Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

Sunday, March 8, 2009

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா !!!

1869ல் பிரிட்டிஷ் அமைச்சர் ஜான் ஸ்டுவர்ட் மில் என்பவர் பார்லிமெண்டில் பெண்கள் ஓட்டளிக்க உரிமை கோரி ஒரு மனுவைச் சமர்ப்பித்தார். 1893 செப்டம்பர் 19ல் முதன்முதலாக பெண்களுக்கு ஓட்டளிக்கும் உரிமையைத் தந்த நாடு... நியூசிலாந்து.

1910ல் பணிக்குச் செல்லும் பெண்களுக்கான சர்வதேச மாநாடு கோபன்ஹகெனில் நடைபெற்றது. ஜெர்மனியின் 'சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி'யின் மகளிர் அணித்தலைவியான க்ளாரா ஜெட்கின் (CLARA ZETKIN) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் ஒரு யோசனையைத் தெரிவித்தார். பெண்கள் தங்கள் உரிமை கோர சர்வதேச முழுதும் ஒரு தினத்தை மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். 17 நாடுகளிலிருந்து அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் அந்தத் திட்டத்தை ஒருமனதார வரவேற்றனர்.

தொடர்ந்த ஆண்டில் (1911) க்ளாரா ஜெட்கினால் 19 மார்ச்சில் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டது. (ஆம்.. மார்ச் 19.. எட்டு அல்ல!)

ஜெர்மனில் The Vote for Women மற்றும் ஆஸ்திரேலியாவில் Women’s Day என்ற பத்திரிகைகள் துவங்கப்பட்டு பெண்கள் உரிமைகள், பாராளுமன்றத்தில் பெண்கள், உட்பட பல கட்டுரைகள் எழுதின. எல்லாப் பத்திரிகைகளுமே பெண்களுக்கு பாராளுமன்றத்தில் தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தின.

1911ல் சர்வதேச மகளிர் தினத்திற்கு கிடைத்த வெற்றி.. எட்டுத் திக்கும் பரவியது.

அந்த வெற்றியைத் தொடர்ந்து 1913 முதல் மகளிர் தினத்தை மார்ச் 8-க்கு மாற்றியமைத்து.. இன்றளவும் மார்ச் எட்டு, சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

*****************************

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா !!!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா !!!
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பேரும் ஸதியென்ற நாமமும்.

அன்பு வாழ்கென் றமைதியி லாடுவோம்
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்
துன்பந் தீர்வது பெண்மையி னாலடா
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்

வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
கைகள் கோர்த்துக் களித்துநின் றாடுவோம்.

பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயின் பிறகொரு தாழ்வில்லை;
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காத லின்பத்தைக் காத்திடு வோமடா!

சக்தி யென்ற மதுவையுண் போமடா!
தாளங் கொட்டித் திசைகள் அதிரவே,
ஒத்தி யல்வதொர் பாட்டும் குழல்களும்
ஊர்வி யக்கக் களித்து நின்றாடுவோம்.

உயிரைக் காக்கும், உயிரினைச் சேர்த்திடும்
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்
உயிரி னுமிந்தப் பெண்மை யினிதடா !!!
ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே.

“போற்றி தாய்” என்று தோள் கொட்டி யாடுவீர்
புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே;
நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே.

“போற்றி தாய்” என்று தாளங்கள் கொட்டடா!
“போற்றி தாய்” என்று பொற்குழ லூதடா!
காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே.

அன்ன மூட்டிய தெய்வ மணிக்கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்;
கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும்
கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம்!

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா !!!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா !!!

- மகாகவி பாரதி.



சர்வதேச மகளிர்தின வாழ்த்துகள்!