Showing posts with label இரவல். Show all posts
Showing posts with label இரவல். Show all posts

Wednesday, March 11, 2009

புத்தகம் இரவல் கொடுப்பதால் வரும் பதினோரு சங்கடங்கள்!






1) நிச்சயமாக திரும்பிவரும் என்ற மூடநம்பிக்கையுடனோ, திரும்பவரவே வராது என்ற நம்பிக்கையுடனோதான் புத்தகத்தை இரவல் கொடுக்க நேரும். இரண்டுமே கொடுப்பவருக்கு நன்மை பயக்கக் கூடியதல்ல.

2) புத்தகத்தை இரவல் கொடுத்த ஓரிரு நாட்களில் அந்தப் புத்தகத்தை ஏதாவது குறிப்புக்காகவோ, தகவலுக்காகவோ தேட நேர்கிறது.

3) ‘எந்தப் புத்தகத்தையுமே இரண்டொரு நாளில் படித்து விடுவேன். குடுங்க. படிச்சுட்டு மேக்ஸிமம் ஒரே வாரத்துல குடுத்துடுவேன்’ – இது இரவல் வாங்கும் எல்லாரும் சொல்லும் வாசகம். ஆனால் கவிஞர். வாலியின் டெம்ப்ளேட் வரிகளைப் போல, இரவல் வாங்குபவர்களுக்கு எப்போதுமே மாதங்கள் வாரங்களாக, யுகங்கள் கணங்களாகத்தான் இருக்கின்றன.

4) இரவல் வாங்கியவர் பெயர் மிஸ்டர்.எக்ஸ் என்று வைத்துக் கொண்டால், வாங்கிய ஓரிரு வாரங்களுக்குத்தான் அவர் மிஸ்டர்.எக்ஸ் ஆக இருக்கிறார். அதற்குப் பிறகு அவர் ‘என்கிட்ட அந்த சுஜாதா புக்கை வாங்கீட்டு போனவர்’ என்றும், இன்னும் கொஞ்ச நாளில் ‘புக்கை வாங்கீட்டு திருப்பியே தராதவர்’ என்றும்தான் அவர் பற்றிய பிம்பம் மனதில் படிகிறது.

5) நாம் இரவல் கொடுத்த புத்தகத்தை நம்மிடம் இரவல் வாங்கியவரிடம், இன்னொருவர் இரவல் கேட்கும்போது ‘நம்மளே இரவல் வாங்கினதாச்சே.. குடுக்கலாமா வேண்டாமா’ என்ற குழப்பத்திற்கு ஆளாக்குகிறோம். அல்லது அவர்கள் இரவல் குடுத்தால் ‘இரவல் வாங்கியதை இரவல் கொடுத்த’ பாவத்திற்கு அவரை ஆளாக்குகிறோம்.

6) வாங்கிய புத்தகத்தில் ஏதாவது அடிக்கோடிடுவது, கிறுக்குவது போன்றவற்றை செய்யும் சுதந்திரம் இல்லாமல் வாங்கியவரை தவிக்க வைக்கிறோம். அல்லது அப்படி அவர் செய்தால் ‘இப்படிப் பட்டவருக்குக் கொடுத்தோமே’ என்ற தவிப்புக்கு நம்மை ஆளாக்கிக் கொள்கிறோம்.




7) உண்மையாகவே அந்தப் புத்தகத்தை வாங்கியவர் தொலைத்து விட்டால், அவர் அப்படிச் சொல்லும்போது அதை நம்ப முடியாமல் அவரைப் பற்றி நாம் தவறாகப் புரிந்து கொள்ள நேர்கிறது. உண்மையாகவே தொலைக்காமல் அவர் அப்படிச் சொல்வதானால்... (மீண்டும் 6வது பாராவின் கடைசி வரிகளைப் படிக்க....)

8) இரவல் குடுத்து திரும்ப வராத சோகத்தில் நாமிருக்கும்போது, வேறொரு நண்பர் இரவல் கேட்க, சூடு கண்ட பூனையாய் அவருக்கு நாம் இரவல் கொடுக்க மறுக்க, அவர் நம்மைத் தவறாகப் புரிந்து கொள்ள ஏதுவாகிறது.

9) நண்பனுக்குப் பணம் கொடுத்தால் நட்பு, பணம் இரண்டையும் இழக்க நேரும் என்று பெர்னாட்ஷா சொன்னது போல, நண்பனுக்குப் புத்தகம் கொடுத்தால் அந்தப் புத்தகம், அதற்கான பணம், நட்பு மூன்றையுமே நாம் இழக்க நேர்கிறது.

10) இரவல் வாங்கினால் உடனே படிக்க வேண்டும் என்ற நினைப்பு வருவதில்லை. அதே காசு கொடுத்து வாங்கியிருந்தாலாவது, அதன் மதிப்புணர்ந்து நிச்சயமாகப் படிப்பார்கள்... (அல்லது அப்படி நாம் நினைத்துக் கொள்கிறோம்!)

11) நல்ல புத்தகம் என்பதால்தான் பகிர்ந்து கொள்கிறோம். அந்த நல்ல புத்தகத்தை இரவலாகக் கொடுப்பதால் அந்த நல்ல புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கு கிடைக்கும் ராயல்டிக்கு நாம் தடையாக இருக்கிறோம்.

டிஸ்கி: இந்தப் பதிவில் வரும் எதுவும் யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிடுவதல்ல என இதன்மூலம் உறுதியளிக்கிறேன்!