Friday, October 3, 2014

கிருஷ்ணகதா 03-10-2014 - மதுப்பழக்கம் கேடானது எப்படி?

“புராணகாலத்துல எல்லாம் சோம பானம் சோம பானம்னு சொல்லப்படுது. முனிவர்கள், தேவர்களெல்லாம் குடிச்சதா படிச்சிருக்கேன், இந்த மதுப்பழக்கம் எப்டி கெட்ட பழக்கம்னு ஆச்சு?’ – ஃப்ரெண்ட் கேட்டாப்ல. அதுக்காகத்தான் இந்தக் கதை.

மொதல்ல கேரக்டர்ஸை தெளிவா உள்வாங்கிக்கோங்க. அப்ப படிக்கறப்ப குழப்பம் இருக்காது. மொத்தம் நாலே கேரக்டர்ஸ்.

1. அசுரர்களின் குரு சுக்கிராச்சார்யார்.  2. அவர் மகள் – தேவயானி
3. தேவர்களின் குரு பிரகஸ்பதி.  4. அவர் மகன் – கசன்.

மனப்பாடம் பண்ணீட்டீங்களா? சரி.

தேவர்கள் – அசுரர்கள் போர் நடந்துட்டிருச்சு. அசுரர்கள்ல இறந்தவங்களை, சுக்கிராச்சார்யார் டெய்லி உயிர்ப்பிச்சுட்ட்டே இருந்தார். தேவர்கள், தங்களோட குருகிட்ட போனாங்க.

“ஹல்லோ குருஜி, வாட்டீஸ் திஸ்”ன்னு கேட்டாங்க.

அதுக்கு பிரகஸ்பதி, ‘வாட் கேன் ஐ டூ மை பாய்ஸ்? சுக்கிராச்சார்யார்க்கு, இறந்தவர்களை உயிர்ப்பிக்கற சஞ்சீவினி மந்திரம் தெரியும். எனக்கு தெரியாதே”ன்னாராம்.

உடனே தேவர்கள், ‘உங்க பையன் கசன் இருக்கான்ல? அவனை சுக்கிராச்சார்யார்கிட்ட சிஷ்யனா அனுப்ச்சு சஞ்சீவினி மந்திரத்தைக் கத்துட்டு வரச் சொல்லுங்க”ன்னாங்க. அதன்படி, பிரகஸ்பதி, தன் மகன் கசனை, சுக்கிராச்சார்யார்கிட்ட சிஷ்யனா சேர்த்திவிடறார்.

கசன், சஞ்சீவினி மந்திரத்தைக் கத்துக்கத்தான் தன்கிட்ட சிஷ்யனா வந்திருக்கான்னு சுக்கிரருக்கு தெரியும். அவரும், குருகுல வழக்கப்படி சேர்த்துகிட்டு எல்லா வேலையும் வாங்கீட்டிருக்கார். அந்த மந்திரத்தை சொல்லிக் குடுக்கறபாட்டையே காணோம்.

இப்ப, அசுரர்களுக்கு இந்த மேட்டர் கேட்டு கிலியாகிடுது. எங்க சுக்கிராச்சார்யார் சொல்லிக் குடுத்துடுவாரோன்னு பயப்படறாங்க. சுக்கிரர், ‘அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். பயப்படாதீங்க’ன்னுடறாரு. ஆனாலும் அசுரர்களுக்கு மனசு கேட்கல. ஆடு மேய்க்கப்போன, கசனைக் கொன்னு நாய்க்கு உணவாப் போட்டுடறாங்க.

இங்க ஒரு ட்விஸ்ட். சுக்கிராச்சார்யாரோட மகளான தேவயானிக்கு கசன் மேல ஒன் சைட் லவ்வு. சாயந்திரமாச்சு, கசனைக் காணோம்னு கவலையோட அப்பாகிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்றாங்க. அவரு ஞானதிருஷ்டில பார்த்து, கசன் இறந்துட்டதைத் தெரிஞ்சுக்கிறார்.

தேவயானி அழ, மகள் மேல பாசமா இருக்கற சுக்கிரர், ‘டோண்ட் வர்ரிம்மா.. வெய்ட்டீஸ்’ன்னுட்டு சஞ்சீவினி மந்திரம் சொல்லி கசனை உயிர்ப்பிக்கிறார். கசனும், நாய் வயித்தைக் கிழிச்சுட்டு உயிரோட வந்துடறான்.

அசுரர்களுக்கு கோவம் வருது. ரெண்டாவது தடவையா கசனைக் கொன்னு கடல்ல போட்டுடறாங்க. மறுபடி தேவயானி கண்ணீர். எகெய்ன் மந்திரம். கசன் எண்ட்ரி.

அசுரர்களுக்கு கடுப்பாவுது. இந்தாள் என்ன இப்டியே பண்றாருன்னு மூணாவது வாட்டி கசனைக் கொன்னு, அவன் அஸ்தியை சுக்கிராச்சார்யார் தினமும் குடிக்கற சோமபானத்துல கலந்துடறாங்க.

அப்பல்லாம் டெய்லி கொஞ்சம் சோமபானம் சாப்டுட்டு தூங்குவாங்க. சுக்கிராச்சார்யாரும் அதன்படி லைட்டா சாப்டுட்டு தூங்கப்போறார்.

கசன், இன்னும் வர்ல. தேவயானிக்கு டென்ஷனாவுது. அப்பாட்ட மறுக்கா கம்ப்ளெய்ண்ட் பண்றாங்க. வழக்கம்போல தன் ஞா.தி-ல கசன் எங்கன்னு பார்க்கற சுக்கிரருக்கு ஷாக்!

கசன், தான் குடிச்ச சோமபானம் மூலமா, தன்னோட வயித்துக்குள்ளதான் இருக்கான்னு தெரியுது. இப்ப அவனை உயிர்ப்பிச்சா,  வயிறு பொளந்து, இவர் இறக்க நேரும். தேவயானிகிட்ட ‘வாட் டு டூ?’ன்னு கேட்கறாரு.

“டாடி, எனக்கு நீங்களும் வேணும். அவரும் வேணும். ப்ளீஸ்..”ன்னு கெஞ்சறாங்க தேவயானி.

’நாம சொல்லித்தரக்கூடாதுன்னு நெனைச்சோம். இப்ப அசுரர்களோட துர்புத்தியே, கசனுக்கு சஞ்சீவினி மந்திரத்தைக் கத்துக்க வைக்குது’ன்னு நெனைச்ச சுக்கிராச்சார்யார், வெளில இருந்தபடி வயித்துக்குள்ள இருக்கற கசனை உயிர்ப்பிச்சு, சஞ்சீவினி மந்திரத்தை சொல்லிக்குடுத்து, ‘என் வயித்தக் கிழிச்சு வந்து, அப்பறம் இதே மந்திரத்தைச் சொல்லி என்னை உயிர்ப்பி’ங்கறார். அதன்படியே நடக்குது.

வெளில வந்த கசன், தேவயானியோட லவ்வை, ‘உங்கப்பா வயித்துல இருந்து வந்ததால நான் உன் சகோதரன் அல்லவா? ஸாரிம்மா”ன்னு ரிஜெக்ட் பண்ணது கிளைக்கதை. மெய்ன் மேட்டருக்கு வருவோம்.

சுக்கிராச்சார்யார் உயிர்த்து எழுந்ததும், அந்த சோமபான பாட்டிலைப் பார்க்கறார். “இந்தக் கெரகத்தைக் குடிச்சதாலதான் எதிரிப் படையோட குரு மகனுக்கு சஞ்சீவினி மந்திரத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டி வந்தது? இதக் குடிக்கலைன்னா இவ்ளோ டெலிகேட் பொஸிஷன் வந்திருக்காதுல்ல?”ன்னு யோசிச்சு,

“இனி இந்த சோமபானத்தைக் குடிக்கறவங்க, தன் மதியிழந்து போகக் கடவது”ன்னு சாபம் விட்டுடறாரு!

அதுக்கப்பறம்தான் மதுன்னா, கெட்டதுன்னு ஆச்சாம்! அக்காங்ப்பா!

**

3 comments:

Unknown said...

Excellent write up. This form of writing will attract the younger generation.

Unknown said...

Super

krish said...

Ha ha vety funny