஜ்யோவ்ராம் சுந்தரை ‘சார்’ங்கறேன். வேற ‘சாரு’ம் இல்ல!) “அப்படியா, இருங்க நானும் கும்மறேன்” என்று என்னைத் திட்டி ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டார்.
நானும் என் வாழ்க்கையில் முதல் முறையாக ஜ்யோவ்ராம் சுந்தர் சாருக்கு அலைபேசி “தப்பா நெனைச்சுக்காதீங்க தலைவா” என்று சொல்லிவிட்டேன். எத்தனையோ நாளுக்கு முன் அவரது அலைபேசி எண் கிடைத்திருந்தாலும் ‘அவ்ளோ பெரிய மனுஷன்கிட்ட ஒரு மொக்கைச்சாமி என்ன பேசிவிட முடியும்’ என்று பேசவில்லை. முதல் பேச்சே இப்படி அமைந்துவிட்டது!
அன்று (சனிக்கிழமை) இரவு ஒரு வெளிநாட்டு அழைப்பு. என் இனிய நண்பர் வெற்றிகரமான மகிழ்ச்சியானவர் அழைத்தார்.
“பரிசல்... இப்போ நான் உங்க ஃப்ரெண்டுன்னு சொல்லிக்கறதுல பெருமைப் படறேன்” என்றார்.
“அப்படியா? இப்படி நீங்க ஃபீல் பண்ர அளவுக்கு என்ன ஆச்சு?” என்றேன்.
“அதிஷாவோட காதல் திருமணத்துக்கு நீங்க உதவுறீங்களே.. அதைச் சொன்னேன்” என்றார்.
கொஞ்ச நேரம் புரியாமல் முழித்து, அடடே' என்று சுதாரித்து ஸ்க்ரீன் ப்ளேவில் செட்டிலாகி.. “அதுக்கென்ன வி**? (பேரைச் சொல்லக்கூடாது!) நான் கூட லவ் மேரேஜ்தான். உதவ மாட்டேனா?”
“எப்ப கல்யாணம்?”
“நாளைக் காலைல 7.30 - 9. பொண்ணு இங்க என் வீட்லதான் இருக்காங்க, பேசறீங்களா? வாழ்த்து சொல்லுங்க” என்றேன். (‘சரி.. லைன் குடுங்க’ என்றால் கடகடவெனச் சிரித்து உண்மையைச் சொல்லிவிடலாம் என்ற நினைப்பில். ஆனா நான் இன்னும் இ.வா-வாகத்தான் இருப்பேன் என்று உறுதியாக நின்றால் நானென்ன செய்யமுடியும்?)
“இல்ல பரிசல். நான் இப்போ ஒரு மார்க்கமா இருக்கேன். காலைல கரெக்டா 9.30 மணிக்கு கூப்ட்டு வாழ்த்தறேன்” என்றார்.
அடுத்த நாள் இன்னொரு பூப்போன்ற வெள்ளை மனதுக்காரர் (இதுக்கு நீ பேரையே சொல்லித் தொலைச்சிருக்கலாம். நீயும் உன் கிசுகிசுவும்..) ஃபோன் செய்தார். அவருக்கு உண்மை தெரியும் என்று நினைத்தேன். அவர் எப்போதுமே கொஞ்சம் ஜாலியாகப் பேசக்கூடிய பேர்வழி. சீரியஸாக பேச ஆரம்பித்தார். ‘ஓஹோ.. உண்மையைத் தெரிஞ்சுகிட்டு என்கிட்டயே நடிப்பா’ என்று நினைத்துக் கொண்ட நான் ஸ்க்ரீன் ப்ளேவை பக்காவாக மெய்ன்டெய்ன் செய்து பேசி முடித்தேன்.
அதுக்கப்புறம் அடுத்த நாள் அதிஷாவோட தங்கை மகள்கள் காதுகுத்துக்கு நானும். செந்தழல் ரவியும் போறப்ப ஈரோட்டிலிருந்து கார்த்திக் கூப்ட்டார். அவர்கிட்ட “பொண்ணு மாப்பிள்ளை முன்னாடி கர்ல போறாங்க. நாங்க பின்னாடி போய்ட்டிருக்கோம்”ன்னேன். முடிஞ்சு கீழ வந்தப்ப எனக்கு நிறைய மிஸ்டு கால் அலர்ட்ஸ் இருந்தது. அதுல ரெண்டு, மூணு அந்த வெளிநாட்டுப் பதிவர்கிட்டேர்ந்து. அன்னபூர்ணால சாப்பிட்டுடு அவருக்கு ‘கூப்டுங்க’ன்னு மெசேஜ் குடுத்தேன். கூப்ட்டாரு.
“அதிஷாவுக்கு லைன் குடுங்க. வாழ்த்திக்கறேன்:” ன்னாரு. அதிஷாகிட்ட பேசிட்டு மறுபடி என்கிட்ட “என்னங்க.. அவரு கல்யாணம் முடிஞ்சுடுச்சான்னா காதுகுத்துக் கல்யாணம்-ங்கறாரு?” ன்னு பாவமா கேட்டாரு. ஒருத்தரை எவ்ளோ நேரம்தான் கலாய்க்கறதுன்னு நானும் உண்மையச் சொல்லீட்டேன்!
யோசிச்சுப் பார்த்தா, இது தப்போன்னு மனசுக்கு ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு. முக்கியமா ஏமாந்த ரெண்டு, மூணு பேர் நம்ம ஃப்ரெண்ட்ஸ்தான். கெட்ட வார்த்தைல திட்டினாலோ, திரும்பி நில்லுடா’ன்னு சொல்லி முதுகுல நாலு போடு போட்டாலோ நானும், நர்சிம்மும் வாங்கிக்குவோம். அவங்களும் உரிமையோட அடிப்பாங்க...
ஆனா பைத்தியக்காரன் மாதிரி ஒரு மதிப்புமிக்க பதிவர், கும்மி, மொக்கையெல்லாம் தெரியாத ஒரு நல்ல மனுஷன் மனசு ‘என்னடா.. இப்படியெல்லாமா விளையாடறது’ன்னு இதுனால கஷ்டப்பட்டிருக்குமோ நினைக்கறப்ப ஒரு மாதிரி ஆய்டுச்சு. ரெண்டு நாளா இதுக்கு ஒரு மன்னிப்பு பதிவு போடணும்னு கெடந்து துடிக்குது.
இது ஏதோ ஜாலிக்காக சம்பந்தவங்கிட்ட அனுமதி வாங்கிப் பண்ணினதுதான்னாலும், நேரடியாகவும், மறைமுகவாகவும் இதுனால எங்களைத் தப்பா நெனைச்ச எல்லார்கிட்டயும் நானும், நர்சிம்மும் மன்னிப்பு கேட்டுக்கறோம். கொலை செஞ்சவனை விட, உடந்தையா இருக்கறவனுக்குதான் தண்டனை அதிகம்-ங்கறா மாதிரி.. நானே பதிவு போட்டு ஸாரி கேட்டுக்கறேன். ஏன்னா, எனக்கு நல்லா தெரியும்.... நர்சிம் கிட்ட ‘இதெல்லாம் வேணாம் பாஸ்’ன்னிருந்தா அவரு கேட்டுகிட்டிருப்பாரு. நல்ல மனுஷன். தப்பு என் மேலதான்.
பி.கு:-
பதிவு ரொம்ப சீரியஸா முடியற மாதிரி இருக்கறதால் ஒரு மேட்டரைச் சொல்லி, முடிச்சுக்கறேன். ‘இந்த சங்கடத்தை ஒரு வீக் எண்ட்ல ரூம் போட்டு தீர்த்துக்கலாம் கிருஷ்ணா’ன்னு நர்சிம் வாக்குறுதி குடுத்திருக்காரு. அதுக்காகவே விரைவில் சென்னை வரும் எண்ணம் உண்டு!